வியாழன், 11 ஜனவரி, 2018

ஸ்டாலின் : ஒவ்வொரு தமிழர் தலையிலும் 80000 ஆயிரம் ரூபாய் கடன் சுமை ,,,, கமிசன் அரசின் அசுர சாதனை ...

ஒவ்வொரு தமிழர் தலையிலும் ரூ.80 ஆயிரம் கடன்!
மின்னம்பலம்: சட்டப்பேரவையில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக நிதிநிலையைச் சுட்டிக்காட்டி, ஒவ்வொரு தமிழர் தலையிலும் ரூ.80 ஆயிரம் கடன் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடந்துவருகிறது. இன்றைய ஜனவரி 11 விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.
“தமிழக அரசு மத்திய அரசுக்கு நன்றிக் கடன் பட்டிருப்பதுபோல், ஆளுநர் உரையில் எங்கு பார்த்தாலும் மத்திய அரசுக்கு நன்றிகள் தான் உள்ளது” என தெரிவித்த அவர், தமிழகத்திற்குத் தேவையான நிதியைப் பெறவே மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளதாக கூறும் தமிழக அரசு இதுவரை பெற்ற நிதி என்ன? என்றும் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசுடன் நாங்கள் கூட்டணியில் இல்லை, எவ்வளவு நிதியை பெற முடியுமோ அதை போராடி பெற்று வருகிறோம் . திமுக மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தபோது பெற்ற திட்டங்கள் என்ன என்று அவர் பதில் கேள்வியெழுப்பினார்.
“காவிரி நடுவர் மன்றம், பொடா சட்டம் ரத்து, தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து, சேலம் ரயில்வே கோட்டம், மத்திய அரசு பணியிடங்களில் 27% இட ஒதுக்கீடு” என பல்வேறு திட்டங்களை ஸ்டாலின் பட்டியலிட்டார்.
ஜெயக்குமாரின் குறுக்கீடு
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஜெயக்குமார், “முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த சாதனைகளையும் திமுக சாதனை பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கள்” என்றார். இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பேசிய ஸ்டாலின், “அவையில் தவறான தகவல்களைப் பதிவு செய்ய வேண்டாம். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைத் தீவிரவாதி என சொன்னது உங்கள் தலைவர்தான்” என்று பதிலளித்தார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் தங்கமணி, ஜெயலலிதா தீவிரவாதத்துக்கு எதிரானவர் என்றாலும் ஈழத் தமிழர் நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியுடன் இருந்தவர் எனத் தெரிவித்தார். அப்போது, அதிமுக - திமுக உறுப்பினர்களிடையே கூச்சல் நிலவியதையடுத்து சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு இரு தரப்பையும் சமாதானம் செய்தார்.
ஒவ்வொருவர் தலையிலும் ரூ 80 ஆயிரம் கடன்
தொடர்ந்து பேசிய ஸ்டாலின், “ தமிழகத்தின் நிதி நிலை 20 ஆண்டுகள் பின் தங்கியுள்ளது. தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது என்பதை ஆளுநர் தனது உரையில் ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்து ஒவ்வொரு தமிழர் தலைக்கும் ரூ. 80 ஆயிரம் கடன் சுமை உள்ளது” என்றும் விமர்சித்தார். ஆளுநர் உரை வெற்று வார்த்தை ஜாலம், காகிதப் பூ என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
கவன ஈர்ப்பு தீர்மானம்
வெளிமாநிலங்களில் கல்வி பயிலும் தமிழக மாணவர்களுக்குப் பாதுகாப்பு இல்லாதது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தையும் அவர் கொண்டு வந்தார். அப்போது, “வெளிமாநிலங்களில் படித்து வரும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்திட வேண்டும். எனவே, மருத்துவக் கல்விக் கழகத்தில் இதற்கென்று ஒரு தனிப் பிரிவை ஏற்படுத்தினால்தான், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்” என அவர் வலியுறுத்தினார்

கருத்துகள் இல்லை: