வியாழன், 24 மே, 2018

தூத்துக்குடி போராட்ட ஆதரவு ..சின்னத்திரை நடிகை மீது வழக்குப் பதிவு!

மின்னம்பலம் :போலீஸ் உதவி கமிஷனர் உடையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து பேசிய சின்னத்திரை நடிகை நிலானி மீது, நான்கு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சின்னத்திரை தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருபவர் நிலானி. இவர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக வீடியோ காட்சி ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். படப்பிடிப்பில் இருந்தபடிபோலீஸ் உதவி கமிஷனர் உடையில் அவர் பேசியிருப்பது, உண்மையில் போலீஸ் அதிகாரி ஒருவர் தூத்துக்குடி சம்பவத்தைக் கண்டித்துப் பேசுவது போன்று இருக்கும்.
அந்த வீடியோவில் போலீஸ் யூனிஃபார்மைச் சுட்டிக்காட்டி பேசியவர், “அப்பாவி மக்கள் 10 பேரை சாகடிச்சுருக்காங்க. இந்த உடையை அணிவதற்கே கூசுது. நம்ம அண்ணன், தம்பி உறவுகளை அநியாயமா சாகடிச்சிருக்காங்க. நாம எல்லாரும் சேர்ந்து போராடணும். போராட்டத்தில இறந்தவர்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தை தலைமை தாங்குனவங்க. அதனால இது திட்டமிட்ட சதி” என்றார்.


தொடர்ந்து பேசியவர், “இதைப் பார்க்கும் பொதுமக்கள், யாரோ எங்கேயோ செத்துப் போனாங்கன்னு நினைக்காம நம்ம வீட்டில ஒருவர் இறந்து போனா எப்படி இருக்கும் அப்படின்னு பாருங்க. இதுக்கு என்ன செய்யலாம், அடுத்து ஒரு போராட்டமோ, புரட்சியோ வெடிச்சா அது அரசாங்கத்தால நம்மள கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கணும். அப்படி ஒரு பதிலடியை கொடுத்தே ஆகணும். இதுக்கு நீங்க எல்லோரும் தயாராகுங்க. கூடிய சீக்கிரம் இது நடக்கணும். இன்னொரு ஈழம் இனி இங்கே உருவாகக் கூடாது. நம்ம சொந்த பந்தத்தை 1.5 லட்சம் பேரை தூக்கிக் கொடுத்தோம். போதும்” என்று கண்ணீர் வடித்தார்.
“நிறைய ஷேர் பண்ணுங்க. விழிப்புணர்வை உண்டாக்குங்க” என்று தொடர்ந்தவர், “நம்மை தீவிரவாதியாக ஆக்க முயற்சிக்கிறாங்க. யாரும் வெளிநாட்டுப் பொருளை வாங்காதீங்க. யாரும் அரசுக்கு வரி கட்டாதீங்க. இந்த அரசை சும்மா விட்டால் நாளை நாமும் பிணம்தான். அனைவரும் போராட வர வேண்டும். கூடிய சீக்கிரம் எல்லாத்துக்கும் பதில் கிடைக்கணும். புரட்சி வெடிக்கணும்” என்பன போன்று பேசியிருந்தார்.
சின்னத்திரை நடிகை மீது வழக்குப் பதிவு!இதுகுறித்து ரிஷி என்பவர் அளித்த புகாரின் பேரில், வடபழனி போலீஸார் சின்னத்திரை நடிகை நிலானி மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
419 (ஆள் மாறாட்டம் செய்து அல்லது வேறொரு நபராக நடித்து ஏமாற்றுவது), 153 (வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது), 500 (அவதூறு உண்டாக்கும் வகையில் பேசுதல், பதிவிடுதல்), தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66d (ஆள்மாறாட்டம் மூலம் அல்லது வேறொரு நபராக நடித்து ஏமாற்றி அதை வலைதளங்களில் பரப்புவது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் அவர் மறுபடியும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “உங்க பேச்சு யூனிபார்ம் சர்வீஸை களங்கப்படுத்துறது மாதிரி இருக்கு. நீங்க வன்முறையைத் தூண்டுற மாதிரி பேசி இருக்கீங்க அப்படின்னு சொல்லியிருக்காங்க. நான் அந்தப் பதிவை பயந்து ஒண்ணும் போடல. நான் சூட்டிங்ல இருந்தப்ப அந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்டு அதே உணர்வுல போலீஸ் கெட்டப்பிலயே பேசிட்டேன். எம்மேல கேஸ் பதிவாகியிருக்காம். இதுக்காக நான் பயப்பட மாட்டேன். என் உணர்வுகளை நான் வெளிப்படுத்துவேன்” என்றார்.
தூத்துக்குடி சம்பவத்தின் பின்னணி குறித்து விவரித்தவர், “நாளைக்கு எந்த கட்சி அமைப்பும் இல்லாம (இன்று மே 24) சேப்பாக்கம் மைதானத்திலிருந்து பேரணி நடத்த உள்ளோம். இது ஓர் அரசியல் சார்பற்ற பேரணி. அதுக்கு எல்லாரும் வரணும்” என்றும் கேட்டுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை: