வெள்ளி, 6 ஜூலை, 2018

தாய்லாந்து குகை.. 13 பேரை மீட்க கடும் முயற்சி ; கடற்படை வீரர் உயிரழப்பு

தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள 13 பேரை  மீட்க கடும் முயற்சி  ; கடற்படை வீரர் பலிதினத்தந்தி:  தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள 13 பேரை மீட்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளில் ஈடுபட்ட கடற்படையைச் சோந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். தாய்லாந்தில் தம் லாங் குகைக்குள் சிக்கியிருக்கும் 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளரை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வருவதற்கான திட்டங்களை சிறப்பு மீட்புக் குழுவினர் வகுத்து வருகின்றனர். அந்த 13 பேரும் ஒரே நேரத்தில் மீட்கப்பட வாய்ப்பு இல்லை எனவும், ஒவ்வொருவரது உடல்நிலையை கருத்தில் கொண்டுத் தனித்தனியாக அழைத்து வரப்படுவார்கள்.குறுகலான குகைப் பாதையில் தேங்கியிருக்கும் நீர் மற்றும் சகதியில் நீந்தி வருவதற்கு உடலளவிலும், மனதளவிலும் 100 சதவீதம் தயாரான பிறகே, ஒவ்வொருவரும் குகையிலிருந்து மீட்கப்படுவார்கள்.

குகைக்குள் சிக்கியவர்களின் தயார் நிலை குறித்து மீட்புக் குழு அதிகாரிகள் தினமும் சோதனை மேற்கொள்வார்கள் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.தாய்லாந்தில், 11 முதல் 16 வயது வரை கொண்ட 12 சிறுவர்களை, அவரது 25 வயது கால்பந்து பயிற்சியாளர் சியாங் ராய் என்னும் பகுதிக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி சுற்றுலா அழைத்துச் சென்றார்.அப்போது அந்தப் பகுதியிலுள்ள, பல கி.மீ. நீளம் கொண்ட குகையைப் பார்வையிட, அந்த 13 பேரும் அதற்குள் சென்றுள்ளனர்.எனினும், திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்தது.அதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டனர்.

அவர்களைத் தேடி அந்தப் பகுதிக்கு வந்த மீட்புக் குழுவினர், குகை வாயிலில் அவர்களது மிதிவண்டி உள்ளிட்ட பொருள்கள் இருப்பதை வைத்து அந்தக் குகைக்குள் அவர்கள் சென்றிருப்பதை உறுதி செய்தனர்.எனினும், தொடர்ந்து பெய்து வந்த கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக குகைக்குள் சென்று அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.இந்தத் தகவல், தாய்லாந்து முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குகைக்குள் மாயமான சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் பிரார்த்தனை செய்யப்பட்டன.இந்தச் சூழலில், மழை வெள்ளம் கொஞ்சம் வடிந்ததால் சிறுவர்கள் சிக்கிய 9 நாள்களுக்குப் பிறகு தேடுதல் பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.இதையடுத்து, அந்த 13 பேரும் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை எழுந்தது. எனினும், கடுமையான வெள்ளம் மற்றும் சகதியில் அவர்கள் இத்தனை நாள்கள் உயிர் பிழைத்திருப்பது கடினம் என்றும் அஞ்சப்பட்டது.


இந்தச் சூழலில், தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த பிரித்தானிய நீச்சல் வீரர் ஒருவர் குகையின் பாறை மேடு ஒன்றில் அந்த 13 பேரையும் திங்கள்கிழமை இரவு கண்டறிந்தார். பசி மற்றும் களைப்பால் மிகவும் சோர்வுற்றும், மெலிந்தும் காணப்பட்ட அவர்கள் அந்த வீரரிடம் பேசிய வீடியோவை தாய்லாந்து கடற்படையின் அதிரடிப்படை பிரிவு வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக, அவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.குகைக்குள் சிறுவர்கள் இருக்குமிடம் கண்டறியப்பட்டாலும், குகைக்குள் ஓடும் வெள்ள நீர் மற்றும் சகதியில் நீந்தி வர அவர்களுக்கு சிறப்பு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்; அல்லது குகையில் வெள்ள நீர் வடியும் வரை காத்திருந்து அவர்களை வெளியே அழைத்து வரலாம் என்று மீட்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.எனினும், அதற்கு பல மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. அதுவரை அவர்கள் உயிருடன் தாக்குப்பிடிப்பார்களா என்பது சந்தேகமே என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தம் லாங் குகையில் சிக்கியிருப்பவர்களுக்கு பொருட்களை வழங்கச் சென்ற சமன் குனன்(வயது 38)  என்பவர்  திரும்பும் வழியில் மயங்கி விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


கடற்படை பணியை விட்டுச் சென்ற இவர், இந்த மீட்புப் பணிக்காக தற்போது திரும்பி இருந்தார். குகையில் சிக்கியவர்களை மீட்க தாமாக முன்வந்த இவர், இரவு 2 மணி அளவில் உயிரிழந்தார் என சியங் ராவ் நகர துணை ஆளுநர் கூறி உள்ளார்.

"பிராண வாயுவை குகையில் இருப்பவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே அவரது பணி. ஆனால், திரும்பி வரும் வழியில், அவருக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை" என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: