வியாழன், 11 ஜனவரி, 2018

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தர் நியமனம்... முடிவுக்கு வருகிறது வேலை நிறுத்தம்?

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தர் நியமனம்: பஸ் ஸ்டிரைக் வாபஸ் ஆகிறதா?மாலைமலர் : ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நடுவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் நலனை கருதி வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #TNBusStrike #BusStrike
சென்னை: அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 8-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இதுதொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அரசுத்தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், போராட்டம் நடத்திய காலத்திற்கு சம்பளம் வழங்கப்பட மாட்டது, வழக்குப்பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை உண்டு என தெரிவிக்கப்பட்டது. அரசின் இந்த முடிவுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கு மட்டும்தான் வழக்கு தொடரப்பட்டது என நீதிபதிகள் கூறினர். இதனையடுத்து, போராட்ட காலத்திற்கு ஊதியம், வழக்குப்பதிவு உள்ளிட்ட விவகாரங்களில் பரிசீலனைக்கு பின்னர் முடிவெடுக்கப்படும் என அரசு வழக்கறிஞர் கூறினார்.


இழுவையில் இருக்கும் 0.13 காரணி ஊதிய உயர்வு குறித்து இரு தரப்புக்கும் இடையே மத்தியஸ்தரை நியமிக்க தயார் என நீதிபதிகள் கூறினர். இதனையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை நடுவராக நியமித்து ஐகோர்ட் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

2.57 காரணி ஊதியம் தொடர்பாக மத்தியஸ்தர் முடிவெடுப்பார் என்றும், எந்த தேதியிலிருந்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதை அவரே முடிவெடுப்பார் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை அறிக்கையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.

நீதிமன்ற உத்தரவை அடுத்து, தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய தொழிற்சங்க வழக்கறிஞர், நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம். மக்கள் நலன் கருதி, நீதிமன்ற உத்தரவை மதித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மத்தியஸ்தர் நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம் ஊதிய உயர்வு பிரச்சனைக்கு ஒரு வழி பிறந்துள்ளதாக சி.ஐ.டி.யு கருத்து தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. உறுதியாக போராடிய தொழிலாளர்களுக்கு நன்றி. ஒத்துழைத்த பொதுமக்களுக்கும் நன்றி என மார்க்சிஸ்ட் எம்.பி டி.கே ரங்கராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: