கல்வி கடன் வசூல் குறித்து தமிழக அரசை கேள்வி கேட்டு நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார் திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி. அதில், ‘கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு தனது கொள்கை முடிவின்படி, கடன் தந்து பிறகு அவர்களிடமிருந்து வசூலிக்க கடன் ஒப்பந்த உறுதிமொழி (பெற்றோர் களிடமும்) பெற்றுள்ள நிலையில், அக்கடன் ஒழுங்காக திருப்பிச் செலுத்த வேண்டியது முறைதான். ஆனால், வேலை வாய்ப்பின்மை, வறுமைச் சூழல்… இப்படி எத்தனையோ இடர்ப்பாடுகள் இருக்கலாம். அதன் காரணமாக அக்கடனை திருப்பி உடனடியாகத் தர முடியாமல் இருக்கலாம். மனிதாபிமானத்துக்கு முற்றிலும் விரோதமாக, வங்கிகள் கூலிப்படைகளையோ, அடியாட்களை வைத்து மிரட்டியோ, வசூலிக்க முயற்சிக்கக் கூடாதல்லவா!
சட்ட நெறிமுறைகள் மூலம்தான் கடனை வசூலிக்க வேண்டும். இந்நிலையில், சில வங்கிகளின் கடனை வசூலிக்கும் பொறுப்பினை அம்பானியின் ரிலையன்ஸ் கார்ப்பரேட் நிறுவனத்திடம் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் விட்டிருப்பது பச்சையானச் சட்ட விரோதமும், நியாய மீறலுமாகும்!
எந்த வங்கிச் சட்டப் பிரிவின்கீழ் இப்படி தனியார் கம்பெனி மூலம் பொதுத் துறை (அரசுடைமை) வங்கிகள் கடன் வசூலைச் செய்ய முடியும்? முடியாதே! மத்திய, மாநில அரசுகளின் இத்தகு சட்ட விரோத நடவடிக்கைகளால் இளம் மாணவர் ஒருவர் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி, மனிதநேயம் உள்ளவர்கள் நெஞ்சில் ரத்தக் கண்ணீரை வடியச் செய்யும் கொடுமையல்லவா!
புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு, மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்வோம் என்று தேர்தலின்போது வாக்குறுதி கொடுத்தது என்னாயிற்று? தமிழ்நாடு அரசு, முதல்வர் அவ்வங்கி அதிகாரிகளை அழைத்து, இதனைச் செயல்படுத்தவிருக்கிறோம். எனவே, இந்த இடைத்தரகர்கள் கொடுமையெல்லாம் செய்யாதீர்கள் என்று எச்சரிக்கை செய்ய வேண்டாமா? மதுரை அவனியாபுரம் கொத்தனார் வேலை பார்ப்பவரின் மகன் லெனின் என்னும் மாணவ இளந்தளிர் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனதால் விளைந்த உயிர்ப் பறிப்புக்கு யார் பொறுப்பு? உடனடியாக வங்கிகளின் இந்த ‘ஈட்டிக்காரன்’ கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இன்றேல், திராவிடர் கழகம், திராவிட மாணவர் கழகம் நாடு தழுவிய அறப்போராட்டத்தில் ஈடுபடுவது உறுதி! உறுதி!' என்று கூறப்பட்டுள்ளது மின்னம்பலம் காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக