
தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஜனநாயகப் படுகொலை என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சியில் சேர்ந்தால்தால்தான் கட்சி தாவல் தடை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியும் என முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக் காலத்தில் 2006 முதல் 2011 வரை தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகராக இருந்த ஆவுடையப்பன், ''தற்போது சபாநாயகர் தனபால் எடுத்துள்ள நடவடிக்கை கட்சி தாவல் தடை சட்டத்திற்கு எதிரானது. கட்சி தாவல் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள வழிகாட்டுதலுக்கு எதிரானது,'' என்று தெரிவித்தார். அதிமுகவில் நிலவிவரும் அசாதாரண சுழலில், திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை செயல் தலைவர் முக ஸ்டாலின் நாளை செவ்வாய்க்கிழமை கூட்டியுள்ளார். சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில் அதிமுக இருப்பதால், எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீது நம்பிக்கை இல்லை என ஆளுநரிடம் தெரிவித்த 18 எம்எல்ஏகளை நீக்கிவிட்டு, குறுக்குவழியில் ஆட்சியை தக்கவைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏகள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ''கடந்த நாற்பது ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்எல்ஏகள் அதிமுகவில் இருந்து திமுக அல்லது காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் கட்சியில் சேரவில்லை. அவர்கள் அதிமுகவில் தொடர்ந்து இருப்பதால், தகுதி நீக்கம் செய்தது தேவையற்றது. சபாநாயகர் தனபாலின் முடிவு இறுதியானது அல்ல,'' என்றார் திருநாவுக்கரசர்.
திருமாவளவன் 1986-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் விதிகளின் கீழ் இந்த தகுதி நீக்கம் நடந்துள்ளதாக கூறுவது நியாயம் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் முறையான காரணம் இல்லாமல் தங்களது பதவியை இழந்திருப்பது ஜனநாயக படுகொலைக்குச் சமம் என்று அவர் தெரிவித்தார். அதிமுக மீது மத்தியில் ஆளும் பாஜக அழுத்தம் கொடுப்பதுதான் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த செப்டம்பர் 20-ஆம்தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது என்ற நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது முறையானது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக