வெள்ளி, 22 செப்டம்பர், 2017

காவிரி பாசனத்திற்கு இல்லாமல் புஷ்கரம் பூஜைக்கு திறக்கப்பட்டதா?

பிரமிளா கிருஷ்ணன்.. பிபிசி தமிழ் காவிரி டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடாமல், காவிரி மகாபுஷ்கரம் (காவிரி ஆற்றை வழிபடும் விழா) நிகழ்வுக்காக திறந்துவிடப்பட்டதாகக் கூறி தமிழக விவசாயிகள் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த ஆறு ஆண்டுகளாக குறுவை சாகுபடி(ஜூன் முதல் ஜூலை வரை) இல்லாமல் சம்பா சாகுபடியை (ஆகஸ்ட் முதல் அக்டோபர்வரை) மட்டுமே தமிழகம் நம்பியிருக்கும் நிலையில், இந்த ஆண்டு வறட்சியை சமாளிக்க பாசனத்துக்கு பதிலாக வழிபாட்டிற்கு தண்ணீர் அளித்துள்ள நடவடிக்கை கடும் விமர்சனங்களை பெற்றுள்ளது.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் காவிரி மகாபுஷ்கரம் என்ற விழாவின்போது காவிரி ஆற்றுக்கு நன்றி சொல்லும் பூஜைகள், முன்னோர்களுக்குத் திதி கொடுப்பது, தங்களது பாவங்களை போக்கிக் கொள்ள மக்கள் புனித நீராடுவது போன்றவை நடைபெறும் என்று திருச்சி அம்மா மண்டபம் பகுதியில் அமைந்துள்ள காவிரி தாயார் கோயிலை சேர்ந்த அந்தணர் தெரிவித்தார்.

காவிரி புஷ்கரம் விழாவுக்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு முன்னதாக விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு பாசன நீர் வேண்டும் என்ற கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்கிறார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் புலியூர் நாகராஜன்.
”ஐந்து லட்சம் ஏக்கர் பரப்பளவில் நாற்று நடவு செய்வதற்கு சமமான அளவு தண்ணீர் இந்த விழாவிற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரியின் கரை பகுதியில் இருந்த தென்னை மரங்கள் காய்ந்துபோகும் நிலையில்கூட தண்ணீர் கொடுக்காத அரசு, நீராடும் விழாவிற்கு சேமிப்பில் இருந்த நீரை திறந்துவிட்டிருப்பது வருத்தமளிக்கிறது,” என்றார்.
இதுவரை சுமார் இரண்டு டிஎம்சி தண்ணீர் இந்த விழாவிற்காக திறந்துவிடப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுவதாக தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
”கடும் தண்ணீர் பஞ்சம் நிலவும் சமயத்தில், ஒவ்வொரு சொட்டு தண்ணீருக்காகவும் நாம் அண்டை மாநிலங்களிடன் பிரச்சனைகளை சந்திக்கும் நேரத்தில் இந்த விழவிற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது பெரும் அதிர்ச்சியாக உள்ளது” என்றார் சண்முகம்.<>காவிரி மகாபுஷ்காரம் விழா குழுவின் தலைவர் ராமனந்தாவிடம் பேசியபோது, தேவையான அளவு தண்ணீர் விழாவுக்கு திறந்துவிடப்படவில்லை என்றும் மேலும் தண்ணீர் வேண்டி அரசுக்கு மனு அளித்துள்ளதாகவும் கூறினார். ”12 நாட்கள் நடக்கும் இந்த விழா காவிரி செழிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் நடத்தப்படுகிறது” என்றார் ராமானந்தா.< புஷ்கரம் விழாவிற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவு குறித்து கேட்டபோது தமிழக அரசு அதிகாரிகள் பதில் தர மறுத்துவிட்டனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணியிடம் கருத்துக் கேட்டபோது கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுப்பணித் துறை செயலர் பிரபாகரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. அவருக்கு அனுப்பட்ட மின்னஞ்சல் அவருக்கு கிடைத்துவிட்டதாக அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை அவரது பதில் கிடைக்கவில்லை.
திருச்சி மாவட்ட தலைமை பொறியாளர் செந்தில்குமாரிடம் பேசியபோது காவிரியில் புஷ்காரம் விழாவிற்காக தனியாக தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்றார். ”தற்போது ஆற்றில் உள்ள தண்ணீர் விவசாயிகளின் குடிநீர் மற்றும் கால்நடைகளின் குடிநீர் பயன்பாட்டிற்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர்,” என்றார்.
காவிரி ஆற்றில் பல ஆயிரக்கணக்கான மக்கள் நீராடும் தண்ணீர் எவ்வாறு குடிநீர் பயன்பாட்டிற்கு உதவும் என்று கேட்டபோது அதை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை என்றும் மேலும் விவரங்களை தன்னால் தர இயலாது என்றும் கூறினார்.
bbc

கருத்துகள் இல்லை: