புதன், 20 செப்டம்பர், 2017

ராம் ரஹீம் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடு! எதிர்த்தவர்கள் கொலை .. புதைத்த பிணங்களின் மீது மரங்கள்?

ராம் ரஹீம் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடு!மின்னம்பலம் : சிர்சாவில் உள்ள தேரா சச்சா சௌதா தலைமை ஆசிரமத்தில் 600க்கும் மேற்பட்டவர்களின் எலும்புக்கூடு புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவரான ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தொடர்பாக தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஹரியானாவின் சிர்சாவில் உள்ள தேரா சச்சா தலைமை ஆசிரமத்தில் 600க்கும் மேற்பட்டவர்களின் எலும்புக்கூடு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சிறப்பு விசாரணைக் குழு மேற்கொண்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளது. தேரா சச்சாவின் முன்னாள் துணை தலைவர் பி.ஆர். நெயின் இது தொடர்பாக விசாரணைக் குழுவிடம் கூறும்போது, ஜெர்மன் விஞ்ஞானி ஒருவரின் ஆலோசனைப்படி புதைக்கப்பட்ட எலும்புக்கூட்டுக்கு மேல் மரக்கன்று நடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ராம் ரஹீம் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட அன்று வன்முறையில் ஈடுபடுவதற்காகக் கலவரக்காரர்களுக்கு ரூ. 5 கோடி வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.இந்த மரக்கன்றுகளில் சில தற்போது பெரிய மரமாக வளர்ந்துள்ளன.

மோட்சத்தை அடைவதற்காக ஆசிரமத்தில் எலும்புக்கூடுகளைப் புதைக்க ராம் ரஹீம் உத்தரவிட்டுள்ளார் என்று தேரா சச்சா தொண்டர்கள் தெரிவிக்கின்றனர். ராம் ரஹீமை எதிர்த்தவர்கள் கொலை செய்யப்பட்டு ஆசிரமத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே, தேசிய ஊடகங்கள் முன்னிலையில் ஆசிரமத்தில் தோண்டும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். முன்னதாக, ஆசிரமத்தில் சோதனை நடத்தியபோது, ரகசிய சுரங்கங்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் , ஏ.கே. 47 ரக துப்பாக்கி, வெடிகுண்டுகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: