புதன், 20 செப்டம்பர், 2017

தீர்ப்பு விபரம் :18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு தடை இல்லை

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு தடை விதிக்க இயலாது. அவர்கள் ஏன் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் என்பதற்கு முதலமைச்சர், அரசு தலைமை கொறடா, சட்டசபை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை: அ.தி.மு.க.வின் 134 எம்.எல்.ஏ.க்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 113 பேரும், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக 21 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.
இந்த 21 எம்.எல்.ஏ.க்களில் 19 பேர் கடந்த மாதம் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் எனவே அவருக்கு கொடுக்கும் ஆதரவை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் கடிதம்  கொடுத்தனர்.
 இது கட்சிக்கு எதிரான செயல் என்றும் எனவே 19 எம்.எல்.ஏ.க்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சபாநாயகர் தனபாலிடம் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்தார். இதை ஏற்று 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீசு அனுப்பி சபாநாயகர் விளக்கம் கேட்டார்.

அப்போது கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையன் மட்டும் டி.டி.வி.தினகரன் அணியில் இருந்து பிரிந்து மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தார். மற்ற 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி இழப்பு செய்து நேற்று முன்தினம் சபாநாயகர் அதிரடி நடவடிக்கை எடுத்தார். இது தமிழக அரசிதழிலும் அன்றே உடனடியாக வெளியிடப்பட்டது.


18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பது பற்றி தேர்தல் ஆணையத்துக்கும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெறும். இந்த வழக்குடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேரின் மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி துரைசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று 18 எம்.எல்.ஏ.க்களின் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அரசு தரப்பில் சோமயாஜி, அரிமா சுந்தரம், வைத்தியநாதன், விஜயநாராயணன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.

18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் வக்கீல்கள் துஷ்யந்த் தவே, சல்மான்குர்ஷித், பி.ஆர்.ராமன் ஆகியோர் வாதாடினார்கள். தி.மு.க. தரப்பில் கபில்சிபல் ஆஜரானார்.

முதலில் 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே வாதாடினார். அவர் கூறியதாவது:-

தமிழக அரசில் ஊழல் மிகவும் மலிந்து விட்டது. எனவே 18 எம்.எல்.ஏ.க்களும் முதல்-அமைச்சருக்கு கொடுத்து வரும் ஆதரவை திரும்பப் பெற்றனர்.

இந்த நிலையில் சபாநாயகர் அவர்கள் 18 பேரையும் தகுதி இழப்பு செய்துள்ளார். இது நீதிக்கு எதிரானது. தவறான நடவடிக்கை.

கடந்த பிப்ரவரி மாதம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது 18 எம்.எல்.ஏ.க்களும் அரசை ஆதரித்து வாக்களித்தனர். தற்போது அவர்கள் கட்சி தாவி விட்டதாக சொல்வதை ஏற்க இயலாது. அவர்கள் கட்சி தாவவில்லை. எனவே கட்சி தாவல் தடை சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

சபாநாயகரின் இந்த உத்தரவு கோர்ட்டின் பரிசீலனைக்கு உட்பட்டதே. சபாநாயகர் என்பவர் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல.

18 எம்.எல்.ஏ.க்களும் வேறு எந்த கட்சிக்கும் தாவி செல்லவில்லை. அவர்கள் முதல்-அமைச்சர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று மட்டுமே சொல்லி உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி அரசில் ஊழல் நடக்கிறது என்று 18 எம்.எல்.ஏ.க்களும் சொல்கிறார்கள். இதை ஏற்காமல் சபாநாயகர் கட்சிக்காரர் போல செயல்பட்டுள்ளார்.

எடியூரப்பா ஆட்சியில் நடந்ததை தற்போதைய வழக்குடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் 18 எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவவில்லை. இதை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை, டெல்லியில் உள்ள சிலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. டெல்லியில் உள்ள சிலர் இந்த அரசை இயக்குகிறார்கள். கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக ஆட்சி மீது சில மாதங்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஊழல் புகார்களை கூறினார்கள். அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இதில் இருந்தே சபாநாயகர் பாரபட்சமாக நடந்து கொண்டிருப்பது தெளிவாகியுள்ளது.

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும் என்ற திட்டத்துடன்தான் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி இழப்பு செய்து சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார். எனவே 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பை செல்லாது என்று அறிவித்து ரத்து செய்ய வேண்டும்.



18 எம்.எல்.ஏக்களும் அ.தி.மு.க. கொறடா உத்தரவை மீறவில்லை. மேலும் சபாநாயகர் உத்தரவுகள் தொடர்பாக ஏற்கனவே சுப்ரீம்கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்புகளும் நம்மிடம் தெளிவாக உள்ளன.

ஒரு எம்.எல்.ஏ. முதல்- அமைச்சருக்கு எதிராக வாக்களித்தால் மட்டுமே தகுதி இழப்பு செய்ய முடியும். எனவே 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பு செல்லாது. தமிழக அரசை யார் வழி நடத்துகிறார்கள் என்றே தெரியவில்லை.

“18 எம்.எல்.ஏ.க்களும் உரிய விளக்கம் அளிக்க சபாநாயகரிடம் சில ஆவணங்கள் கேட்கப்பட்டது. அந்த ஆவணங்களை சபாநாயகர் தரவில்லை. அந்த ஆவணங்களை தந்தால் விசாரணைக்கு ஆஜராக 18 எம்.எல்.ஏ.க்களும் தயாராக உள்ளனர். இந்த நிலையில் அவர்களை தகுதி இழப்பு செய்தது சட்டப்படி செல்லாது”

மேலும் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்புக்கான உத்தரவு நேரில் வழங்கப்படவில்லை. இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ததை பார்த்தே தெரிந்து கொண்டனர். தகுதி நீக்க நோட்டீஸ் வழங்காததும் தவறாகும்.

இவ்வாறு மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே வாதாடினார்.

இதையடுத்து சபாநாயகர் தரப்பில் வக்கீல் அரிமா சுந்தரம் ஆஜராகி வாதாடினார். அவர் கூறியதாவது:-

வழக்குக்கு தேவை இல்லாத வாதங்களை டி.டி.வி.தினகரன் அணியினர் முன் வைக்கிறார்கள். இந்த வழக்கில் தேவை இல்லாமல் மத்திய அரசை குறை சொல்லக் கூடாது.

மேலும் சபாநாயகர் மீதும் கண்மூடித்தனமாக குற்றச்சாட்டுகளை கூறக் கூடாது.

இந்த வழக்குக்கு தேவை இல்லாத வாதங்கள் பல தடவை வைக்கப்பட்டுள்ளன. அரசு மீதும், சபாநாயகர் மீதும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு இருப்பதால் நாங்கள் உரிய பதில் அளிக்கவும், விளக்கம் அளிக்கவும் கூடுதல் கால அவகாசம் தர வேண்டும்.

18 எம்.எல்.ஏ.க்களை ஏன் தகுதி இழப்பு செய்துள்ளோம் என்பதற்கு தேவையான ஆவணங்களை இந்த கோர்ட்டில் நாங்கள் தாக்கல் செய்ய தயாராக உள்ளோம். எனவே நாங்கள் ஆவணங்களை ஒப்படைக்க 10 நாட்கள் கால அவகாசம் தர வேண்டும்.

அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.

இவ்வாறு வக்கீல் அரிமா சுந்தரம் கூறினார்.

இதையடுத்து நீதிபதி துரைசாமி குறுக்கிட்டு, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்புக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு வக்கீல் அரிமா சுந்தரம், “18 எம்.எல்.ஏ.க்களும் சட்டத்துக்கு உட்பட்டுதான் தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

இதையடுத்து நீதிபதி கூறுகையில், “நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை ஏன் நீட்டிக்கக் கூடாது?” என்று கேட்டார். பிறகு நீதிபதி துரைசாமி கூறியதாவது:-

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்ற உத்தரவு மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்ற உத்தரவு நீடிக்கும்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பு காரணமாக 18 தொகுதிகள் காலியாக உள்ளது. மறு உத்தரவு வரும் வரை அந்த 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தக்கூடாது.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு தடை விதிக்க இயலாது. அவர்கள் ஏன் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் என்பதற்கு முதல்-அமைச்சர், அரசு தலைமை கொறடா, சட்டசபை செயலாளர் ஆகியோர் உரிய பதில் அளிக்க வேண்டும்.

இந்த வழக்கு மீண்டும் அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதுவரை 18 தொகுதிகளுக்கான அறிவிப்பு எதையும் வெளியிடக் கூடாது.

இவ்வாறு நீதிபதி துரைசாமி உத்தரவிட்டார்  மாலைமலர்

கருத்துகள் இல்லை: