திங்கள், 18 செப்டம்பர், 2017

நீதிமன்றம் கைவிட்டால் ராஜினாமா - திமுக திடீர் முடிவு!

டிஜிட்டல் திண்ணை: நீதிமன்றம் கைவிட்டால் ராஜினாமா - திமுக திடீர் முடிவு!மின்னம்பலம் :  “தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை கட்சித் தாவல் சட்டத்தின்படி தகுதி நீக்கம் செய்துவிட்டார் சபாநாயகர். நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வரும், ஆட்சி கலையும் என்பது திமுகவின் எதிர்பார்ப்பாக இருந்தது. திண்டுக்கல்லில் நடந்த முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேசும்போது, ‘எப்போது திமுக ஆட்சிக்கு வரும் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருகிறார்கள். மைனாரிட்டி அதிமுக அரசை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அந்த வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரவில்லை எனில் மக்கள் விரும்பாத இந்த எடப்பாடி ஆட்சியை அகற்ற மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்’ என வெளிப்படையாகவே அறிவித்தார். எப்படியும் நம்பிக்கை வாக்கெடுப்பு வந்தால் எடப்பாடி அரசு வீட்டுக்குப் போய்விடும் என்பதுதான் ஸ்டாலின் எதிர்பார்ப்பாக இருந்தது.


இப்படியான சூழ்நிலையில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க நடவடிக்கையை சபாநாயகர் அதிரடியாக எடுப்பார் என ஸ்டாலின் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ‘முதல்வரும், சபாநாயகரும் இணைந்து ஜனநாயகப் படுகொலை செய்துள்ளனர்’ என மீடியா முன்பு கொந்தளித்தார் ஸ்டாலின். இது தொடர்பாக திமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் பேசிய ஸ்டாலின், ‘நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தாலும் ஜெயிச்சாகணும்னுதான் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்காங்க. நீதிமன்றத்துக்குப் போனால் நிச்சயம் அது செல்லாதுன்னுதான் தீர்ப்பு வரும். ஒருவேளை நீதிமன்றம் கைவிட்டால், அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என யோசிக்கணும். நம்ம எம்.எல்.ஏ.க்கள் எல்லோரையும் அதிரடியாக ராஜினாமா செய்ய வைக்கிறதுதான் சரியாக இருக்கும். ஏன்னா இது தினகரனுக்கும் பழனிசாமிக்கும் நடக்குற யுத்தமாக இருந்தாலும், நமக்கும் இது கௌரவப் பிரச்னை. அதனால இந்த சந்தர்ப்பத்தை விட்டுடக் கூடாது. நாளைக்கு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இதைப் பேசி முடிவெடுத்துடலாம்...’ என்று சொன்னாராம். அப்போது உடன் இருந்த நிர்வாகிகள் எல்லோருமே அதற்கு சம்மதம் சொன்னதாக சொல்கிறார்கள் ” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், ஸ்டேட்டஸ் ஒன்றையும் டைப்பிங் செய்ய ஆரம்பித்தது. “எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி வாதாடினார். கபில் சிபில் இந்த வழக்கில் ஆஜரானது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையில்தான் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க நடவடிக்கையை சபாநாயகர் கையிலெடுத்திருக்கிறார். ஆளுநர் இப்போது உடனடியாக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உத்தரவிடுவார் என்பதையும் திமுக எதிர்பார்க்கிறது. ஏற்கெனவே 20ஆம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

எப்படியும் 21ஆம் தேதி தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சட்டப்பேரவையைக் கூட்டுவதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்றும் சொல்கிறார்கள். இந்தத் தகவல் எடப்பாடி தரப்புக்கும் சொல்லப்பட்டிருக்கிறதாம். அதனால்தான், இன்று பிற்பகலிலிருந்தே சட்டப்பேரவையைத் தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ராஜ் நாத் சிங்குடன் கவர்னர் இன்று ஆலோசனை நடத்திவிட்டார். அவர்கள் உத்தரவுபடி, தமிழகத்துக்கு வந்ததும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் தேதி குறிப்பார் என்றும் அதிமுக தரப்பில் சொல்கிறார்கள்.
18 பேரை நீக்கிவிடுங்கள், சட்ட ரீதியாக பார்த்துக்கொள்ளலாம். மூத்த வழக்கறிஞரான முகில் ரோத்தகியை நான் அனுப்பிவைக்கிறேன் என்று யோசனை சொன்னவரே மத்திய நிதி அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான அருண் ஜெட்லிதான். தினகரன் தரப்புக்கு ஆதரவாக வாதாட வரவிருப்பவர் சல்மான் குர்ஷித்தாம். இவரும் மூத்த வழக்கறிஞர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர்கள் மோத இருக்கின்றார்கள்” என்ற ஸ்டேட்டஸுக்கு போஸ்ட் கொடுத்துவிட்டு சைன் அவுட் ஆனது

கருத்துகள் இல்லை: