வெள்ளி, 2 மார்ச், 2018

வடிவேலு இம்சை அரசன் 24 படப்பிடிப்பில் கலந்து கொள்ள வடிவேலு சம்மதம்

மின்னம்பலம் :இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்த வடிவேலுவிடம் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து படத்திற்காக செலவிட்ட 9 கோடி ரூபாயைக் கேட்டதாகவும், இதையடுத்து வடிவேலு மீண்டும் படத்தில் நடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத்தில் நாம் தொடர்புகொண்டு விசாரித்தபோது, இந்தத் தகவல் உண்மைதான் என்றும் வடிவேலு, ஷங்கர் ஆகிய இரு தரப்பும் சுமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாகவும் கூறினர்.
நகைச்சுவை நடிகராக வலம்வந்த வடிவேலு, சிம்பு தேவன் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தின் மூலம் ஹீரோவாக புதிய பரிமாணத்தில் திரையில் தோன்றினார். இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது. இதனையடுத்து அதே டீம் இணைந்து இதன் இரண்டாம் பாகத்தை 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' என்ற பெயரில் தயாரிக்க முடிவு செய்தனர். இதற்காக, வடிவேலுவுக்கு ரூ.1.50 கோடி ரூபாய் சம்பள முன்பணமாகக் கொடுத்து ஒப்பந்தம் செய்தார் ஷங்கர். இந்தப் படத்துக்காக சென்னை அருகே ரூ.6 கோடி செலவில் பிரமாண்டமான அரங்கு அமைத்து படப்பிடிப்பைத் தொடங்க ஏற்பாடு நடந்தது.

ஆனால் திரைக்கதையில் தலையிடுவதாகவும், கொடுத்த உடைகளை அணிய மறுப்பதாகவும் படத்தின் இயக்குநர் சிம்புதேவன், வடிவேலு மீது புகார் கூறினார். இதையடுத்து இயக்குநர் ஷங்கர் படப்பிடிப்பை நிறுத்தச் சொன்னதாகவும் செய்தி வெளியாகியது. அதே போல் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமலும், படக்குழுவுக்குப் போதிய ஒத்துழைப்பு தராமலும் இருந்துவந்ததாக வடிவேலு மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக வடிவேலு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இயக்குநர் ஷங்கர் புகார் அளித்தார். இதையடுத்து நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி வடிவேலுவிடம் விளக்கம் கேட்டது.
தற்போது, இந்தப் பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கம் இறுதி முடிவு எடுத்துள்ளது. 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படப்பிடிப்பில் வடிவேலு கலந்துகொள்ள வேண்டும் என்றும், மறுத்தால், அரங்கு அமைக்கத் தயாரிப்பாளர் செலவிட்ட ரூ.6 கோடியையும், அட்வான்ஸ் தொகையையும் சேர்த்து வட்டியுடன் ரூ.9 கோடியை வடிவேலு திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது. இந்த முடிவிற்குப் பிறகே வடிவேலு மீண்டும் படத்தில் நடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார் என்றும் விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: