வெள்ளி, 1 டிசம்பர், 2017

24 வயதில் 18 வழக்குகள்! – வடசென்னை விஜி,,, CCTV Footage-


சென்னையில் நேற்று (29.11.2017) பட்டப்பகலில் ரவுடி விஜியைக் கொலை செய்த கும்பல், ரத்தம் படிந்த கத்தி, அரிவாளுடன் சர்வசாதாரணமாக சாலையில் நடந்துசெல்கின்றனர். சினிமா படப்பிடிப்பு என்று முதலில் கருதிய அப்பகுதி மக்களுக்கு, அது நிஜம் என்றதும் உள்ளுக்குள் உதறல் ஏற்பட்டிருக்கிறது.< சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, பல்லவன் நகரைச் சேர்ந்தவர் விஜி என்ற விஜயகுமார். 24 வயதாகும் இவர், காசிமேடு பகுதியில் படகு பழுதுபார்க்கும் வேலை செய்துவந்தார். அதன்பிறகு கஞ்சா சப்ளை செய்துவந்தார். அப்போது, வடசென்னையைக் கலக்கிவரும் பிரபல ரவுடி ஒருவருடன் விஜிக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் அவருக்கு கூலிப்படையாக செயல்பட்ட விஜி, அதன்பிறகு ரவுடி சாம்ராஜ்ஜியத்தில் கால்பதிக்கத் தொடங்கினார். கழுத்து நிறைய செயின்களுடன் லோக்கல் தாதாவாகவே விஜி செயல்பட்டுள்ளார். கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல், கொலை முயற்சி என பல வழக்குகள் அடுத்தடுத்து அவர் மீது பாய்ந்தன. வடசென்னை ரவுடிகளின் பட்டியலில் விஜியின் பெயர் இடம்பெற்றது. இதனால் போலீஸாரின் ரகசிய கண்காணிப்பு வளையத்துக்குள் விஜி இருந்துவந்தார்.
பிரபல கஞ்சா வியாபாரி ஒருவரின் உருவத்தை உடலில் பச்சை குத்தியபடி வடசென்னையில் வலம் வந்துள்ளார்.
எப்போதும் அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். வழக்குகள் தொடர்பாக காவல்நிலையம், நீதிமன்றம் என அலைந்துகொண்டிருந்த விஜியின் வளர்ச்சியைப் பிடிக்காமல் எதிரிகளும் உருவாகினர்.
இந்தச் சூழ்நிலையில்தான் பாரிமுனையில் உள்ள ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு வந்தார் விஜி.
விசாரணை முடிந்து வீட்டுக்குத் தனியாக அவர் சென்றுகொண்டிருந்தார். மண்ணடி, தம்புசெட்டி தெருவில் சென்றபோது 6 பேர் கொண்ட கும்பல், விஜியை வழிமறித்து சரமாரியாக வெட்டியது.
அவர்களிடமிருந்து தப்பிக்க விஜி ஓடினார். ஆனால், அந்தக் கும்பல் அவரை விடாமல் ஓட, ஓட விரட்டிச் சென்றபோது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்குள்ள ஒரு வீட்டுக்குள் விஜி புகுந்தார். அப்போதுகூட விடாமல் அந்தக் கும்பல் விஜியை வெட்டிவிட்டு தப்பிச் சென்றது.
ரத்த வெள்ளத்தில் மிதந்த விஜியை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.
ஆனால், அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓடினர்.
இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீஸார், விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமரா பதிவுகளைப் போலீஸார் ஆய்வுசெய்தனர்.
அதில் விஜியைக் கொலை செய்த சம்பவங்கள் பதிவாகியிருந்தது. அவரை வெட்டியவர்களின் முகங்களும் பதிவாகியுள்ளன.
அவர்கள் யார், எதற்காக விஜியைக் கொலை செய்தார்கள் என்று போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “விஜி மீது 18 வழக்குகள் வரை உள்ளன.
அவர் நீதிமன்றத்துக்கு வரும் தகவல் முன்கூட்டியே கொலையாளிகளுக்குத் தெரிந்துள்ளது. இதனால் திட்டமிட்டப்படி அவரை வெட்டிக் கொன்றுள்ளனர்.
வீடியோவில் பதிவான காட்சிகளைப் பார்க்கும்போது, பட்டப்பகலில் சர்வசாதாரணமாக விஜி கொல்லப்படுவது தெரிகிறது.
விஜியைக் கொலை செய்தவர்களுக்கு 25 வயதிலிருந்து 30 வயதுக்குள்தான் இருக்கும். அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்களுக்குள் ஓடிவந்து விழும் விஜியை விடாமல் அந்தக்கும்பல் வெட்டுகிறது.
அப்போது, ஒரு வீட்டுக்குள் தஞ்சமடைகிறார். அங்கேயும் நுழையும் கொலையாளிகள், விஜியைக் கொலை செய்துவிட்டு ரத்தம் படிந்த கத்தியுடன் வெளியே வந்து பதற்றமில்லாமல் சாலையில் செல்கின்றனர்.
கடைசியாக வரும் ஒருவர் ஹெல்மேட் அணிந்துள்ளார். விஜியைக் கொலை செய்த கும்பலைத் தனிப்படை அமைத்து தேடிவருகிறோம். கொலையாளிகள் சிக்கியப் பிறகே விஜி கொலைக்கான காரணம் தெரியவரும்” என்றனர்
பிரபல ரவுடியிடம் ஆரம்பத்தில் ஒன்றாக தொழிலைக் கற்ற விஜிக்கும், இன்னொருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது விஜி தரப்பு அந்த நபரை கொலை செய்ய முயன்றுள்ளது. ஆனால், அது தோல்வியடைந்துள்ளது.
அதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் சமீபத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது. அந்த நபரும் விஜியைக் கொலை செய்ய வந்துள்ளார்.
அந்த முன்விரோதத்தில் விஜி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரிக்கின்றனர்.
தற்போது, விஜியின் எதிரிகள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர். இதுதான் கொலைக்கான காரணத்தை கண்டறிவதில் சிக்கல் எழுந்துள்ளதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: