புதன், 10 ஜனவரி, 2018

போக்குவரத்து ஊழியர்கள் பெண்கள் கைக்குழந்தைகளுடன் வந்து போராட்டத்தில் குதித்தனர்


மின்னம்பலம்: போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் 6ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், பொதுமக்களின் பாதிப்பு கணிசமாகக் கூடியுள்ளது.. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு என்ன என்னும் கேள்வி பூதாகரமாக எழுந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்துவருகின்றனர். கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் வகையில், புதிய ஒப்பந்தத்தை உருவாக்க வலியுறுத்திப் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்துக் கோட்ட தலைமை அலுவலகங்கள் முன்பும் குடும்பத்துடன் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெண்கள் கைக்குழந்தைகளுடன் வந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். விருதுநகர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் குடும்பத்துடன் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். பயணிகளைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு ஏன் மறுக்கிறது என்று போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இன்று பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 154 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சில இடங்களில் போலீசாருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விளக்கம் கேட்டு போக்குவரத்துத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுரை மாவட்டத்தில் 4500 பேருக்கும், கோவையில் 11819 பேருக்கும் தஞ்சையில் 2100 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் கவுரவம் பார்க்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தொமுச பொதுச் செயலாளர் சண்முகம், சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் ஆகியோர் கூறியுள்ளனர்.
இதற்குப் பதிலளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “ அரசு ஊழியர்களுக்கு இணையாகத் தொழிலாளர்களும் ஊதியம் பெறும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதை ஏற்றுத் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் “என்று கூறியுள்ளார். இதற்குத் தொழிற்சங்கங்கள் மறுப்புத் தெரிவித்துள்ளன.
எனவே, இனி பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று கூறியுள்ள தமிழக அரசு, பணிக்குத் திரும்பாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது
இந்நிலையில், நாளை தொழிலாளர் நல அலுவலகத்தை முற்றுகையிடவுள்ளதாகவும், போராட்டத்தைக் கைவிட முடியாது என்றும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இது குறித்து ஓட்டுநர் ஒருவரிடம் கேட்ட போது,”இதுதொடர்பான விசாரணை நாளை மூன்று நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வரவுள்ளது. நாளை என்ன தீர்ப்பு வழங்கப்படுகிறது, அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பொறுத்தே போராட்டம் வாபஸ் பெறுவது குறித்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்யவுள்ளன. தற்போது வரை போராட்டத்தை வாபஸ் பெறும் வகையில் எந்த எண்ணமும் இல்லை. ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் பொங்கலுக்கு சிறப்புப் பேருந்துகளை நிச்சயமாக இயக்க முடியாது.
தற்போது 50 சதவிகிதப் பேருந்துகள், 80 சதவிகித பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு கூறுவதெல்லாம் பொய்” என்று கூறினார்.
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும், அரசுக்கும் இடையே உள்ள பிரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள்தான். எனவே இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று கூறும் பயணிகள் பேருந்துக்காகக் காத்திருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: