செவ்வாய், 22 மே, 2018

BBC : ஸ்டெர்லைட் போராட்டம்: ஒரு பெண் உள்பட .. பிந்திய செய்தி ..11 உயிரழப்பு


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் தடையை மீறி போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு இளம்பெண் உள்பட ஒன்பது பேர் பலியாகியுள்ளதாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலர் சிலாஸ் ஜெயமணி தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் துப்பாக்கிச்சூட்டில் இறந்தனர் என்றும் இறப்புக்கான காரணம் துப்பாக்கி குண்டுகள்தானா என்பதை பிரதேப் பரிசோதனைக்கு பின்னரே கூற முடியும் என்று பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் தமிழரசன், சண்முகம், கிளாஸ்டன், கந்தையா, மணிராஜ், அந்தோணி செல்வராஜ், ஜெயராமன் மற்றும் வெணீஸ்டா ஆகிய எட்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரு பெண்ணின் அடையாளம் இதுவரை தெரியவில்லை.e>சுமார் 40 போராட்டக்காரர்கள் காயமடைந்துள்ளதாகவும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் அவசர ஊர்தி ஒன்றுக்கு தீவைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் மோசமான நிலையில் இருப்பவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.< தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆலைக்கு மிக அருகில் உள்ள அ.குமரெட்டியபுரம் மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ள நிலையில், இன்று போரட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. மக்கள் அறிவித்துள்ள போராட்டங்களின் காரணமாக, தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம், சிப்காட் காவல் நிலையப் பகுதிகளில் நேற்று (21-ம் தேதி) இரவு பத்து மணி முதல் நாளை (23-ம் தேதி) காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  
தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும், மேலும் இந்த கழிவுகளால் புற்றுநோய் வரக்கூடும் கூறி அ.குமரெட்டியபுரம் கிராம மக்களுக்கு கடந்த 99 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

 இந்நிலையில், அ.குமரெட்டியபுரம் கிராம மக்களுக்கு அருகில் உள்ள 10-ம் மேற்பட்ட கிராம மக்கள் ஆதரவளித்துள்ள நிலையில், அனைவரும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக செல்கின்றனர்.இந்த போராட்டத்துக்கு வியாபாரிகளும், பல்வேறு அமைப்புகளை ஆதரவளித்துள்ளன. இதனால் இப்பகுதியில் உள்ள பல கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், இப்பகுதியில் உள்ள மீனவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். 

''ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, 22.05.2018 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திட 21.05.2018 இரவு 10.00 மணி முதல் 23.05.2018 காலை 08.00 மணி வரை குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ், தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் மற்றும் சிப்காட் காவல் நிலைய எல்கைகளுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.'' என மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.இதனிடையே தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட சுமார் 20,000 பேர் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது அக்கூட்டத்தினர் வன்முறையில் ஈடுபட்டு, காவல் துறை வாகனங்களை தீயிட்டும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புகுந்து அங்குள்ள வாகனங்களை தீயிட்டும், ஆட்சித் தலைவர் அலுவலகத்தை கல் வீசித் தாக்கியும் சேதப்படுத்தினர். இக்கூட்டத்தினரின் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவரவே தவிர்க்க முடியாமல் காவல் துறை நடவடிக்கை நேரிட்டது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: