திங்கள், 26 பிப்ரவரி, 2018

விழுப்புரம் தலித் சிறுவன் கொலை கொடூரம்: நீடிக்கும் மர்மம்!

விழுப்புரம் கொடூரம்: நீடிக்கும் மர்மம்!மின்னம்பலம் : விழுப்புரத்தில் தலித் சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில் இன்று (பிப்ரவரி 26) சம்பவ இடத்துக்குச் சென்ற தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் முருகன் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்திலிருந்து 56 கிலோமீட்டர் தொலைவில் திருக்கோவிலூர் வெள்ளம்புதூர் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் 150 தலித் குடும்பங்கள் உட்பட 300க்கும் குடும்பங்கள் உள்ளன. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்தான் தலித் பெண் ஆராயி. இவரது கணவர் ஏழுமலை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் தனது 6 பிள்ளைகளுடன் ஆராயி வசித்துவந்தார். பிள்ளைகளை வயிற்றுப் பிழைப்புக்காகப் பல்வேறு இடங்களுக்குக் கூலி வேலைக்கு அனுப்பியுள்ளார்.
முதல் மகன் பாண்டியன் பெங்களூருவில் கூலி வேலை பார்த்து வீட்டுக்குப் பணம் அனுப்பிவந்துள்ளார். முதல் நான்கு பிள்ளைகளும் வெவ்வேறு இடங்களில் உள்ள நிலையில் தனம் என்கிற எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது மகளுடனும், நான்காம் வகுப்பு படிக்கும் ஒன்பது வயது மகன் சமயனுடனும் ஆராயி வசித்துவந்துள்ளார்.

கொடூரமான தாக்குதல்
இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி இரவு தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஆராயி மற்றும் அவரது இரு பிள்ளைகளையும் மர்ம கும்பல் ஒன்று வீடு புகுந்து சரமாரியாகத் தாக்கியுள்ளது. படுகாயமடைந்த அவர்கள் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்துள்ளனர்.
வழக்கமாக 6 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார்கள். ஆனால் அன்று ஏன் 7 மணியாகியும் எழவில்லை என்று அச்சமடைந்த, பக்கத்து வீட்டைச் சேர்ந்த தனத்தின் சித்தி சுகந்தி தனது மகள் சினேகாவை அவர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்துவருமாறு அனுப்பியுள்ளார்.
இதையடுத்துதான் ஆராயியும் குழந்தைகளும் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தது தெரியவந்துள்ளது. இவர்களில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஆராயியும் அவரது மகளும் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடியிருக்கிறார்கள். சிறுமி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
உயிருக்குப் போராடியவர்கள் இருவரும் உடனடியாக திருக்கோயிலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்பு அங்கிருந்து ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் அபாயக் கட்டத்தில் இருந்து மீண்டு, நேற்று லேசாக நினைவு திரும்பியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சிறுமி தனம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாகவும், உடலில் பலத்த காயம் ஏற்பட்ட அவருக்கு 12 தையல்கள் போடப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். சம்பவம் நடந்து 4 நாட்கள் ஆகியும் இக்குற்றச் செயலில் ஈடுபட்டது யார் என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது. சந்தேகத்தின் பேரில் சிலரைக் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
நீடிக்கும் மர்மங்கள்
ஏழுமலை உயிருடன் இருந்த காலத்தில் அவருக்குச் சொந்தமான 14 சென்ட் நிலத்தை அவரது வீட்டிற்கு எதிரே உள்ள நிலத்தின் உரிமையாளர் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த தேவதாஸ் என்கிற ராஜேந்திரன் என்பவருக்கு விற்றுள்ளார். இது தொடர்பாக அப்போதிலிருந்தே நிலத் தகராறு இருந்துள்ளது. தங்களுக்கு நான்கு சென்ட் நிலத்தைப் பின்னாளில் திருப்பித்தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆராயி மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் அவர்களே தாக்கியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.
அக்கிராமத்தில் வன்னிய சமூகத்துக்கும் தலித் சமூகத்துக்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ’வன்னியர்கள்தான் இதைச் செய்திருக்க வேண்டும்’ என்றும்; வன்னிய சமூகத்தினர் ’தலித் மக்களே இதை செய்திருப்பார்கள்’ என்றும் ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திவருகின்றனர்.
“இது சாதி தொடர்பான பிரச்சினையில்லை. இதில் வேறு சாதியினர் சம்பந்தப்பட்டிருப்பதாக உள்ளூர்க்காரர்களும் குற்றம் சொல்லவில்லை. 5 தனிப்படைகளை அமைத்து விசாரணை நடைபெற்றுவருகிறது. கிட்டத்தட்டக் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம்” என மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார். பிரதமர் வருகையின் காரணமாக விசாரணையில் தொய்வு ஏற்பட்டது என்றும் தற்போது முழு வீச்சில் விசாரணை நடைபெற்றுவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஆராயியின் மூத்த மகன் பாண்டியன், “நிலத் தகராறு விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் ராஜேந்திரன் இதைச் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. ஆனால் உறுதியாக எந்தத் தகவலும் இல்லை” என்று கூறியுள்ளார். இதே பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் இரு முறை நடந்துள்ளதாகவும், ஆனால் தற்போது உயிரிழப்பு ஏற்பட்டதால் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவ இடத்தைத் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத்தலைவர் முருகன், எஸ்பி ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாக முருகன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இளவரசன், சங்கர் என ஆணவக் கொலைகள் தொடர்கதையாகிவரும் நிலையில் தற்போது இந்தச் சம்பவமும் அரங்கேறியுள்ளது.

கருத்துகள் இல்லை: