வெள்ளி, 6 ஜூலை, 2018

சுஷ்மா இழிவுபடுத்தப்படுவதை பாஜக கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?

சவுக்கு : வெளியுறவுத் துறை சுஷ்மா ஸ்வராஜ்
சமூக  ;வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுவது தேசம் பற்றிய புதிய வரைமுறையை உருவாக்கும் அக்கட்சியின் சித்தாந்தத் திட்டத்தின் ஒரு பகுதியே மதம் மாறி மணம்புரிந்த ஒரு ஜோடியைத் தொந்தரவு செய்த தனது அமைச்சக ஊழியர் ஒருவர் மீது நடவடிக்கை எடுத்ததன் பலனாக வலதுசாரி இந்துத்வா அமைப்புகளின் அருவருக்கத்தக்க தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார் சுஷ்மா. சிறுபான்மை இனத்தவரைத் திருப்திப்படுத்த முயற்சித்த ‘குற்றச்சாட்டினால்’ அச்சிட முடியாத தகாத வார்த்தைகளில் அவர் ஏசப்படுகின்றார்.
“உங்களது வார்த்தைகள எங்களுக்குத் தாங்க முடியாத வலியைத் தந்து விட்டன” என்ற சுஷ்மாவின் கணவர் ஸ்வராஜ் கௌஷலின் பதிலிலிருந்து சுஷ்மாவும் அவரது குடும்பத்தாரும் இம்விமர்சனங்களால் நிலைகுலைந்து போயுள்ளது தெளிவாகிறது. ஜூன் 30 அன்று, தனது ட்விட்டர் பக்கத்தில் இத்தகைய கடும் விமர்சனங்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்று தன்னைப் பின்பற்றுபவர்களிடம் சுஷ்மா கேட்டிருந்தார்.

மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சரும் முன்னாள் பாஜக தலைவருமான நிதின் கட்காரி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தவிர, சுஷ்மாவின் மத்திய அமைச்சரவை சகாக்களும் (பெண் அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், ஸ்ம்ருதி இரானி உள்பட) பிரதமர் நரேந்திர மோடியும் இதுவரை இதுபற்றி ஏதும் கூறாமல் மௌனம் காப்பது கவனிக்கத்தக்கது.
மௌனத்தின் ஊற்றுக்கண்
இதற்கு முன்பும், இத்தகைய தாக்குதல்களின்போது பாஜக மௌனம் சாதித்திருக்கிறது. இந்த மௌனம் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறது. சமூக ஊடகங்களில் இத்தகைய விமரிசனங்களும் வெறுப்பை உமிழ்வதும் தனக்கு அரசியல் ஆதாயம் தருவதாகவே அக்கட்சி நினைப்பது தெளிவாகிறது. எனவே, இத்தகைய வெறுப்பைக் கக்கும் விமரிசனங்கள் குறித்த மோடி மற்றும் அவரது கட்சியின் மௌனத்தைச் சற்றுத் தீவிரமாக ஆராய்வது அவசியமாகும்.
‘வெளிவேஷம் போடுகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டு எழுமோ என்பதே வலதுசாரி விமரிசனங்களை பாஜக கண்டனம் செய்யாததற்கான முன்னணிக் காரணமாகும். கட்சியின் மூத்த தலைவர்களே முஸ்லிம்களுக்கெதிரான கருத்துகளை வெளிப்படையாக ஆதரிக்கும் சூழலில் இதை எதிர்பார்க்கவும் முடியாது. ‘இந்துக்களின் சொத்துக்களை முஸ்லிம்கள் வாங்க அனுமதிக்கக் கூடாது’ என ஒரு குஜராத் பாஜக எம்.எல்.ஏ. சொல்ல, ராஜஸ்தானின் ஆல்வார் தொகுதி எம்.எல்.ஏ. ஒருபடி மேலே போய் இந்துக்கள் முஸ்லிம்களைத் தம் வீடுகளுக்குள் விடக் கூடாது என்கிறார். மத்திய அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டேயும் இஸ்லாமை அழிக்கும்வரை தீவிரவாதமும் அழியாது என முன்பு ஒருமுறை கூறியிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக, பாஜக ஆளும் ஹரியானாவில் முஸ்லிம்கள் திறந்தவெளி மற்றும் பொது இடங்களில் தொழுகை நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகளால் வலதுசாரித் தொண்டர்களுக்குத் தாம் என்ன சொன்னாலும், செய்தாலும் எந்தப் பிரச்சினையும் வராது என்ற தவறான நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. இங்கிலாந்தில் சமீபத்தில் இணையம் வழியாக முஸ்லிம்களுக்கெதிராக வெறுப்பைக் கக்கிய இந்திய வம்சாவளியைச் சார்ந்த ரோடென் சந்த் சிறைவாசம் பெற்றார்; இந்தியாவில் இவ்வாறு நிகழ்வது அரிது. இணைய விமரிசனங்களைக் கட்டுப்படுத்துவது எவ்விதத்திலும் ஆதாயமிக்கதாக மோடிக்குத் தோன்றவில்லை; அத்தகைய பல மோசமான விமர்சனங்களை அவர் ‘பின்தொடர்வது’ அதைவிடக் கொடுமை. கடந்தகால ஆட்சியாளர்களை (காங்கிரஸ் பிரதமர்கள்) முஸ்லிம்களின் பிரதிநிதிகளாகச் செயல்பட்டதாகச் சாடும் பிரதமர் மோடி தன் ஆதரவாளர்களை இவ்விஷயத்தில் கட்டுப்படுத்துவார் என எப்படி நம்மால் எதிர்பார்க்க முடியும்? கடந்த ஆண்டு குஜராத் சட்டசபைத் தேர்தலின்போதும் சமீபத்திய கர்நாடக சட்டசபைத் தேர்தல் பிரசாரத்திலும் ‘திப்பு சுல்தான் ஜெயந்தி’யைக் கொண்டாடிய காங்கிரஸை ‘ஔரங்கசீப் ஆட்சி’ நடத்துவதாக பிரதமர் மோடி சாடியது நினைவிருக்கலாம்.
இத்தகைய கடுமையான இணையதள விமரிசனங்கள் – வேண்டுமென்றெ செய்யப்பட்டாலும் – பாஜகவினருக்குக் குறுகிய காலத்தில் பத்திரிகைத் தலைப்புச் செய்திகளில் இடம்பெறவும் நீண்டகால அளவில் இந்தியாவை ‘ரீமேக்’ செய்யவும் உதவலாம். பொருளாதாரப் பிரச்சினையைச் சமாளிக்க முடியாமல் திணறும் மைய அரசுக்கு இத்தகைய விமரிசனங்கள் ‘வரவேற்கத்தக்க’ பொழுதுபோக்காக அமைவதுடன் சமூகத்தைப் பிளவுபடுத்த ஒரு வாய்ப்பையும் தருகின்றன. விரிவாகச் சொன்னால், விமரிசனங்கள் பெரும்பாலும் மத்தியதரக் குடும்பத்தினரால் செய்யப்படுகின்றன: மீதம் இருப்பவர்கள் தன் வாழ்வாதாரத்துக்கான போராட்டங்களில் மூழ்கியிருக்கிறார்கள். அல்லது ‘வாட்ஸப்’ / தொலைக்காட்சியில் செய்திகளையும் கருத்துகளையும் தெர்ந்துகொள்வதோடு விட்டுவிடுகிறார்கள்.
பாஜகவின் உண்மையான நோக்கம் என்ன?
இச்சூழலில் கருத்துகளை உருவாக்குவதில் சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் பெரும்பங்கு வகிக்கின்றன; ஒருவித எதிர்சூழல் உருவாகவும் இது உதவுகிறது. காலப்போக்கில் சமூக ஊடகத்தில் பழமையான, மிரட்டலான கருத்துகள் நிரப்பி, அடிப்படை உரிமை பற்றிய எண்ணம் / பேச்சு ஆகியவை அடிபட்டுப்போகின்றன. மதம், பிராந்தியம், ஜாதி, வம்சம், மொழி அடிப்படையில் பல்வேறு விதமாகவும், தலைமுறைகளாக மதசார்பற்ற பாரம்பரியத்தைப் பின்பற்றியும் வரும் நாட்டில் இந்துக்களின் ஓட்டுகளை ஒட்டுமொத்தமாகப் பெற விரும்பும் பாஜகவின் குறிக்கோளுக்கு இது மிக முக்கியமானதாகும். மதரீதியாக நாட்டைப் பிளவுபடுத்தி, பிறரை அவமானப்படுத்தினால் மட்டுமே ‘இந்து ஓட்டு’ ஒட்டுமொத்தமாகத் தனக்குக் கிடைக்குமென்றும் இதனால் ‘தேசம்’ என்பதையே மீண்டும் வரையறுக்க வேண்டுமென்றும் பாஜக கருதுவதாகத் தெரிகிறது.
வேறு விதமாகச் சொன்னால் இந்தியாவைப் பற்றி மக்கள் உருவாக்கி வைத்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வரையறைகளை மாற்றி எழுதவும் அழிக்கவும் பாஜக விரும்புகிறது. இந்தியா எப்போதுமே எல்லோரையும் அரவணைக்கும் அரசியலமைப்புச் சட்டத்தால் நிர்வகிக்கப்படும் பல இனங்கள் ஒன்று சேர்ந்து வாழும் மாபெரும் நாடாகவே பார்க்கப்பட்டு வந்துள்ளது. மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற தாக்கம் ஏற்படுத்தக்கூடிய தலைவர்களால் வழிநடத்தப்பட்ட நாட்டின் பலநிலை அமைப்புகள் நமது கலாசார வேறுபாடுகளைக் கட்டிக்காக்கும் விதத்தில்தான் அமைக்கப்பட்டன. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் மதம்சார்ந்த வன்முறை அரசியல் சூழலைப் பாதித்ததால், சமூக நல்லிணக்கம், மதங்களுக்கிடையிலான ஒற்றுமை, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றைப் பரப்ப இந்திய அரசு பல்வேறு முயற்சிகளைப் பல நிலைகளில் மேற்கொண்டது. காங்கிரஸ் கட்சியும் பிற அரசியல் சித்தாந்த அமைப்புகளும் (இந்து உரிமை கோருபவர்கள் தவிர) இத்தகைய வாழ்க்கைமுறையயும் மதநல்லிணக்கத்தையுமே வலியுறுத்தி வந்துள்ளன.
அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள பழமைவாதக் கட்சிகளுக்கும் தங்களது நாடுகளைப் புனரமைப்பதில் நேரடியாகப் பங்கு இருந்தது. அத்தகைய பெருமை ஏதும் அற்ற பாஜக அதை எண்ணிப் பதற்றமடைகிறது. எனவே தேசியக் கதையாடல்களை அது தனக்கேற்ற விதத்தில் மாற்றியமைக்க விரும்புகிறது. பரஸ்பர ஒத்துழைப்பு என்னும் பண்பில் ஊறிய நம் மக்களை அதிலிருந்து பிரித்து இனம்சார்ந்த அமைப்பை உருவாக்க பாஜக முயல்கிறது. ‘மிலே சுர் மேரா தும்ஹாரா’ செண்டிமெண்டை ஒழித்து, ’இந்தியன்’ என்ற உணர்வு ‘இந்து’ என்பதுடன் ஒன்றிப்போக வேண்டும் என்றும் இந்துக்கள் பிற மதத்தவரிடமிருந்து தனியாக இருக்க வேண்டுமென்றும் பாஜக விரும்புகிறது. மையத்தில் ஆள்வதால் உள்ள அதிகாரத்தாலும் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்தும் இத்தகைய பெரும்பான்மை அடையாளத்தை உருவாக்கி ‘இந்தியா’ என்பதன் வரையரையை மாற்றி எழுத அக்கட்சி துடியாய்த் துடிக்கிறது.
கடந்த கால முஸ்லிம் அரசர்களின் மீதான தொடர் தாக்குதல், அவர்களை ‘இந்து விரோதி’களாகக் காட்டுவது, நேருவையும் அவரது பரந்த உலகப் பார்வையைச் சாடுவது, தேசிய கீதம் திரையரங்குகளில் இசைக்கப்படும்போது அனைவரும் எழுந்து நின்றாக வேண்டும் என்று வலியுறுத்துவது, ‘பாரத் மாதா கி ஜெய்’ என்ற கோஷத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வது / சொல்ல வைப்பது, பாடப்புத்தகங்களில் கடந்தகால வரலாற்றை மாற்றி காங்கிரஸை அவமதித்து வீரசாவர்க்கரை மாவீரராகக் காட்டி எழுதுவது, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தையும் தாராளப்போக்கு கொண்ட அறிவுஜீவிகளையும் அவமதிப்பது, முஸ்லிம்கள் மீது தொடர் தாக்குதல் நடத்துவது, அவர்கள் மீதான வெறுப்பைப் பரப்புவது ஆகியவை நீண்டகாலமாக நாட்டில் நிலவிவரும் மதநல்லிணக்க உணர்வைச் சிதைக்க பாஜகவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அதிர்ச்சியூட்டும் உத்திகள்.
பாஜகவின் போதாமைகளும் பதற்றங்களும்
பொதுவாக, பெரும் உளவியல் மாற்றங்களைக் கொண்டு வர அரசியல் கட்சிகள் அதிக நேரம் எடுத்துக்கொண்டு ஒருமித்த கருத்தை வளர்க்க முயலும். புதிய தலைமுறை மாணவர்கள் புதிய புத்தகங்களைப் படித்து, புதிய கருத்துகளை உள்வாங்கும்வரை அக்கட்சிகள் பொறுத்திருக்கும். ஆனால் பாஜகவிடம் இதற்கெல்லாம் நேரமில்லை; பிளவுபடுத்துவது என்பது அக்கட்சியைப் பொறுத்தவரை தினமும் செய்யப்பட வேண்டிய ‘தேவையான’ ஒரு சடங்கு; மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் பின்னணியில் இவ்விஷயங்களில் (மக்களின்) கவனத்தைத் திசைதிருப்பும் அவசியமும் அதற்கு உள்ளது. போதுமான அறிவுவார்த்தமான (அல்லது கலாபூர்வமான) ஆற்றலைக் கொண்டிராத பாஜகவில் மாற்றுக் கருத்து சொல்லவோ, தனது புதிய ‘பெரும்பான்மைவாத’ அரசியலை நோக்கி மக்களை இழுக்கவோ தேவையான தகுதி படைத்த மாற்றுச் சிந்தனையாளர்கள் யாருமில்லை. எனவேதான் வேறுவித அரசியல் சூழலை, வன்முறை, பயம் மற்றும் அரசுத் தலையீடு சார்ந்த சிந்தனைக் கட்டமைப்பை உருவாக்க அக்கட்சி அவசரப்படுகிறது. வெறுப்பைப் பரப்ப நல்ல ஒரு வாய்ப்பாகவும் கட்சி விரும்பும் மனநிலையை ஏற்படுத்தி அனைவரின் கவனத்தைக் கவரவும் கட்சியினருக்கு இன்றியமையாத ஒரு சடங்கைச் செய்யும் உணர்வைத் தரவும் இணையதள விமரிசனமானது பாஜகவுக்கு உதவுகிறது.
தன் கட்சி உருவாக்கிய ஒரு அமைப்பின் அபாயமான சுழலுக்குள் சுஷ்மா ஸ்வராஜ் மாட்டிக்கொண்டுவிட்டார். தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியின் திட்டப்படி நடக்காத தலைவர்களுக்கு என்ன நேரும் என்பது சுஷ்மாவின் மீதான தாக்குதலால் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.

முஸ்லிம்கள், சிறுபான்மையினர், அரசியல் எதிரிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட விமர்சகர்கள் பற்றிய தன் கருத்தை பாஜக எப்போதும் ரகசியமாக வைத்ததில்லை. ஒருங்கிணைக்கப்பட்ட சமூக ஊடக விமர்சனங்கள் தனிநபர்களைத் தம் வலுவான கருத்துகளை அனுமானிக்க முடியாத விதங்களில் பதிவு செய்ய இச்சூழல் தூண்டுகிறது. கருத்துகளைத் திணித்து என்ன சொன்னாலும், செய்தாலும் தன் ஆதரவாளர்களை எப்போதும் ஆதரித்துக்கொண்டுவரும் ஒரு அரசு மிகத் தவறான ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்திவருகிறது; இச்செயலைத் திரும்பப்பெற யாராலும் முடியாது. தன் கட்சிக்குச் சாதகமான வகையில் தேர்தல் சமயங்களில் சட்டத்தைத் ‘தூங்க வைக்கும்’ பாஜகவினரின் நடவடிக்கை நாட்டுக்குப் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான செயலாகும்.
சுஷில் ஆரோன்
நன்றி: தி வயர் இணையதளம் (https://thewire.in/politics/bjp-hate-speech-sushma-swaraj-trolls)
தமிழில்: சுப்ரபாலா

கருத்துகள் இல்லை: