சனி, 23 செப்டம்பர், 2017

சோப்புப் போட்டு குளிக்காதீர்கள்: அமைச்சர் கருப்பன்னைன் அரிய கண்டுபிடிப்பு .. தெர்மொகொலை மிஞ்சிய ஆய்வு


மின்னம்பலம் :வீடுகளில் உபயோகிக்கும் சோப்பு நீரால்தான் இரண்டு நாள்கள் வரை நொய்யல் ஆற்று நீர் நுரை படர்ந்து வந்ததாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
சோப்புப் போட்டு குளிக்காதீர்கள்: அமைச்சர்!கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக திருப்பூர் நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகளவில் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால், கடந்த 19ஆம் தேதி முதல் ஆறு முழுவதும் வெண்மையாக நுரை படர்ந்து வந்ததையடுத்து அச்சமடைந்த பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் அளித்தனர். சலவை ஆலைகளிலிருந்து இரவு நேரத்தில் கழிவுநீர் திறந்துவிடப்பட்டிருக்கலாம் எனவும், சலவை ஆலைக் கழிவுகளே இதுபோன்ற நுரைகள் படர காரணமாக இருக்கும் என்றும் புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

இதைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டச் சாய, சலவைத் தொழிற்சாலைகள் சங்கத்தின் ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நேற்று (செப்டம்பர் 22) சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், “குளம் மற்றும் நொய்யல் ஆற்றைச் சென்று பார்வையிட்டோம். அதில் எங்கேயும் பாதிப்பு ஏற்படவில்லை. குடிக்கும் நீரில் 500 கிராம் வரை உப்புச்சத்து இருக்கலாம். நொய்யல் ஆற்று நீரில் 1200-1300 வரை உப்புச்சத்து உள்ளது. குளத்திலே 700 வரை உள்ளது.
கோவையிலிருந்து வரும் சாக்கடை கழிவுநீர், நொய்யல் ஆற்றில் கலந்துள்ளதால்தான் நுரை வருகிறது. நாம் அனைவரும் சோப்பு உபயோகப்படுத்துகிறோம். அந்த நீரும் கழிவுநீரில் சேர்ந்து வருவதால், இரண்டு நாள்கள் மட்டும் தண்ணீர் நுரை போல வந்தது. தற்போது நானும் சென்று ஆய்வு செய்தேன். எந்த நுரையும் இல்லை. தண்ணீர் மிகவும் சுத்தமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் இரண்டாவது தெர்மாக்கோல் விளக்கம் என்று கேலி செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கனவே வைகை அணையில் நீர் ஆவியாவதைத் தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கிவைத்த தெர்மாக்கோல் திட்டம், சமூக வலைதளங்களில் கேலி செய்யப்பட்டாலும், இந்தத் திட்டத்துக்கு சீனாவிலிருந்து பாராட்டு கடிதம் வந்தது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது நகைப்புக்குரியதாக இருந்த நிலையில், தற்போது நொய்யல் ஆறு முழுவதும் நுரைகள் குவிந்திருக்கும் அந்தப் பகுதியைப் பார்வையிட்டு, நாம் உபயோகப்படுத்தும் சோப்பால்தான் ஆற்றில் நுரை வந்துள்ளது என்று ஒரு பொறுப்புள்ள சுற்றுச்சூழல் துறை அமைச்சரே பேசியுள்ளது கேலிக்குரியதாகவே உள்ளது.
இதே அமைச்சர் கருப்பண்ணன்தான் முன்பு, ‘விவசாயிகள் பைனான்ஸ் கம்பெனி நடத்துகின்றனர். வங்கிகளில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். கோடிக்கணக்கில் பணம் வைத்துள்ளதோடு பல தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நடத்துவது தேவையற்ற போராட்டம்’ என்று விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: