திங்கள், 18 செப்டம்பர், 2017

சாரு நிவேதா : மோடி போட்ட திட்டமே கமலின் அரசியல்... மோடியின் கருப்பு ஏஜென்ட் கமல்.... மோடியின் காவி ஏஜென்ட் ரஜினி !


இப்போதுதான் கொஞ்ச நேரம் முன்பு நீங்கள் ஏன் கமலுக்கு இத்தனை எதிர்ப்பாக இருக்கிறீர்கள் என்று கேட்டார் நண்பர். தயவுசெய்து நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பாருங்கள். கமல் பிக் பாஸ் வீட்டுக்குள் போனதும் அங்கிருந்த ஒரே ஒரு பெண்ணைத் தவிர மற்ற அனைவரும் அவர் காலில் விழுகிறார்கள். அதிலும் சிநேகன் விட்டால் அப்படியே தரையிலேயே படுத்துக் கிடப்பார் போல் இருக்கிறது. அந்தக் காலத்தில் ராஜாக்கள் ஆட்சியில் அடிமைகள் எப்படி உடலை வளைப்பார்களோ, மந்திரிகள் மந்திரி சபையில் எப்படி உடம்பை வளைப்பார்களோ அப்படி வளைக்கிறார் சிநேகம். பார்க்கவே அசிங்கமாகவும் ஆபாசமாகவும் இருக்கிறது. இது ஏன் கமலுக்கு அசிங்கமாக இல்லை. ஜெயலலிதாவின் முன்னால் அம்பது மந்திரிகளும் கூழைக் கும்பிடு போட்டார்களே, அதேபோல் அத்தனை பேரும் அவர் காலில் விழுந்து கூழைக் கும்பிடு போடுகிறார்கள். இந்த நிகழ்ச்சியை நாலு கோடி பேர் – இப்போது ஓவியா போன பிறகு ஒன்றரை கோடி பேர் – பார்க்கிறார்கள் என்பது கமலுக்குத் தெரியாதா? இத்தனை படித்தவருக்கு இது ஒரு அசிங்கம் ஆபாசம் என்று தெரியவில்லையா? ஜெயலலிதாவுக்குக் கூழைக் கும்பிடு போட்டால் அசிங்கம். தனக்குப் போட்டால் ஜாலியா? என்னய்யா நியாயம் இது? இத்தனைக்கும் இவர் பகுத்தறிவுப் பகலவர் வேறு? பகுத்தறிவுக்காரர்கள்தானே தன்மானம் சுயமரியாதை எல்லாம் பேசினவர்கள்? இத்தனை பேர் கமலுக்கு முன்னால் சுயமரியாதையே இல்லாமல் காலில் விழுகிறார்கள். இதை கமல் எப்படி அனுமதிக்கிறார்? காலில் விழுந்தால் அந்த நிமிடமே தகுதி நீக்கம் செய்யப்படும் என்று பிக்பாஸை விட்டு அறிவிப்புக் கொடுத்தால் யாராவது இப்படிக் காலில் விழுவார்களா?


பொதுவாகவே சினிமாக்காரர்கள் தங்களைக் கடவுளாக நினைத்திருக்கிறார்கள். அவர்களை அப்படி நினைக்க வைப்பது பொதுஜனம். நடிகர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அப்படித் தங்களைக் கடவுள்களாக சூப்பர் மேன்களாக நினைக்கும் சினிமாக்காரர்களுக்கு அந்தக் காரணத்தினாலேயே அரசியலுக்கு வரும் தகுதி இல்லாமல் போகிறது. அதில் முதலில் வருபவர் கமல்.
என்றைக்காவது, கமல் அவர் வாழ்நாளில் மற்றவர் பேசுவதை ஐந்தே ஐந்து நிமிடம் காது கொடுத்துக் கேட்டிருக்கிறாரா? இதை நான் கமலின் மனசாட்சியிடம் கேட்கிறேன். அஞ்சு வயதில் அம்மா பேசுவதைக் கேட்டேன் என்று சொல்லக் கூடாது. கடந்த இருபது ஆண்டுகளில் அவர் என்றைக்காவது ஒரு நாளாவது ஒரு தருணத்திலாவது அஞ்சே அஞ்சு நிமிடம் மற்றவர் பேசுவதைக் கேட்டிருக்கிறாரா? மனசாட்சியைத் தொட்டு அவர் இதற்கு மட்டும் பதில் சொல்லட்டும். நான் கேள்விப்பட்டவரை அவர் ஆறு மணி நேரம் கூடப் பேசுவார். மற்றவர் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். இப்படிப்பட்ட குணநலன் கொண்ட ஒருவர் அரசியலுக்கு எப்படி வர முடியும்?
மேலும், மோடி பற்றிய அவரது அரசியல் பார்வை என்ன? பண நோட்டுக்களைக் காணாமல் ஆக்கி கோடானுகோடி மக்களை நடுத்தெருவில் நிற்கவைத்தாரே மோடி, அது பற்றி கமல் கருத்து என்ன?
மாட்டை இழுத்துக் கொண்டு போனவரெல்லாம் கொலை செய்யப்பட்டார்களே, அது பற்றி கமல் கருத்து என்ன? மோடியின் மாடு பாலிடிக்ஸ் பற்றி கமல் என்ன கருதுகிறார்?
சினிமாவில் ஆரம்பத்தில் தேசிய கீதம் போடுவது பற்றி கமல் கருத்து என்ன?
அடுத்த ஆட்சி, திமுக. அந்த வாக்குகளைப் பிரித்து, திரும்பவும் அதிமுகவின் பொம்மை ஆட்சி வருவதற்காக, மற்றும் பாஜகவை தமிழகத்தில் பலப்படுத்துவதற்காக மோடி போட்ட திட்டமே கமலின் அரசியல் எண்ட்ரி என்று பலர் நினைக்கிறார்கள். நானும் அப்படியே நினைக்கிறேன். இது பற்றி கமல் கருத்து என்ன? நான் சொல்வது தவறாக இருந்தால் உங்கள் வாதத்தைச் சொல்லுங்கள். நான் ஏற்க முயல்கிறேன்.
கமல் ரஜினியை அழைக்கும் காரணம், ரஜினி மோடியின் காவி ஏஜெண்ட். கமல் மோடியின் கருப்புச் சட்டை ஏஜெண்ட். இதுவும் தவறு என்றால் என் கருத்தை மாற்றுங்கள். உங்களை ஒப்புக் கொள்ள முயல்கிறேன்.
சாரு நிவேதிதா
18.9.2017.


கருத்துகள் இல்லை: