வியாழன், 5 ஜூலை, 2018

டெல்லி தற்கொலை: சிசிடிவி காட்சியில் உறுதியானது!

டெல்லி தற்கொலை: சிசிடிவி காட்சியில் உறுதியானது!மின்னம்பலம்: டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உட்பட 11 பேர், வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மூட நம்பிக்கையால்தான் அவர்கள் உயிரிழந்ததாக சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
டெல்லி புராரி பகுதியின் சாண்ட் நகரில், கடந்த ஞாயிற்றுக் கிழமை (ஜூலை 1) ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையிலும், 75 வயது மூதாட்டி, ஒருவர் அறையில் கழுத்து இறுக்கப்பட்ட நிலையிலும் பிணமாக கிடந்தனர். இந்தச் சம்பவம் கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தற்கொலை செய்துகொண்ட இந்தக் குடும்பத்தினர் வித்தியாசமான வழிபாட்டுப் பழக்க வழக்கங்களையும், மூடநம்பிக்கைகளையும் கடைப்பிடித்துவந்துள்ளனர். அவர்கள் வீட்டுக்குள்ளேயே பல சிறிய கோயில்களைக் கட்டிவைத்து வழிபட்டுவந்திருக்கின்ற
னர் என்று காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது
‘மோட்சத்தை அடையும் வழி’ என்ற ரீதியில் தற்கொலை முடிவை மேற்கொண்டு அதற்கான முயற்சியில் கடந்த ஆண்டில் இருந்தே இவர்கள் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தக் குடும்பத்தினர் கடவுளைத் தரிசிக்கப் போகிறோம் என்று எழுதிவிட்டு, தற்கொலை செய்துள்ளதாக காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் எழுதிய டைரியில், உடல் தற்காலிகமானது, கண்களையும், வாயையும் மூடிக்கொண்டால் பயத்தில் இருந்து விடுபடலாம் என்று எழுதி வைத்துள்ளனர். இதனால், காவல் துறையினர் தற்கொலை என்ற ரீதியில் வழக்கை விசாரித்து வந்தனர்.
இது சம்பந்தமாக இரண்டு கண்காணிப்பு கேமரா காட்சிகள் காவல் துறைக்குக் கிடைத்துள்ளன. 11 பேரின் மரணம் தற்கொலை தான் என சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியாகியுள்ளது. இவர்களது மரணத்தில் எந்தச் சதியும் இல்லை என சிசிடிவி பதிவின் மூலம் காவல் துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இறந்த 11 பேரில் ஒருவரான மூத்த மருமகள், தூக்குப் போட நாற்காலியைக் கொண்டு செல்வதும், இறந்த 2 சிறுவர்கள் தற்கொலை செய்ய வயர்களை கொண்டு செல்வதும், அவர்களின் எதிர்வீட்டில் இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. உயிரிழந்த பதினோரு பேரும் தூக்குப் போட்டு மறுபிறவி எடுக்கப் போவதாக நம்பினர். லலித் என்பவரின் ஆவி தங்களை ரட்சிக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் தூக்குப் போடும் சடங்கை நடத்தினர் என்றும் கூறப்படுகிறது.
"கோப்பையில் தண்ணீரைப் பிடித்து வையுங்கள், தண்ணீர் நிறம் மாறும்போது நான் உங்களைக் காப்பேன்" என்ற ஆவி வாக்குறுதி அளித்ததாக நம்பி அவர்கள் தூக்குப்போட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
நள்ளிரவு ஒரு மணிக்கு நடத்திய இந்த விபரீதமான பூஜையில் ஆவி அவர்களைக் காக்கவில்லை என்றும், 11 பேரும் மூட நம்பிக்கைகளால் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொண்டனர் என்றும் காவல் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: