புதன், 29 நவம்பர், 2017

மணல் குவாரிகளை ஆறு மாதத்திற்குள் மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு! மதுரை உயர்....


மின்னம்பலம் :மணல் குவாரிகளை ஆறு மாதத்துக்குள் மூட வேண்டுமென்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, நல்லகண்ணு, வைகோ உட்பட தமிழகக் கட்சித்தலைவர்கள் பலர் வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர்.
மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனை செய்ய அனுமதிகக்க்கோரி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ராமையா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். தங்களிடமிருந்து பறிமுதல் செய்த லாரிகளையும் அதிலிருந்த மணலையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், தூத்துக்குடி துறைமுகத்தில் இருக்கும் மலேசிய மணலை விற்பனை செய்ய அனுமதித்து உத்தரவிட்டார். அதோடு, தமிழகத்திலுள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்திற்குள் மூட வேண்டுமென்றும், புதிய குவாரிகளை திறக்கக்கூடாது என்றும், சட்டவிரோதமாக மணல் அள்ளுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்றும், இந்த உத்தரவில் தெரிவித்திருந்தார்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை, தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் வரவேற்றிருக்கின்றனர்.
வைகோ : மணல் குவாரிகளை மூட உத்தரவிட்ட மதுரை உயர் நீதிமன்றக்கிளையின் உத்தரவை வரவேற்கிறேன். மாநில அரசின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கியுள்ளது.
நல்லகண்ணு : உயர் நீதிமன்றக்கிளையின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல் முறையீடு செய்யக்கூடாது. மணல் குவாரியை மூடும் உத்தரவை, உடனடியாக அரசு அமல்படுத்த வேண்டும்.
முத்தரசன் : இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் கட்டுமானப்பணிகள் பாதிக்காதவகையில், குறைந்த விலையில் மணல் கிடைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
துரைமுருகன் : எல்லா குவாரிகளையும் மூடுவதென்பது நடைமுறையில் சாத்தியமில்லை. ஏனென்றால், இந்த மணலை நம்பித்தான் கட்டுமானப்பணிகள் இருக்கின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மணற்கொள்ளை நடந்ததாலேயே, உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை இட்டிருக்கிறது. இதனை கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரும் எந்த நடவடிக்கையையும், இந்த மாநில அரசு மேற்கொள்ளாது.
அன்புமணி ராமதாஸ் : கடந்த 15 ஆண்டுகளில் மணல் விற்பனை மூலமாக தமிழக அரசுக்கு 2000 கோடி வருமானம் கிடைத்துள்ளது. ஆனால், இதில் ரூ. 5 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. இதுபற்றிய சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். ஆற்று மணல் குவாரிகள் தவிர, கிரானைட் குவாரிகளையும் படிப்படியாக மூட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பும் வரவேற்கப்பட வேண்டியதுதான்.
நீதிமன்றத்தின் மணல் குவாரிகளை மூடும் உத்தரவு குறித்து, அதிமுகவினர் யாரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

கருத்துகள் இல்லை: