![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlJK8jsejTOhXDFta8SlAolEbZbu5jJOE0kjL-l3ZWsnS6QlYhAEOFmeFr2FAup3eVo80j3UmK5rEiYT-aAoxyCA79K4eK4SC6ted9jPPRMClRaEkml40ghztfzsaNzCCxOY1iE0svsO0/s400/36571966_1765223213592971_2187310145296400384_n.jpg)
விகடன் - சத்யா கோபாலன் : டெல்லியில், துணைநிலை ஆளுநரின் அதிகாரம் தொடர்பான வழக்கில், ‘ஆளுநர் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது‘ என உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.;
டெல்லியில், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வராக உள்ளார். ஆனால், துணைநிலை ஆளுநராக பா.ஜ.க-வைச் சேர்ந்த அஜித் பைஜல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனால், அங்கு பா.ஜ.க-வுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் நேரடி மோதல் நடந்துவருகிறது. முதல்வர் சொல்வதுபடி நடப்பதா, இல்லை ஆளுநர் சொல்வதுபடி நடப்பதா என்பது தெரியாமல், அதிகாரிகள் குழம்பியிருக்கின்றனர். இந்நிலையில், ஆளுநரின் அதிகாரம் தொடர்பாக டெல்லியில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கின் முடிவில், ஆளுநருக்கு ஆதரவாக உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து, ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மிக முக்கிய வழக்காகக் கருதப்படும் இதில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள்கொண்ட அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றுவந்தது.
இந்த வழக்கில், கடந்த டிசம்பர் மாதம் இருதரப்பு வாதங்களும் முடித்துவைக்கப்பட்டது. பின்னர், இறுதி தீர்ப்பு 04-07-2018 அன்று வழங்கபடும் என முன்னதாக உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. அதன்படி, இன்று காலை 10:30 மணிக்கு தொடங்கிய இந்த வழக்கில், முதலில் டெல்லியின் அதிகாரத்தை நிர்ணயிக்கும் அரசியல் சாசனப் பிரிவின் அம்சங்கள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. பின்னர் தீர்ப்பு வாசிக்கத் தொடங்கிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறுகையில், ”அரசியலமைப்பை மதிப்பது அனைவரின் கடமை. டெல்லியில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் உறவு ஆரோக்கியமாகவே உள்ளது. துணைநிலை ஆளுநர், மாநில அரசுடன் சேர்ந்து சுமுகமாகச் செயல்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் முடிவுகள்மீது ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும். துணைநிலை ஆளுநருக்குத் தனி அதிகாரம் கிடையாது. ” என கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக