வெள்ளி, 12 ஜனவரி, 2018

வடிவேலு vs எம் ஆர் ராதா.. வடிவேலு மனப்பான்மை The vadivelu Syndrome என்கிற ஒன்று உருவாகிவிட்டது

Shalin Maria Lawrence : இங்கே அரசியல் நையாண்டி என்றால் அதிக புழக்கத்தில் இருப்பது நடிகர் வடிவேலுடைய மீம்கள்தான் .எந்த ஒரு அரசியல் நிகழ்வு நடந்தாலும் வடிவேலு டெம்ப்பிளேட்டுகள்தான் அதிக புழக்கத்தில் இருக்கின்றன.
இந்த வடிவேல் டெம்ப்பிளேட்டுகள் தீவிர நகைச்சுவையானவை ,அதிக சிரிப்பை வரவழைக்க கூடியவை ஆனால் இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இது Reactive (எதிர்வினை) நகைச்சுவையை சேர்ந்தது.
"அவன் குத்துறான் நான் கத்துறேன்" வகையறா இது. இதில் பகுத்தறிவிர்க்கோ ,கருத்தியலுக்கோ இடம் இல்லை.

பொதுவாக படங்களில் வடிவேலு என்ன கதாபாத்திரங்களில் வருவார் ? வேலை வெட்டி இல்லாமல் பொழுதை கழிப்பவர் ,எளிதாக முட்டாளாகப்படுபவர் போன்ற வேடங்கள்தான்.
இதை அடிப்படையாக கொண்ட நய்யாண்டிகளும் பெரிதாக ஒன்றும் அதிர்வலைகளை ஏற்படுத்த கூடியது இல்லை.இன்னும் சொல்ல போனால் ஒரு மோசமான நிகழ்வை கூட காமெடியாக்கி அதை நீர்த்து போக செய்து அதனோடு கருத்தியல் ரீதியாக மோதவிடாமல் வெறும் நேர விரயம் மட்டுமே செய்ய வல்லது.
வடிவேல் படங்கள் போட துவங்கிய இளைஞர்கள் தங்களை வடிவேலாகவே என்ன துவங்கினார்கள் ,வடிவேலாகவே மாறிபோனார்கள் . பாதிக்கப்பட்டவர்களாக மட்டுமே இருக்க துவங்கினார்கள்.அவர்க தீர்வுகளை பற்றி யோசிப்பதே இல்லை.
ஆனால் இது போன்ற நையாண்டி ஒரு நீண்ட ஓட்டத்தில் எந்த பயணம் தராது .இது வெறும் Information wastage. தகவல் குப்பை.

இதுவே எம் ஆர் ராதாவின் காமெடிகள் எப்படி இருக்கும் ?
அது அறிவை ,அதிலும் பகுத்தறிவை தூண்டுபவையாக இருக்கும்.
எம் ஆர் ராதாவின் கதாபாத்திரங்கள் எப்படி இருக்கும் ?
படித்தவர் ,பாரின் ரிட்டர்ன் ,கெட்டிக்காரன் வகையராதான் பெரும்பாலும் அவருடையது.
அவர் நுட்பம் எதிராளியிடம் கேள்வி கேட்டு அவர்களை தோற்கடிப்பது. பகுத்தறிவான கேள்விகள்.
சிரிப்பும் வரும் ,சிந்தனையும் தூண்டும் ,எதிராளிகளி நாக் அவுட் செய்யும்.
ஆனால் இந்த கதாபாத்திரம் எல்லாமே பெரும்பாலும் ஒரு கெட்ட கதாபாத்திரமாக சித்தரிக்கப்படும் .கேள்வி கேட்பவன் கெட்டவன் போன்ற ஒரு பிம்பத்தை அப்பொழுதைய சினிமா உருவாக்கியது.
இப்பொழுதும் அப்படித்தான் ,சிரிக்க வைக்கும் முட்டாள்களுக்கு கிடைக்கும் மரியாதை கேள்வி கேட்கும் சிந்தனையாளர்களும் கிடைப்பதில்லை .
இங்கே வடிவேலு மனப்பான்மை (The vadivelu Syndrome )என்கிற ஒன்று உருவாகிவிட்டது . எனக்கு தீயது நடக்கும் அதை நான் கிண்டல் செய்துவிட்டு கடந்துவிடுவேன் என்பது தான் அது.
நம்மை ஆள்பவர்களும் ,அரசியல்வாதிகளும் நம்மை வடிவேலு கதாபாத்திரம் போல்தான் பார்க்கின்றனர். இவர்கள் கிண்டல் செய்வார்கள் , கூச்சலிடுவார்கள் ,மறுநாள் வேறு வேலை பார்க்க சென்றுவிடுவார்கள் என்பது அவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது.
அரசியல் வாதிகள் நீர்போல் ,நாம் பாத்திரம்போல் .நம் வடிவத்திற்கேற்பவே நாம் அவர்களை பெறுகிறோம்.
இங்கு வடிவேலாய் இருந்து சிரிப்பு மூட்டுகிறோமா இல்லை எம் ஆர் ராதவாக இருந்து கேள்வி கேட்டு எதிராளியின் மண்டைக்குள் பூச்சியாய் நெளிகிறோமா என்பதை பொறுத்தே நமது அரசியல் எதிர்காலம் இருக்கிறது.
ஷாலின்

1 கருத்து:

Thayalini சொன்னது…

What a mind blowing point. Really worth for all to consider.