புதன், 29 நவம்பர், 2017

அன்புச்செழியனால் பாதிக்கப்பட்ட ‘காக்கா முட்டை’ மணிகண்டன்

tamilthehindu :ஸ்கிரீனன் -அன்புச்செழியன்.. தமிழ் சினிமா உலகில் சமீப காலமாக வேறு ஒரு கோணத்தில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயராக இருக்கிறது. அசோக்குமார் தற்கொலை அன்புச்செழியன் பற்றி அதிகமாகப் பேசவைத்திருக்கிறது. அன்புச்செழியன் கைதாவாரா என்பது நமக்குத் தெரியாது. ஆனால், அன்புச்செழியனால் ஓர் இயக்குநர் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது சினிமா வட்டாரத் தகவலின்படி நமக்குத் தெரியவந்துள்ளது.
காக்காமுட்டை என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்தவர். குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற குறைந்த பட்ஜெட்டில் வெற்றிப் படங்களைத் தந்தவர். அவர் அன்புச்செழியனால் தற்போது ஆசை ஆசையாக வாங்கிய சினிமா உபகரணங்களைக்கூட விற்றுவிட்டு நிற்கிறாராம். “ஆண்டவன் கட்டளை படத்தை ஃபர்ஸ்ட் காப்பி முறையில் ரூ.5.5 கோடிக்கு செய்து கொடுப்பதாகவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மணிகண்டனுக்கு தனியாக சம்பளம் ஏதும் பேசப்படவில்லை. விஜய் சேதுபதிக்கு சம்பளம் கொடுத்ததுபோக மிச்சமுள்ள பணத்தில்தான் அந்தப் படத்தை பண்ண வேண்டும் என்பதால் சம்பளம் பேசப்படவில்லையாம். ஆனால், அதற்கு மாற்றாக படத்தில் எந்த வகையான லாபம் வந்தாலும் அதில் 40% ஷேர் என்று மணிகண்டனுடன் அன்புச்செழியன் ஒப்பந்தம் செய்திருக்கிறார். இருந்த பணம் படத் தயாரிப்புக்கு மட்டுமே சரியாக இருந்துள்ளது. எல்லாவற்றிலும் ஷேர் என்ற அடிப்படையில் நம்பிக்கையுடனேயே வேலை பார்த்திருக்கிறார் இயக்குநர் மணிகண்டன்.

அதற்கு முந்தையப் படமான குற்றமே தண்டனையிலும் மணிகண்டனுக்கு சம்பளம் இல்லையாம். கடைசி நேரத்தில் இசைக்கு இசையமைப்பாளர் இளையராஜாவை பயன்படுத்தியதால் மணிகண்டனுக்கான சம்பளத்தை கட் செய்திருக்கிறார்கள்.
இந்தச் சூழலில், ஆண்டவன் கட்டளை படம் முடிந்தவுடன் அதை அன்புச்செழியனிடம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். அதைப் பார்த்த அன்பு, படம் நல்லா கமர்சியலாத்தான் இருக்கு.. ஆனா ஹீரோ – ஹீரோயின் ஆடிப்பாடுவதுபோல் ஒரு பாடல் வைத்தால் நன்றாக இருக்கும் எனக் கூறியிருக்கிறார். அதற்கு மணிகண்டனோ அது என்னோட பாலிசியே இல்ல என மறுத்திருக்கிறார். படம் அப்படியே ரிலீஸ் ஆனது. மணிகண்டனுக்காக விஜய் சேதுபதிகூட தனது சம்பளத்தில் கொஞ்சம் விட்டுக் கொடுத்தாராம். படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நன்றாக சென்றிருக்கிறது. அப்போது, மணிகண்டன் அன்புவை நேரில் சந்தித்திருக்கிறார். ஒப்பந்தப்படி தனக்குத் தர வேண்டிய 40% ஷேரைக் கேட்டிருக்கிறார். ஆனால், அன்புவோ படம் நல்லா போகவில்லை எனக் கூறியிருக்கிறார்.
அதன்பின்னரும் தொடர்ந்து 5 முறை அன்புச்செழியனை மணிகண்டன் சந்தித்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் அதே பதில்தான் மணிகண்டனுக்கு கிடைத்திருக்கிறது. இதற்கிடையில் வெளிநாட்டு உரிமை, டிவி உரிமை, தெலுங்கு ரைட்ஸ், உள்ளூர் தியேட்டர் வசூல் என அன்புவின் கல்லா மட்டும் நிரம்பியிருக்கிறது. இறுதியாக, செலவுக் கணக்கைத் தருமாறு கேட்டிருக்கிறார் மணிகண்டன். இதுவரை அந்த கணக்கு அவருக்கு கிடைக்கவே இல்லை என்கிறது மணிகண்டனின் நட்பு வட்டாரம்.
ஸ்க்ரிப்ட் எழுதுவது போன்ற சின்னசின்ன வேலைகளைச் செய்து தனது பணத் தேவைகளை பார்த்துக் கொண்டிருக்கிறாராம் அந்த இயக்குநர்.
மணிகண்டன் தற்போது ‘கடைசி விவசாயி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அந்தப் படமும் இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் கைமாறிவிட்டது. காரணம் கமர்சியல் விஷயங்களைச் சேர்க்கச் சொல்லி கேட்டிருக்கிறார்கள். 3 வெற்றிப்படங்களைத் தந்த பிறகும் பாட்டும் ஃபைட்டும் கேட்கும் சினிமா தயாரிப்பாளர்களை நினைத்தும் தனக்கு நியாயமாக சேர வேண்டிய 40% ஷேரை இன்னும் தராமல் இருக்கும் அன்புச்செழியனை நினைத்தும் மிகுந்த வேதனையில் இருக்கிறார் மணிகண்டன்” எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரையுலகின் புதிய முயற்சிகளுக்கு கடன், வட்டி, வட்டிக்குமேல் வட்டி மட்டுமல்ல அன்புச்செழியனின் இதுபோன்ற ஷேர் ஏப்பங்களும்தான் என்பதற்கு மணிகண்டன் ஒரு சாட்சி என மணியின் நண்பர் ஆவேசமாகக் கூறினார்.
முதல் படத்துக்குப் பின் ஆசை ஆசையாக வாங்கிய சினிமா உபகரணங்களைக்கூட அன்புவால் இழந்து நிற்கிறார் மணிகண்டன்.
hindu

கருத்துகள் இல்லை: