ஞாயிறு, 20 மே, 2018

சோற்றைப் பறிககும் ஆதார்!.. மானியத் திட்டங்களின் உதவியைப் பலர் இழந்துள்ளனர்.

சோற்றைப் பறிக்கும் ஆதார்!மின்னம்பலம்: ஆதார் குறைபாடுகளால் பொது விநியோகத் திட்டத்தில் இருந்து விலக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை ஒன்று அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான ஐடி இன்சைட் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், "பல்வேறு மானியத் திட்டங்களுடன் 12 இலக்க ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டைகளில் உள்ள குறைபாடுகள், ஆதார் அட்டை இல்லாமை போன்ற காரணங்களால் மானியத் திட்டங்களின் உதவியைப் பலர் இழந்துள்ளனர். ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களின் கிராமப்புறங்களில் மட்டும் ஆதார் எண் இணைக்கப்படாமலும், இதில் உள்ள குறைபாடுகளால் 20 லட்சம் தனிநபர்கள் பொது விநியோகத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டும் உள்ளனர்.

இதனால் மிகுந்த வெறுப்படைந்துள்ள மக்கள் பொது விநியோகத் திட்டங்களின் பயனைப் பெற ஆதார் அல்லாத முந்தையத் திட்டம் போன்ற மாற்றுத் திட்டங்களைப் பின்பற்ற வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர். குறிப்பாக ஆந்திராவில் 55.3 விழுக்காட்டினரும், ராஜஸ்தானில் 67.4 விழுக்காட்டினரும் புதிய திட்டத்தைப் பின்பற்ற வலியுறுத்துகின்றனர். ராஜஸ்தானில் 1.2 விழுக்காட்டினர் ஆதார் குறைபாட்டால் பொது விநியோகத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மத்திய மாநில அரசுகள் சுமார் 252 திட்டங்களுக்கு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கியுள்ளன' என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு 2,947 வீடுகளில் நடத்தப்பட்டுள்ளது. இதில் 97 விழுக்காட்டினர் தங்களுடைய தனிப்பட்ட உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளனர். அதேபோல ஆதார் தகவல்கள் அரசுக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதையும் மக்கள் அறிய விரும்புகின்றனர் என்றும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. 87 விழுக்காட்டினர் ஆதார் எண்ணை அரசு சேவைகளுக்கு இணைத்துள்ளதை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
அதே சமயத்தில் ஆதார் தகவல்கள் குறித்த பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் அதிகரித்து வருகிறது. ஆதார் தகவல்கள் அரசுப் பக்கங்களில் அவ்வப்போது வெளியாவதும், தனியார் நிறுவனங்களுக்கு விற்கப் படுவதுமே இந்த அச்சுறுத்தல்களுக்கு காரணமாக உள்ளது. அண்மையில் கூட சத்தீஸ்கரில் ஆதார் தகவல்கள் வெறும் 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது நினைவுகூரத்தக்கது

கருத்துகள் இல்லை: