வியாழன், 21 செப்டம்பர், 2017

செத்தும் கெடுத்த ஜெயா ! – அழுகி நாறும் அதிமுக !

வினவு :பொதுச்சொத்தைத் திருடுவதும் அரசு சன்மானங்களைப் பங்கு போடுவதும் தவிர, வேறு கொள்கை எதையும் அறியாத கிரிமினல்கள், எம்.எல்.ஏ.- க்களாக அமர்ந்திருக்கும் அரசாங்கம் இது. இந்த இழிநிலைக்குத் தமிழக அரசியலைத் தள்ளிய குற்றவாளிகளான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை அம்பலப்படுத்த வேண்டிய தருணம் இது.
புதைக்கப்படாமல் அழுகி நாறும் பிணம் போல முடைநாற்றத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. செத்தும் கெடுத்த ஜெயாவின் சாதனை இது. ஜெயலலிதா அப்போலோவில் கிடந்தபோது உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதையே யாரும் அறிய முடியாமல், செயற்கை சுவாசம் உள்ளிட்ட வழிமுறைகளால் அவரை உயிருடன் வைத்திருந்ததைப் போலவே, இப்போது அ.தி.மு.க. -வை, ஐ.சி.யு. -வில் வைத்துப் பராமரித்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு.
அ.தி.மு.க. -வின் அழிவு தமிழகத்துக்கு நல்லதல்ல என்று கூறி, மோதிக்கொள்ளும் அ.தி.மு.க. கொள்ளையர்களிடையே பஞ்சாயத்து செய்யும் பொறுப்பை ஏற்றிருக்கிறார் துக்ளக் குருமூர்த்தி. ஆளுநர், தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட எந்த நிறுவனத்தையும் முறைகேடாகப் பயன்படுத்துவதற்கும், மிரட்டுவதற்கும், பொய் வழக்குப் போடுவதற்கும் எள்ளளவும் கூச்சப்படாமல், அதிகார துஷ்பிரயோகத்தை நிர்வாண நடனமாக நடத்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

வெட்கம் மானமோ, சுயமரியாதையோ இல்லாத அ.தி.மு.க. திருடர்கள், விசுவாசம் – துரோகம் என்ற இரண்டு வார்த்தைகளுக்குள் எல்லா விவாதங்களையும் அடக்குகிறார்கள். இந்த இழிநிலைக்குத் தமிழக அரசியலைத் தள்ளிய முதன்மைக் குற்றவாளிகளான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரின் அசிங்கம் பிடித்த பாசிச அரசியல் வரலாற்றை அம்பலப்படுத்துவதற்கு இதைவிடப் பொருத்தமான தருணம் வேறில்லை.
அத்தகைய அம்பலப்படுத்தல்தான் அ.தி.மு.க. என்ற அருவெறுக்கத்தக்க கும்பலின் அழிவைத் துரிதப்படுத்தும் என்றபோதிலும் ஊடகங்களும் அறிவுத்துறையினரும் இதற்கு எதிரான திசையில் கருத்துருவாக்கம் செய்கின்றனர். ஜெயா உயிருடன் இருந்தவரை கட்சிக்குள் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டிருந்ததாகவும், ஜெயலலிதாவின் உறுதியான தலைமை இல்லாத காரணத்தினால்தான் தமிழகத்தின் நலன்கள் பலியிடப்படுவதாகவும் கூறி, சர்வாதிகாரத்துக்குத் துதி பாடுகின்றனர்.
எனினும், மக்கள் போராட்டங்கள் இக்கருத்துகளை மறுதலிக்கின்றன. அ.தி.மு.க. ஆட்சி மட்டுமல்ல, போலீசு, அதிகார வர்க்கம், நீதித்துறை, ஊடகங்கள் உள்ளிட்ட எல்லா நிறுவனங்களும் மக்களிடையே மதிப்பிழந்து வருகின்றன. அனிதாவின் தற்கொலையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கிளர்ந்தெழுந்த மாணவர் போராட்டங்கள் இதை நிரூபித்தன.
நீட் தேர்வு வழக்கை முறைகேடாகக் கையாண்டதன் மூலம் போதுமான அளவுக்கு அம்பலப்பட்டிருக்கும் நீதிமன்றங்கள், தமது அதிகார வரம்பை மீறி, வேலை நிறுத்தத்தைக் கைவிடு, வந்தேமாதரம் பாடு, நவோதயா பள்ளியைத் திற, தேசியக்கொடிக்கு சலாம் போடு என்று சர்வாதிகாரம் செலுத்துவது நீதிமன்றங்களின் மீதான மக்களின் வெறுப்பைத்தான் கூட்டியிருக்கிறது.
தமிழகம் முழுவதும் நடைபெறும் மக்கள் போராட்டங்கள் தத்தம் கோரிக்கையை மட்டும் வலியுறுத்தவில்லை. அவை இந்த அரசமைப்பின் வழியாகத் தமது உடனடிக் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது என்ற நிர்ப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டவையாகவும், அதே நேரத்தில் அருகதையற்ற இந்த அரசமைப்பின் அதிகாரத்துக்கு கட்டுப்பட விரும்பாதவையாகவும் இருக்கின்றன. இது மக்களின் ஜனநாயக வேட்கை வெளிப்படுகின்ற வடிவம்.
பொதுச்சொத்தைத் திருடுவதும் அரசு சன்மானங்களைப் பங்கு போடுவதும் தவிர, வேறு கொள்கை எதையும் அறியாத கிரிமினல்கள், எம்.எல்.ஏ.- க்களாக அமர்ந்திருக்கும் அரசாங்கம் இது. அடுத்த மூன்றரை ஆண்டுகளில் தாங்கள் சம்பாதிக்கக் கூடிய தொகை, ஒரே தவணையில் தமக்கு இப்போது கிடைக்கக்கூடிய விலை ஆகிய இரண்டில் எது இலாபகரமானது என்ற கணக்குத் தடுமாற்றத்தைத் தவிர, வேறெந்த கொள்கைத் தடுமாற்றமும் இல்லாத இந்தத் திருடர்கள், 114 -க்குப் பதிலாக 117 என்று தமது எண்ணிக்கைப் பெரும்பான்மையை சட்டமன்றத்தில் காட்டிவிட்டால்…?
அரசியல் சட்டப்படி ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு விட்டதாக ஆளும் வர்க்க அறிவுத்துறையினர் அமைதியடையலாம். அத்தகைய அமைதி உருவாவதை நாம் அனுமதிக்கக் கூடாது.
– புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2017.

கருத்துகள் இல்லை: