புதன், 23 மே, 2018

முள்ளிவாய்க்காலைப் போல சுற்றி வளைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி, திரேஸ்புரம்!

இன்றிரவு நடக்கவிருக்கும் போலீசு
தாக்குதலை தடுத்து நிறுத்த குரல் - பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 என்பது கடைசியாக கிடைத்த தகவல். 30 பேருக்கும் மேற்பட்டவர்கள் குண்டடி பட்டிருக்கின்றனர். துப்பாக்கிச் சூடு மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதியில்தான் நடைபெற்றது என்பது உண்மைக்குப் புறம்பானது என்கிறார்கள் தூத்துக்குடி மக்கள்.
திரேஸ்புரம் பகுதிக்குள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வரும்போது, அவருக்கு காவல் வந்த படையினர் துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு பெண்கள் ஓர் ஆண் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இத்தனை சாவுகளுக்குப் பிறகும் போலீசு தாக்குதல் முடிவடையவில்லை. திரேஸ்புரம், லயன்ஸ் டவுன், பாத்திமா நகர், மாதா கோயில் போன்ற பகுதிகளில் இப்போது காவல்துறை வீடுவீடாக சோதனை நடத்தி வீட்டில் இருப்பவர்களை கைது செய்து கொண்டு போகிறது. இவை அனைத்துமே மீனவ சமூகத்தினர் வாழும் பகுதிகள் ஆகும்.

குறிப்பாக திரேஸ்புரம் பகுதியை போலீஸ் படைகள் எல்லாப் பக்கமும் சுற்றி வளைத்திருக்கின்றன. இன்று இரவு திட்டமிட்டே ஒரு வன்முறை சம்பவத்தை அரங்கேற்றி, மக்கள் மேல் பழி போட்டு, அதனைத் தொடர்ந்து மிக கொடூரமான ஒரு தாக்குதலை நடத்துவதற்கு போலீஸ் திட்டமிட்டிருப்பதாக மக்கள் அஞ்சுகின்றனர். காலையில் போலீசார் கட்டவிழ்த்து விட்ட அரச பயங்கரவாத வன்முறை குறித்து நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்து கொண்டிருக்கும்போதே, அடுத்த சுற்று வன்முறைக்கு போலீசு திட்டமிடுவதாக தெரிகிறது.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அமைதி வழியில் நூறுநாட்களாகப் போராடி வந்த மக்கள் மீது இத்தகைய வன்முறையை கட்டவிழ்த்து விட்டது மட்டுமின்றி, போராடும் தூத்துக்குடி மக்களை பயங்கரவாத இயக்கத்தினரைப் போலவும், வன்முறையாளர்களாகவும் சித்தரிக்க போலீசு முயன்று வருகிறது.
இன்று இரவு திரேஸ்புரம் பகுதியிலோ, தூத்துக்குடியின் வேறு எந்தப் பகுதியிலோ தாக்குதல் நடைபெற்றால், அது போலீசின் திட்டமிட்ட தாக்குதலாகவே இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். திரேஸ்புரம் பகுதியை சுற்றி வளைத்திருக்கும் போலீசு படையை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என்றும், தூத்துக்குடி நகரில் பல்லாயிரக் கணக்கில் குவிக்கப்பட்டுள்ள படைகளை உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் கோருகிறோம். அரசியல் கட்சியினரும், மனித உரிமை ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும், வழக்கறிஞர்களும் மக்களை சுதந்திரமாக சென்று சந்திக்கும் நிலையை உடனே ஏற்படுத்த வேண்டுமென்றும் கோருகிறோம்.
- கரு.பழனியப்பன், திரைப்பட இயக்குனர்
- பீர் முகமது, பத்திரிகையாளர்
- கோவி.லெனின், பத்திரிகையாளர்
- பேராசிரியர் அ.மார்க்ஸ், மனித உரிமை செயற்பாட்டாளர்
- கவின்மலர், பத்திரிகையாளர்
- டி.அருள் எழிலன், பத்திரிகையாளர்
- மாலதி மைத்ரி, எழுத்தாளர்
- அசீப், பத்திரிகையாளர்
- பாலா, கார்ட்டூனிஸ்ட்
- ராஜூ முருகன், திரைப்பட இயக்குனர்
- ஜனநாதன், திரைப்பட இயக்குனர்
- பாரதி தம்பி, பத்திரிகையாளர்
- மருத்துவர் எழிலன், அரசியல் செயற்பாட்டாளர்
- சுகுணா திவாகர், பத்திரிகையாளர்
- செல்வ பிரபு, மருத்துவர்

கருத்துகள் இல்லை: