சனி, 23 செப்டம்பர், 2017

ஆடிட்டர் குருமூர்த்தி : பணமதிப்பழிப்பால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி அடிமட்டத்துக்குச் சென்றுவிட்டது! ... இப்பத்தாய்ன் தெரியுதா? அடேய் அடேய் ..

வீழ்ச்சியடைந்த பொருளாதாரம்: குருமூர்த்திபணமதிப்பழிப்பு நடவடிக்கையால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி அடிமட்டத்துக்குச் சென்றுவிட்டதாகவும், இப்போதிலிருந்தே துரித நடவடிக்கைகளை மேற்கொண்டால் வளர்ச்சிப் பாதையில் மீண்டும் பயணிக்கலாம் எனவும் துக்ளக் வார இதழின் ஆசிரியரான எஸ்.குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கள்ள நோட்டுகளையும் கறுப்புப் பணத்தையும் முடக்கும் வகையில் மத்திய அரசால் கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசின் இந்த அதிரடியான சீர்திருத்த நடவடிக்கைக்கு எதிராக துக்ளக் வார இதழின் ஆசிரியரான எஸ்.குருமூர்த்தி தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

பணமதிப்பழிப்பின் தாக்கம் குறித்து சென்னை ’மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்’ கல்வி நிறுவனத்தில் சென்னை சர்வதேச மையம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பேசிய குருமூர்த்தி மேலும் கூறுகையில், “மத்திய அரசானது பணமதிப்பழிப்பு, வங்கிக் கடன் தொடர்பான சட்டங்கள், சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ஒரே சமயத்தில் அடுத்தடுத்து மேற்கொண்டுள்ளது. இவையனைத்தும் ஒரே சமயத்தில் பொருளாதாரத்தால் ஏற்கப்படாது. இவை அவசர கதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளாகும்.
நோக்கம் நல்லதாக இருந்தாலும் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மோசமான முறையில் அமல்படுத்தப்பட்டிருப்பதால் அதன் பலன்கள் கிடைக்கவில்லை. உயர் மட்ட நிர்வாகத்தில் ரகசியக் காப்பு இல்லாததால் கறுப்புப் பணத்தை வைத்திருந்தவர்கள் எளிதாகத் தப்பிவிட்டனர். உயர் மதிப்பு நோட்டுகளை திரும்பப் பெற்றதால் முறைசாரா துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இத்துறை 90 சதவிகித அளவிலான வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. எனவே பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் வேலைவாய்ப்பு உருவாக்கம் தடைப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
பொருளாதார விவகாரங்களில் புலமை பெற்றவரான ஆடிட்டர் குருமூர்த்தி ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தியாகக் கருதப்படுகிறார். சங்க பரிவாரின் பொருளாதாரச் சிந்தனைகளை வடிவமைப்பதில் இவருக்கு முக்கியப் பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது அதை மிகவும் தீவிரமாக ஆதரித்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆர்.எஸ்.எஸ்.ஸின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் பொருளாதாரச் சிந்தனையாளருமான குருமூர்த்தி மத்திய அரசின் நடவடிக்கையை இந்த அளவுக்குக் கடுமையாக விமர்சித்திருப்பது பல மட்டங்களிலும் சலனத்தை ஏற்படுத்தக்கூடியது  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: