சனி, 26 மே, 2018

விலைபோன ஊடகங்கள்: கோப்ராபோஸ்ட் ‘ஸ்டிங் ஆபரேஷன்’!

விலைபோன ஊடகங்கள்: கோப்ராபோஸ்ட்  ‘ஸ்டிங் ஆபரேஷன்’!
மின்னம்பலம் :“நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் மக்களை நேரடியாக நெருங்குவதைவிட, மக்களை தினம்தினம் சென்றடையும் ஊடகங்களை விலைபேசி அவர்கள் மூலம் மக்கள் மனதில் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த நினைக்கின்றன இந்துத்துவ சக்திகள். இதற்காகக் கடந்த சில மாதங்களாக இந்தியாவின் முக்கியமான ஊடகங்களை இந்துத்துவ சக்திகள் விலை பேசி, தங்களுக்குச் சாதகமான செய்திகளையும், சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் செய்திகளையும் வெளியிடத் தூண்டுகின்றன. எங்களின் ‘ஸ்டிங் ஆபரேஷன்’ மூலம் இது உறுதியாகிறது’’ என்கிறார்கள் கோப்ராபோஸ்ட் இணைய தள ஊடக நிறுவனத்தார்.
இந்துத்துவத்துக்கும் அது சார்ந்த குறிப்பிட்ட கட்சிக்கும் ஆதரவாகப் பிரபல பெரு ஊடக நிறுவனங்கள் பெருமளவு பணம் வாங்கிக்கொண்டு செயல்படத் தயாராக இருப்பதாக இரு மாதங்கள் முன்பு கோப்ராபோஸ்ட் செய்தி வெளியிட்டது. இதன் அடுத்த கட்டமாக இந்துத்துவ சக்திகள் போல வேடமிட்டு இந்தியா முழுதும் சுமார் 24 ஊடக நிறுவனங்களை கோப்ரா போஸ்ட் பத்திரிகையாளர்கள் அணுகினார்கள். இந்த ‘ஸ்டிங் ஆபரேஷ’னில் ஊடகங்கள் விலைபோனதை வீடியோ பதிவோடு வெளியிட்டுள்ளது கோப்ராபோஸ்ட்.

“இந்துத்துவ சக்திகளுக்கு ஆதரவான செய்திகள் மட்டுமல்ல, சமுதாய நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையிலும் அதன் மூலம் குறிப்பிட்ட கட்சிக்கு செல்வாக்கு அதிகரிக்கும் விதமாகவும் செயல்படத் தயார்’’ என்று சொல்லி விலைபோயிருக்கிறார்கள் பிரபல ஊடகத்தினர்.
24 செய்தி நிறுவனங்கள் இந்துத்துவத்துக்கு விலை போவதாகத் தெரிவித்த நிலையில், இரண்டே இரண்டு ஊடக நிறுவனங்கள் மட்டுமே கோப்ராபோஸ்ட் ஸ்டிங் ஆபரேஷனில், “நாங்கள் இதற்கு உடன்பட மாட்டோம்” என்று தெரிவித்துள்ளன. வங்காள மொழி செய்தித் தாள்களான வர்த்தமான், டெய்னிக் சம்பத் ஆகியவைதான் விலை போக மறுத்த ஊடகங்கள் என்றும் கோப்ராபோஸ்ட் குறிப்பிட்டுள்ளது.
பிரபல ஊடகங்களில் எவை எவை இந்துத்துவத்துக்கு விலைபோயின, பேரம், பேச்சுவார்த்தை எல்லாம் எப்படி நடந்தது ஆகியவற்றை எல்லாம் மின்னம்பலம் வாசகர்களுக்குத் தொடர்ந்து வழங்குகிறோம், நாளை முதல்!

கருத்துகள் இல்லை: