சனி, 13 ஜனவரி, 2018

சுப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் ஜாதி இல்லையா? புரிஞ்சுண்டு நன்னா பாடுரேடி கொழந்த... என்பது என்ன மொழி?

Kavin Malar :பாடகர் ஸ்ரீனிவாஸின் பதிவு ஒன்றை வாசித்தேன். இசைக்கு சாதி கிடையாது. அதில் சாதியைப் புகுத்தாதீர்கள் என்கிறார்.
பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்திய CASTELESS COLLECTIVE குழுவினரின் இசை நிகழ்ச்சியின் பிரம்மாண்ட வெற்றி பலரை எரிச்சலூட்டி இருப்பதை உணர முடிகிறது.
இசைக்கு சாதி கிடையாது என்கிறார் ஸ்ரீனிவாஸ். பல பத்தாண்டுகளாக இங்கே நடக்கும் மார்கழி சபாக்களில் சாதி இல்லையா? கர்நாடக சங்கீதத்தில் சாதி இல்லையா? சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் வந்து பேசும்போதும் ’நன்னா பாடுறேடி கொழந்த’ என்று சொல்வதில் சாதி இல்லையா? அசுர வாத்தியங்கள் என்று சிலவற்றை ஒதுக்கிவைத்து குறிப்பிட்ட சாதியினர் மட்டும் வாசிக்க, ஆதிக்க சாதிகள் வாசிக்காமலேயே இருக்கிறார்களே…அதில் சாதி இல்லையா?
பறை எனும் ஆதி இசைக்கருவியை ஒதுக்கி ஒரு சாதியினருக்கு என்று வைத்ததில் சாதி இல்லையா?

இன்றைக்கு தலித் மக்களின் கானாவுக்குக் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் ஏன் உங்களுக்கு உறுத்துகிறது. அவர்கள் ஏற்படுத்திக்கொண்ட மேடையில் அவர்கள் பாடுகிறார்கள். மியூஸிக் அகாடமிக்கெல்லாம் கூட இன்னும் வந்துவிடவில்லை கானா. டி.எம்.கிருஷ்ணா ஆல்காட் குப்பத்திற்கு கர்நாடக சங்கீதத்தைக் கொண்டு வந்து தருகிறார் என்றாலும் உழைக்கும் மக்களின் கானம் இதுவரை சபாக்களில் ஒலிக்காமல் இருப்பதில் சாதி இல்லையா? இந்த மார்கழி சபாக்களில் இடமில்லாததால் இங்கே பொங்கு தமிழ் பண்ணிசை என்று தமிழிசை கச்சேரிகள் நடத்தப்பட்டதை நீங்கள் அறிவீர்களா?

இசைக்கல்லூரிகளில் நிலவும் தீண்டாமையை நீங்கள் அறிவீர்களா? தலித் மாணவர்களை பாகுபாட்டோடு நடத்தும் இசைப் பேராசிரியர்களை அறிவீர்களா? அந்த மாணவர்களுக்கு ஆதரவாக இருந்ததற்காக திருவையாறு இசைக் கல்லூரி முதல்வர் ஜெ ஆட்சியில் பணிமாற்றம் செய்யப்பட்டது உங்களுக்குத் தெரியுமா? அதன் காரணமாக அங்கே மாணவர் போராட்டம் வெடித்தது உங்களுக்குத் தெரியுமா? தலித்தாகப் பிறந்துவிட்டதாலேயே இசைக்கல்லூரியில் எம்.ஏ. முடித்திருந்தாலும் இசை ஆசிரியராக எங்கும் பணிக்கு செல்ல முடியாதவர்களை நானறிவேன். நீங்கள் அறிவீர்களா?
சினிமாவில் சாதி இல்லையா? சினிமாவிலும் ‘தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி’ என்று டப்பாங்குத்து பாடல் என்றுதான் அடித்தட்டு மக்களின் பாடலை கேலி செய்திருந்தார்கள். ‘மகாகணபதிம்’ பாடும்போது திருநீறு சகிதம் பக்திப்பழமாக, ஒழுக்கமாக சுத்தமாகப் பாட வைக்கப்படும் ஜே.கே.பி, தண்ணித்தொட்டியில் மட்டும் வேட்டி அவிழ பாடவைப்பதில் சாதி இல்லையா?
இசைக்கு சாதி இல்லையெனில் இக்கேள்விகளுக்கு பதிலுண்டா?
கானா பாடல்கள் என்றால் காத தூரம் ஓடுவது உங்கள் தேர்வாக இருக்கலாம். இசைக்கு நீங்கள்தான் அத்தாரிட்டி போல இசைக்கு சாதி இல்லை. Please leave music out of it ‘ என்று நீங்கள் சொல்வதை அப்படியே திருப்பி நாங்கள் சொல்லலாமா?
தோழர் கவின்மலரின் முகநூல் பக்கத்திலிருந்து பகிரப்பட்டது

கருத்துகள் இல்லை: