திங்கள், 27 நவம்பர், 2017

சமுக நீதி காவலர் வி.பி.சிங் அவர்களின் நினைவு நாள் 27.11.(2008)


Kanimozhi MV : · சமூகநீதி வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர் வி.பி.சிங். மண்டல் குழுவின் பரிந்துரைகளை சட்டமாக்கி, பிற்படுத்தப் பட்டோருக்கு 27% இடஒதுக்கீட்டை பிரகடனப்படுத்தியவர். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடமிருந்தும் 40 ஆண்டுகளாக வழங்கப்படாத சமூகநீதியை வழங்கி, அதற்காக தமது பிரதமர் பதவியை இழந்தவர். பதவிக்காய் மக்களின் உரிமைகளை ஆதிக்க ஜாதியினரிடம் அடகு வைக்காமல், சமூகநீதிக்காக ஆயிரம் பிரதமர் நாற்காலிகளை தூக்கி எறியலாம் என்று அறிவித்த தியாகச் செம்மல்! அதிசய மனிதர்!விகடன் :ராஜவம்சத்தின் ராஜா, ஏழைகளின் பகதூர், இடஒதுக்கீட்டின் நாயகன்,  தேசிய முன்னணியை தோற்றுவித்தவர், ஜனமோர்ச்சா கட்சியின் நிறுவனர் எனப் பல அடையாளங்களுக்குச் சொந்தக்காரர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங். அன்னாரின் நினைவு நாள் 27.11.(2008) அவரின் நினைவை போற்றுவோம்!! உத்தரபிரதேசத்தில் தையா என்ற ராஜவம்சத்தைச் சேர்ந்தவர் விஷ்வநாத் பிரதாப் சிங் என்கிற வி.பி.சிங். . 'இடஒதுக்கீட்டின் நாயகன்' என்று புகழப்படுபவர் வி.பி.சிங். மாண்டா என்கின்ற பகுதியை ஆண்டு வந்த ராஜ குடும்பத்தில், 1931-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி பிறந்தார். இயற்பியல் படித்துக் கொண்டிருந்த காலத்தில், அவருடைய உச்சகட்ட லட்சியமாக இருந்தது, 'எதிர்காலத்தில் மிகப் பெரிய அணு விஞ்ஞானி ஆக வேண்டும்' என்பதுதான். காலம் அவரை அரசியல்வாதியாக்கியது. 1941-ம் ஆண்டு மாண்டாவின் ராஜ் பகதூராக வி.பி.சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், ஏழைகளின் நலனுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டார். வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தில் ஈடுபாடு கொண்டதால், தன்னுடைய விளைநிலங்களை தானமாக அளித்தார்.


காங்கிரஸ் கட்சியின் மீது தீவிரமான ஈடுபாடு கொண்டிருந்தார் வி.பி.சிங். 1969-ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். 1971 ம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். அவரது நேர்மைக்காகவே, 1974-ம் ஆண்டு இந்திராகாந்தி அமைச்சரவையில், வர்த்தகத்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பிறகு மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்பி, 1980-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநில முதல் அமைச்சராக இந்திரா காந்தியால் தேர்வு செய்யப்பட்டார்.

இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி வென்று ராஜீவ் காந்தி பிரதமரானபோது நிதியமைச்சர் ஆனார் சிங். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அவர் தயங்கவில்லை. திருபாய் அம்பானி, நடிகர் அமிதாப் பச்சனின் சகோதரர் என எந்த வி.ஐ.பி-யும், வி.பி.சிங்கின் தாக்குதலில் இருந்து தப்ப முடியவில்லை. அமலாக்கப் பிரிவு அதிகாரிகளின் கெடுபிடிகளைத் தாங்கிக் கொள்ள முடியாத பெரும் பணக்காரர்கள், ராஜீவ் காந்தியிடம் முறையிடவே, நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் வி.பி.சிங்.
ஆனால், அடுத்து வந்த காலங்களில் பாதுகாப்புத் துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார் வி.பி.சிங்.

இந்த நேரத்தில் ராணுவத் தளவாடங்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக ஸ்வீடன் வானொலி அறிவித்தது. இந்த விவகாரத்தில் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க, அமைச்சர் பதவி பிளஸ் கட்சிப் பதவியிலிருந்தே நீக்கப்பட்டார் வி.பி.சிங். கட்சியில் இருந்து விலகிய பிறகு, காங்கிரஸ் எதிர்ப்பாளர்களுடன் இணைந்து, ஜனமோர்ச்சா கட்சியைத் தொடங்கினார். ராஜீவ் காந்திக்கு எதிரான காங்கிரஸ் தலைவர்களையும், பிற கட்சிகளையும் திரட்டி, தேசிய முன்னணியை உருவாக்கினார்.
1989-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக, இடதுசாரிக் கட்சிகள்  மற்றும் திமுக, தெலுங்கு தேசம், அசாம் கனபரிஷத் போன்ற மாநில கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கினார். இந்தக் கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பா.ஜனதா வெளியில் இருந்து ஆதரித்த நிலையில், இந்தியாவின் பத்தாவது பிரதமரானார் வி.பி.சிங். அதிலும், டிசம்பர் 1, 1989 அன்று வி.பி.சிங் நாடாளுமன்றத்தின் அவையில் தேவிலாலை பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். ஹரியானாவின் ஜாட் தலைவரான தேவிலால்,  பரிந்துரையை ஏற்க மறுத்து வி.பி.சிங்கையே பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார் என்பது கூடுதல் சிறப்பு. பா.ஜ.க ஒருபுறம், இடதுசாரிகள் மறுபுறம் என இருதுருவங்களின் ஆதரவுடன் ஆட்சியை மிகத் திறமையாக நடத்திக் கொண்டிருந்தார்.
இந்நிலையில்தான் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று, இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார் சிங். இதன்மூலம் வி.பி.சிங் ஆட்சிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது பா.ஜ.க. ராமர் கோவில் கட்டுவதற்காக ரத யாத்திரையை மேற்கொண்ட அத்வானி கைது செய்யப்பட்டது, இடஒதுக்கீட்டை அமல்படுத்தியது எனப் பல பிரச்னைகள் ஒன்று சேர, ஓராண்டு பிரதமர் பதவியை நிறைவு செய்வதற்கு முன்னதாகவே பதவியை விட்டு விலகினார் வி.பி.சிங். இதன்பின்னர், 1996-ம் ஆண்டு தேவகௌடாவும், பின்னர் ஐ.கே.குஜ்ராலும் பிரதமர் பதவியில் அமர முக்கியப் பங்கு வகித்தார். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின்னர், பல ஆண்டுகள் பொதுவாழ்க்கையிலிருந்து ஒதுங்கியிருந்தவர், 2006-ம் ஆண்டு ஜனமோர்ச்சா கட்சியை மீண்டும் தொடங்கினார்.

 2006-ல் உத்தரபிரதேசத்தின் தாத்ரி பகுதியில், விவசாயிகளின் நிலங்களை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றியதைக் கண்டித்து, தீவிரமான போராட்டங்களில் பங்கெடுத்தார். புற்றுநோய் உடலை வாட்ட, 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் காலமானார்.
வி.பி. சிங், பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கு முன் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்பு மிக்கது. ‘பிரதமர் பதவியைவிட முக்கியமானது தேசத்தின் ஒற்றுமை’ என முழங்கினார். இந்தியாவின் ஒற்றுமைக்கு மதச்சார்பின்மை எவ்வளவு முக்கியம் என்பதை மட்டுமல்லாமல், பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் எவ்வளவு தூய்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பதை அவரது உரை போதித்தது. பாபா சாகேப் அம்பேத்கருக்கு பாரத ரத்னா பட்டம் கொடுத்ததும், நாடாளுமன்றத்தில் அவரது படத்தை இடம் பெற வைத்த பெருமையும் சமூக நீதிக்காவலர் வி.பி.சிங்கையே சேரும். 

தொகுப்பு: ஆ.விஜயானந்த்

கருத்துகள் இல்லை: