திங்கள், 26 பிப்ரவரி, 2018

சங்கர் கொலை வழக்குத் தீர்ப்பு: அரசுக்கு உத்தரவு!

சங்கர் கொலை வழக்குத் தீர்ப்பு: அரசுக்கு உத்தரவு!
minnambalam :உடுமலை சங்கர் கொலை வழக்கில் ஆறு பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்துப் பிறப்பித்த தீர்ப்பு, உறுதி செய்யப்படுவதற்காக சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமாரலிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரும் பழனி பகுதியைச் சேர்ந்த கௌசல்யாவும் 2016ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். சங்கர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் , கவுசல்யாவின் குடும்பத்தினர் திருமணத்தை ஏற்கவில்லை.
எனவே 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி உடுமலை பேருந்து நிலையம் முன்பாக சங்கரையும் கௌசல்யாவையும் இரு சக்கர வாகனத்தில் வந்த கும்பல் வெட்டிச் சாய்த்தது. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கிய இந்தக் கொடூர சம்பவம் அங்கிருந்த சிசிடிவி ஒன்றில் பதிவாகியிருந்தது.

சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்த காவல் துறையினர் கொலையில் தொடர்புடைய கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை மற்றும் செல்வக்குமார் , மதன், ஜெகதீசன், மணிகண்டன், கலை தமிழ்வாணன், தன்ராஜ், பிரசன்னா, மணிகண்டன் ஆகிய 11 பேரைக் கைதுசெய்தனர்.
திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய இவர்களில் 6 பேருக்கு நீதிபதி அலமேலு நடராஜன் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி தூக்குத் தண்டனை அளித்து உத்தரவிட்டார். தனது தீர்ப்பில், முதல் குற்றவாளியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, குற்றவாளிகள் ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலைதமிழ்வாணன் , மதன் ஆகிய 6 பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்தார். கூட்டு சதி, வன்கொடுமை ஆகிய இரு பிரிவுகளின் கீழ் 6 பேருக்கும் இரட்டை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பு, உறுதி செய்யப்படுவதற்காக சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தண்டிக்கப்பட்ட எவரும் இதுவரை மேல் முறையீடு செய்யவில்லை. இந்தத் தீர்ப்பு குறித்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம், நீதிபதி சதீஷ்குமார் அடங்கிய அமர்வு, இது சம்பந்தமாக பதிலளிக்கும்படி, அரசுத் தரப்புக்கும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்புக்கும் உத்தரவிட்டுள்ளது.
இதேபோல, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தஷ்வந்துக்கு தூக்குத் தண்டனை விதித்துப் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பும், உறுதி செய்யப்படுவதற்காக உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாகவும் பதிலளிக்க அரசுத் தரப்புக்கும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்புக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: