சனி, 2 டிசம்பர், 2017

அம்ருதா + ஜெயலலிதா + ரஞ்சனி + சைலஜா + சசிகலா + லலிதா .. பல உண்மைகளும் பல பொய்களும் ...

மின்னம்பலம் : “ஜெயலலிதாவின் மகள் என அம்ருதா சர்ச்சையைக் கிளப்பியபடி இருக்கிறார். அம்ருதாவை இயக்குவது சசிகலா குடும்பம் என்ற பேச்சு பெங்களூருவிலிருந்தே கிளம்பியிருக்கிறது.
இது சம்பந்தமாக நம்மிடம் பேசியவர்கள், ‘ஜெயலலிதாவின் சகோதரி என்று சொல்லிவந்த சைலஜாவின் மகள்தான் அம்ருதா. இவ்வளவு நாளாக ஜெயலலிதாவைப் பெரியம்மா எனச் சொல்லிவந்தவர்,
இப்போது அம்மா எனச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். அற்குக் காரணமாக எல்லோரும் பெங்களூருவில் இருக்கும் ரஞ்சனி ரவீந்திரநாத்தைத்தான் சுட்டிக் காட்டுகிறார்கள்.
இந்த ரஞ்சனி ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவுக்கு உறவுக்காரர். இவர் அடிக்கடி கார்டன் பக்கம் வந்து போனபடிதான் இருந்திருக்கிறார். அதனால் சசிகலாவுடன் நல்ல நட்பும் ஏற்பட்டிருக்கிறது.
ஒரு மாதத்துக்கு முன்பு பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்று சசிகலாவையும் இந்த ரஞ்சனி சந்தித்தாராம். சிறைக்குள் இருந்த சசிகலாவுடன் சில விஷயங்களைப் பேசியிருக்கிறார். ரஞ்சனியும் தற்போது அம்மா என உறவு கொண்டாடும் அம்ருதாவும் ஆரம்பத்திலிருந்தே நெருக்கமாக இருந்தவர்கள்தான். ரஞ்சனி சிறைக்குள் சசிகலாவைச் சந்தித்துவிட்டு வந்த பிறகு, அம்ருதாவை அழைத்துக்கொண்டு, ஜெயலலிதாவின் அத்தை மகளான லலிதாவை சந்தித்திருக்கிறார்.
‘ஜெயலலிதாவுக்கு ஒரு குழந்தை பிறந்தது உனக்கும் தெரியும். அந்தக் குழந்தை யாருன்னு உனக்கு தெரியுமா? நம்ம அம்ருதாதான் அந்தக் குழந்தை. இது சம்பந்தமாக அம்ருதா கோர்ட்டுக்கு போகப் போறா. அவளுக்கு நானும் துணையா இருக்கப் போறேன். அம்ருதா உடனடியாக டி.என்.ஏ. டெஸ்ட் எடுக்கச் சொல்லியும் கேட்கப் போறா..’ என்று சொல்லியிருக்கிறார்.


அதற்கு லலிதா, ‘ஜெயலலிதா புள்ளை யாருன்னு கண்டுபிடிச்சா சந்தோஷம்தான். கண்டுபிடிங்க.. ஆனா நான் எங்கேயும் வரலை...’ என ஒதுங்கிக்கொண்டாராம்.
அதன் பிறகு, ரஞ்சனி துணையோடுதான் டெல்லி வரை போனார் அம்ருதா. இப்போதும் ரஞ்சனி கட்டுப்பாட்டில்தான் அவர் இருக்கிறார்.
ரஞ்சனியைப் பொறுத்தவரை, சசிகலா என்ன சொல்கிறாரோ அதைச் செய்யும் இடத்தில் அவர் இருக்கிறார்.
ஜெயலலிதா குடும்ப ரகசியங்கள் தெரிந்த ரஞ்சனி மூலமாக அம்ருதாவைக் களத்தில் இறக்கியிருக்கிறார் சசிகலா. இதனால் சசிகலாவுக்கு என்ன லாபம் எனச் சிலர் கேட்கிறார்கள். இப்போது, கட்சி ஏற்கெனவே சசிகலா கட்டுப்பாட்டை விட்டுப் போய்விட்டது.
சொத்துக்களுக்கு ஒருபக்கம் தீபா உரிமை கொண்டாடிவருகிறார். ஜெயலலிதாவின் நேரடியான வாரிசு என ஒருவர் வந்துவிட்டால், சொத்து, கட்சி இரண்டையும் மீட்டு எடுத்துவிடலாம் என சசிகலா நினைக்கிறார்.
ஜெயலலிதாவின் வாரிசு என்று சொன்னால், கட்சிக்குள்ளும் எந்த குழப்பமும் வராது. சொத்துக்குச் சொந்தம் கொண்டாடி வருபவர்களும் அமைதியாகிவிடுவார்கள். அம்ருதாவைப் பொறுத்தவரை தன்னை மீறி எதுவும் செய்ய மாட்டார். அதனால், இந்த நேரத்தில் அவர் வெளியே வருவது நல்லதுதான் என சசிகலா நினைக்கிறார். அம்ருதா நீதிமன்றத்துக்குப் போனது, ஜெயலலிதா வாரிசு எனச் சொன்னது என எதற்குமே இதுவரை பழனிசாமியோ, பன்னீரோ வாய் திறக்கவில்லை. இவ்வளவு நாளாக சசிகலா குடும்பத்தை விமர்சனம் செய்தவர்கள், இப்போது அம்ருதாவைப் பார்த்து அமைதியாகிவிட்டார்கள். அதனால், இதே ரூட்டில் பயணிக்கலாம் என சசிகலா திட்டமிடுகிறார்.
ஜெயலலிதாவுக்கு வாரிசு என்பது இருக்கிறதா, அப்படி இருந்தால் அது அம்ருதாவா என்பதெல்லாம் அடுத்தடுத்து எழும் கேள்விகள். அதற்கெல்லாம் பதில் சொல்லக்கூடியது டி.என்.ஏ. சோதனைதான். அது நடந்தால்தான் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்”

கருத்துகள் இல்லை: