செவ்வாய், 3 ஜூலை, 2018

வீரமணி :கல்வியில் ஆர்எஸ்எஸ்-ன் 11 அம்சத் திட்டம் இந்துத்துவ மயமாக்கும் சதி

tamilthehindu :கல்வியில் ஆர்எஸ்எஸ்-ன் 11 அம்சத் திட்டம் என்பது கல்வியை
இந்துத்துவ மயமாக்கும் சதி என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “மத்திய கல்வித் துறையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொடுங்கரம் ஆக்டோபஸ் - எட்டுக்கால் பிராணி போல் ஒவ்வொரு நாளும் நீண்டு கொண்டே போகிறது. ஏற்கெனவே குருகுல முறை என்ற பெயரில் சமஸ்கிருதம், வேதங்கள் படிப்பை தனியாரிடம் படித்ததாக, தானே சான்றிதழ் வழங்கி, உடனடியாக பத்தாம் வகுப்பு சேர்ந்து 12 ஆம் வகுப்புவரை படித்து, உடனே வேலைக்குப் போகும் வண்ணம் கல்வித் திட்டத்தைத் திணிக்கும் முயற்சியில் மத்திய பாஜக ஆட்சி ஈடுபட்டது. குலக்கல்வித் திட்டத்தைவிட பல மடங்கு ஆபத்தான சமஸ்கிருத, வேத மய ஆரம்பக் கல்வித் திட்டம் ஒன்று உருவாவதை எதிர்த்து, கருவிலேயே அதனை அழித்து, தடுத்துக் காப்பாற்றிட வேண்டிய கடமை அனைத்து முற்போக்காளர்கள், சமதர்மவாதிகள் கல்வியாளர்களின் பெரும் பொறுப்பாகி வரும் நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) தி எகனாமிக் டைம்ஸ் நாளேட்டில் வந்துள்ள செய்தி மேலும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

ஆர்எஸ்.ஸ் உருவாக்கியுள்ள 11 அம்ச கல்வித் திட்டம்
பகிரங்கமாகவே ஆர்எஸ்எஸ் அமைப்பினால் உருவாக்கப்பட்ட 11 அம்ச செயல் திட்டம், கல்வியை இந்திய மயமாக்குதல் என்ற திட்டத்தை, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறைக்கு அனுப்பியுள்ளது. வார்தாவில் உள்ள மகாத்மா காந்தி இண்டர்நேசனல் இந்தி யுனிவர்சிட்டியில் கூடி முடிவெடுத்துள்ளது. ஆர்எஸ்எஸ்-ன் துணை அமைப்புகளில் ஒன்றான பாரதிய ஷிக்ஷான் மண்டல் மத்திய கல்வி அமைப்புக்கு அனுப்பியுள்ளது.
தனது 11 அம்சத் திட்டத்தை, ஆர்எஸ்எஸ் தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக் பிறந்த நாளான அக்டோபர் 11 ஆம் தேதி முதல் இந்தப் புதிய கல்வித் திட்டத்தை அமல்படுத்த ஆவன செய்ய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை முன்வரவேண்டும் என்று உத்தரவு போடும் பாணியில் செய்திகள் வந்துள்ளன.
தற்போது ஐரோப்பிய, அமெரிக்க முறையில் கல்வி இருப்பதை அறவே மாற்றிவிட்டு, நமது புராதன சாஸ்திரங்களையே பாடங்களாக உயர் கல்வித் துறையில் பல்கலைக்கழகங்களில் போதிக்கத் திட்டமிட்டு அதற்கேற்ப பாடத் திட்டங்களை மாற்றி அமைக்க ஆர்எஸ்எஸ் துணை அமைப்பான பாரதிய ஷிக்ஷான் மண்டல் உத்தரவிடும் பாணியில் பேசுகிறது.
1. சாணக்கிய நீதி சாஸ்திரம்
2. பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம்
3. சுக்ரநீதி சாஸ்திரம் போன்றவற்றையே சொல்லிக் கொடுக்க வேண்டும்.
சமஸ்கிருத மயம், இந்துத்துவ - வர்ணாசிரம மயம், சாணக்கியனின் அர்த்த சாஸ்திரத்தில் சாதி அடிப்படையில், மனுதர்ம சாஸ்திரத்தின் மறு பதிப்பாகவே பல பகுதிகள் உள்ளன என்பது அதனைப் படித்தவர்களுக்குப் புரியும். எனவே, மனுதர்ம யுகத்திற்கு நாட்டை மீண்டும் திருப்பும் வகையில் இந்து ராஜ்ஜியத்தை - ராஷ்டிரத்தை அமைக்கவே இந்த அவசரக் கல்வி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சூழ்ச்சி ஒன்றையும் மிகவும் தந்திரமாகப் புகுத்தியுள்ளார்கள்.
விஷ உருண்டையில் சர்க்கரைப் பூச்சு
நாராயணகுரு சாதி வேற்றுமை பற்றிக் கூறியதையும், ஜோதிபா பூலே கூறிய தொழிலாளர் சீர்திருத்தங்களையும் கூட பாடத் திட்டத்தில் சேர்த்து ஏதோ ஒன்றை ஒப்புக்கு விஷ உருண்டைக்குச் சர்க்கரைப் பூச்சு பூசி, இளைய தலைமுறையிடம், பிஞ்சு உள்ளங்களிடம் ஒரு பார்ப்பன - வைதீக - வேதிய - பாடத் திட்டங்கள் என்னும் நஞ்சை உண்ணக் கொடுக்க முனைகிறார்கள். இத்திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்” என கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை: