புதன், 28 பிப்ரவரி, 2018

ஜெயேந்திரர் மறைவுக்கு திராவிடர் கழகம் இரங்கல் செய்தி


ஜெயேந்திரர் மறைவு: தலைவர்கள் இரங்கல்!மின்னம்பலம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியாக பொறுப்பு வகித்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று (பிப்ரவரி 28) மறைந்தார்.
ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியாக பொறுப்பு வகித்து வந்தார். கடந்த மாதம் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து சங்கரமடம் திரும்பி, அவர் ஓய்வு எடுத்து வந்தார்.
சங்கராச்சாரியார் ஜெயேந்திரருக்கு இன்று காலை மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மடத்திற்குச் சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.

காமகோடி பீடத்தின் 69-வது சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் (வயது 82) இன்று காலமானார். அவரது மரணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், சுரேஷ் பிரபு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான அக்கறையில் தொண்டு நிறுவனங்களை நடத்தியவர் என்றும், பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொண்டவர் என்றும் ஜெயேந்திரரைப் புகழ்ந்துள்ளார் பிரதமர் மோடி. அவரது மறைவால் வாடும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.
தமிழிசை சவுந்தர்ராஜன், பாஜக:
அனைத்து மதத்தை சார்ந்தவர்களையும் சமமாக மதிக்கக்கூடியவர், ஒரு ஆன்மீகவாதியாக மட்டுமல்லாமல் ஒரு சமுதாயவாதியாகவும், தேசியவாதியாகவும் வாழ்ந்தவர். ஆன்மீக சேவையுடன் பல பள்ளிகளை நிறுவி கல்வி சேவைகளையும், பல மருத்துவ மனைகளை நிறுவி மருத்துவ சேவைகளையும், பல சமூக கூடங்களை நிறுவி சமூக சேவைகளையும் செய்து வந்தவர்.
மதத்திற்க்கான சேவையைத் தாண்டி மக்களுக்கான சேவையை செய்தவர். பாரத தேசத்திற்கு அவரது மறைவு மிகப் பெரிய இழப்பு.
கி.வீரமணி, திராவிடர் கழகம்:
திராவிடர் கழகத்திற்கு எவ்வளவு மலையளவு கருத்து, கொள்கை வேறுபாடுகள் இருப்பினும், திராவிடர் கழகம் அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

கருத்துகள் இல்லை: