வெள்ளி, 12 ஜனவரி, 2018

பெரியார் விருது ..விஜய் சேதுபதி, கவிஞர் செவ்வியன், கோபி நயினார், பறையிசை வேலு ஆசான்....

பெரியார் விருதுகள்: களைகட்டும் திருவிழா!மின்னம்பலம்: தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் வழங்கும் 2018ஆம் ஆண்டுக்கான பெரியார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் ஆண்டுதோறும் இயல், இசை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, பொங்கல் திருநாளையொட்டி பெரியார் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டு இயல், இசை, நாடகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குகின்ற தமிழர்களுக்குப் பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 24 ஆண்டுகளாக இயல், இசை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி, சமூகத்தின் முற்போக்கு வளர்ச்சிக்குப் பாடுபட்டுவரும் தமிழர்களைத் தேர்ந்தெடுத்து தை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளையொட்டி ‘பெரியார்’ பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் பலதுறைகளில் சிறந்து விளங்குகின்ற தமிழர்களுக்குப் ‘பெரியார் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவானது ஜனவரி 15, 16 ஆகிய இரண்டு நாள்கள் சென்னை பெரியார் திடலில் நடைபெறும் திராவிடர் திருநாள் விழாவில் இவ்விருதுகள் வழங்கப்படவுள்ளன.”

மேலும், “இவ்விழாவில் நடிகர் விஜய் சேதுபதி, கவிஞர் செவ்வியன், திரைப்பட இயக்குநர் கோபி நயினார், பறையிசைக் கலைஞர் வேலு ஆசான், ஓவியர் ஹாசிப்கான் ஆகியோருக்கு முதல் நாள் (15.01.2018) விழாவிலும், இயக்குநர் நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன், இன்னிசை ஏந்தல் திருபுவனம் ஆத்மநாதன், இயக்குநர் ஒளிப்பதிவாளர் செழியன், கவிஞர் சல்மா, ஓவியர் அபராஜிதன் ஆகியோருக்கு இரண்டாம் நாள் (16.01.2018) விழாவிலும் ‘பெரியார் விருது’ வழங்கப்படவுள்ளது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று விருது வழங்கவிருக்கிறார். விருது பெறுவோர் அனைவருக்கும் வாழ்த்துகள்!” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: