வியாழன், 30 நவம்பர், 2017

ஆர் கே நகர் தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி ...

tamilthehindu :ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்தார்.
வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சி முகாமினை பொதுப்பார்வையாளர் கம்லேஷ் குமார் பந்த், மாவட்ட தேர்தல் அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டனர்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைதேர்தலின் போது வாக்குச்சாவடியில் பணியாற்றக்கூடிய மத்திய, மாநில அரசு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று (30.11.2017) வண்ணாரப்பேட்டை அரசு தொழிற்பயிற்சி கல்லூரியில் நடைபெற்றது.
இந்த பயிற்சியை தேர்தல் பொதுப்பார்வையாளர் கம்லேஷ் குமார் பந்த், மாவட்ட தேர்தல் அலுவலர் கார்த்திகேயன், இருவரும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது, வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள் மற்றும் வாக்குப்பதிவு அன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், கட்டுப்பாட்டு கருவி, வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாடுகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
வாக்காளர்களிடம் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட அடையாள அட்டையை சரிபார்த்து வாக்குப்பதிவிற்கு அனுமதிப்பது குறித்தும், கட்டுப்பாட்டு கருவி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொருத்தும் முறைகள் குறித்தும், வாக்காளர்களுக்கு அடையாள மை வைப்பது குறித்தும் நடைமுறைகள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது
மேலும், வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடியில் அமைப்பது குறித்தும், வாக்குப்பதிவு முடிவுற்ற பின் தேவையான ஆவணங்களை தயார்செய்வது குறித்தும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தேர்தல் உபகரணங்களை மூடி முத்திரையிடுவது குறித்தும், வாக்குப்பதிவு இயந்திரங்களை தகுந்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு எடுத்து சென்று மையத்தில் சேர்ப்பது வரையிலான பணிகள் குறித்தும் அளிக்கப்பட்ட பயிற்சியை, இருவருக்கும் தொலைக்காட்சி காட்சி வாயிலாக விளக்கப்பட்டது.
ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறியதாவது:
“தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வீடுவீடாக சென்று பிரச்சாரம் மேற்கொள்ளலாம். மாலை 5.00 மணிக்குமேல் தெருக்களில் பிரச்சாரம், பொதுக்கூட்டங்களும் நடத்தலாம். வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிறிய அளவிலான மற்றும் எளிதில் பயன்படுத்தும் வகையிலான அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. பிற மாவட்ட வாகனங்கள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்ற பின்பே அனுமதிக்கப்படும்.
வேட்பாளர்களுக்கான வாகன அனுமதி பிரச்சார அனுமதி போன்றவற்றை ஒற்றை சாளர முறையில் வழங்கிட தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகரில் 50 இடங்களில் 256 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கு தேவையான 25 சதவீத இருப்பையும் சேர்த்து (reserve) 360 கட்டுப்பாட்டு கருவிகள், 360 ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரங்கள், 1300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் போன்ற வாக்குப்பதிவிற்கு தேவையான இயந்திரங்கள் இருப்பில் உள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 7 நபர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இப்பகுதியில் சிறிய அளவிலான வீடுகள் நிறைய உள்ளதால், இத்தொகுதியில் வாக்காளர்கள் மாற்று வீடுகளுக்கு இடம் பெயர்வது அதிகளவில் நடைபெறுகிறது. இதன்காரணமாக, வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளது. இதனை சரிசெய்வதற்காக தேர்தல் ஆணையத்துடன் சிறப்பு அனுமதி பெற்று கடந்த நவ.26 அன்று முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் 1,716 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு களஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உறுதிசெய்யப்பட்ட தகுதிவாய்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இன்று நடைபெறும் பயிற்சிக்கு வராத அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது மக்கள் பிரநிதித்துவ சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தேர்தல் குறித்து புகார் தெரிவிக்க தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில், 3 உதவி செயற்பொறியாளர்கள், 3 உதவிப் பொறியாளர்கள், 3 கண்காணிப்பாளர்கள், 24 உதவியாளர்களுடன் தேர்தல் கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் செயல்படும் வகையில் துவக்கப்பட்டுள்ளது. இதில் கட்டணமில்லா தொலைபேசி எண்.1913 மற்றும் கட்டுப்பாட்டு அறை எண். 1800-4257012, மற்றும் வாட்ஸ்அப் 7550225820, 7550225821 ஆகியவற்றின் மூலமாக புகாரினை தெரிவிக்கலாம்.
இதேபோல, தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலும் 6 உதவி செயற்பொறியாளர்கள், 18 உதவிபொறியாளர்களுடன் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை கண்காணித்திட 6 பறக்கும் படைகள், 12 நிலைக் கண்காணிப்புக் குழு, 2 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பெறப்படும் புகார்கள் அனைத்தும் இந்தக் குழுக்களின் மூலமாக ஆய்வு செய்யப்பட்டு உரிய மேல் நடவடிக்கை உடனுக்குடன் எடுக்கப்படும். இக்குழுக்களுக்கான வாகனங்களில் ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது. எனவே, இக்குழுக்களுக்கான வாகனங்களின் இருப்பிடம் அறிந்து, புகார் தெரிவிக்கப்படும் இடத்திற்கு உடனடியாக இப்படைகள் அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இக்குழுவில் தேவையான அளவு காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மத்திய பாதுகாப்பு படையினரால் வாக்குச்சாவடிக்கு உள்ளும் மற்றும் வெளியிலும் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இடைத்தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.”
இவ்வாறு கார்த்திகேயன் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: