வியாழன், 30 நவம்பர், 2017

தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தி கிடையாது. நெடுஞ்சாலை துறை முடிவு!

மைல் கற்களில் இந்தி வேண்டாம்: நெடுஞ்சாலைத் துறை முடிவு!மின்னம்பலம் :தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் இந்தியில் எழுத வேண்டாம்’ என்று அதிகாரிகளுக்குத் தேசிய நெடுஞ்சாலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் வேலூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் இந்தியில் எழுதப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. மைல் கற்களில் இருந்த வாசகங்களும் கறுப்பு மை பூசி அழிக்கப்பட்டது.
இந்த நிலையில், சர்ச்சைகளைத் தவிர்க்கும் வகையில், தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் இந்தியைப் பயன்படுத்த வேண்டாம் என்று மாநிலங்களுக்கான தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளது. மைல் கற்களில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ள இந்தி வார்த்தைகளை அழிக்கவும், புதிய மைல் கற்களில் ஆங்கிலம் மற்றும் தமிழை மட்டுமே பயன்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 3,496 கிலோமீட்டர் சாலைகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய சாலை ஆணையத்தின் மொழிக்கொள்கையின்படி, 5 கிலோமீட்டர் தூரத்தை குறிக்கும் மைல் கற்களில் உள்ளூர் மொழி மற்றும் ஆங்கிலத்தையும், 1 மற்றும் 3 கிலோமீட்டர் தூரத்தை குறிக்கும் மைல் கற்களில் உள்ளூர் மற்றும் இந்தியைப் பயன்படுத்த வேண்டும். இந்தக் கொள்கை தமிழகத்தில் பின்பற்றப்படாத நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் வேலூர் பகுதியில் உள்ள ஒருசில மைல் கற்களில் இந்தியில் எழுதப்பட்டது. இதையடுத்து திமுக, பாமக, மதிமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: