வியாழன், 30 நவம்பர், 2017

கங்கை அமரன் ஆர் கே நகரில் நிற்க மறுப்பு ...

வெப்துனியா :சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இசையமைப்பாளர் கங்கை அமரனை நிற்க வைக்க பாஜக எடுத்த முயற்சி பலிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் சென்னை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, பாஜக வேட்பாளராக நடிகரும், இயக்குனரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் நிறுத்தப்பட்டார். அவரும் ஆவலுடன் ஆர்.கே.நகர் தொகுதியில் சூறாவளி பிரச்சாரம் செய்தார். நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆதரவெல்லாம் கேட்டார். அவர் ரஜினியின் வீட்டை விட்டு தாண்டுவதற்கு முன்பே ‘நான் யாரையும் ஆதரிக்கவில்லை’ என ரஜினி அறிக்கை வெளியிட்டது வேறு கதை.


அதோடு, பணப்பட்டுவாடா தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்தி உத்தரவிட்டது. இதில் கங்கை அமரன் விரக்தி அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரையே மீண்டும் வேட்பாளராக நிறுத்த பாஜக தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டதாம். ஆனால், முடியவே முடியாது.. ஆளை விடுங்கள் என கங்கை அமரன் தெறித்து ஓடிவிட்டாராம். அதனால்தான், புதிய நபரை நிறுத்த நட்சத்திர வேட்பாளர் ஒருவரை பாஜக தேடி வருகிறது. இதனால்தான், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான பாஜக வேட்பாளரை அறிவிக்க இவ்வளவு தாமதமாகி வருகிறது எனக்கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: