உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் இறங்கிவிட்டன. '
அனைத்து உள்ளாட்சி இடங்களிலும் தனித்துக் களமிறங்க வேண்டும். கூட்டணிகளை
நம்புவதால் பலவீனப்பட்டே வந்திருக்கிறோம்' என கருணாநிதியிடம்
ஆதங்கப்பட்டிருக்கிறார் கனிமொழி.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, உள்கட்சி விவகாரங்களை கவனித்துக் கொண்டு வருகிறார் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின். தேர்தல் நேரத்தில் உள்ளடி வேலைகளில் ஈடுபட்ட மாவட்டச் செயலாளர்களை ஒதுக்கி வைக்கும் பணிகளும் ஒருபுறம் நடந்து வருகின்றன
.
அதேநேரம், அக்டோபரில் நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது
குறித்து, கட்சியின் சீனியர்களிடம் கருத்துக் கேட்டு வருகிறார் தி.மு.க
தலைவர் கருணாநிதி. அண்மையில் தி.மு.க தலைவர் கருணாநிதியிடம், இதுபற்றி
நீண்ட நேரம் விவாதித்திருக்கிறார் கனிமொழி.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர்," உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கனிமொழி கூறிய வார்த்தைகள் அனைத்தையும் கலைஞர் ஏற்றுக் கொண்டார். அவர் கூறிய வார்த்தைகளில் ஏராளமான உண்மைகளும் அடங்கியிருந்தன. தலைவரிடம் அவர் பேசும்போது, ‘ 1986-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் நாம் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தோம். அப்போது அ.தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருந்தது. சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்றிருந்தார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் ஆட்சியில் நிலவி வந்த ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடு காரணமாக, உள்ளாட்சித் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் அதிக இடங்களில் நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் நாம் வெற்றி பெற்றோம். தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நமது வாக்கு வங்கியை தங்க வைத்திருக்கிறோம். எனவே, உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தயவு இல்லாமல், அனைத்து இடங்களிலும் நாம் தனித்துக் களமிறங்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க ஆட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருந்ததால்தான், இவ்வளவு எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் நமக்குக் கிடைத்தார்கள். அது உள்ளாட்சித் தேர்தலிலும் பிரதிபலிக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது. எனவே, காங்கிரஸை கூட்டணியில் சேர்க்காமல் தனித்துக் களமிறங்குவோம்’ எனச் சொல்லவும், கலைஞரோ, ‘ தென்மாவட்டங்களில் காங்கிரஸ் நம்மோடு இருந்தால் வெற்றி வாய்ப்பு வலுவாக இருக்கும்’ எனச் சொல்ல,
கனிமொழியோ, ‘ தொடக்கத்தில் இருந்தே ராஜாஜி அணி, மூப்பனார் அணி, சோனியா அணி என மாறி மாறி கூட்டணி வைத்துக் கொண்டே தேர்தலை சந்தித்து வந்திருக்கிறோம். இந்த மாவட்டத்தில் இந்தக் கட்சியோடு கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும் என கணக்குப் போட்டுக் கொண்டே இருந்துவிட்டோம். அதனால்தான் நம்மால் அனைத்து மாவட்டங்களிலும் வலுவாக கால் ஊன்ற முடியவில்லை. கிருஷ்ணகிரி முதற்கொண்டு கன்னியாகுமரி வரையில் அனைத்து சமூகங்களுக்குமான கட்சியாக நாம் வளர வேண்டும் என்றால், தனித்துப் போட்டியிட்டால் மட்டுமே சாத்தியம். அதைத்தான் ஜெயலலிதா சாத்தியப்படுத்திக் கொண்டு வருகிறார். கூட்டணிகளை நம்பாமல் தனித்துக் களம் கண்டு அவர் வெற்றியடைகிறார். இந்த வகையில் அவரைப் பின்பற்றுவதில் என்ன தவறு இருக்க முடியும்?. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியைப் பற்றிப் பேசிக் கொள்ளலாம். உள்ளாட்சியில் தனித்துப் போட்டியிட்டு, அதிக இடங்களில் வெற்றி பெற்றால், தொண்டர்கள் மத்தியில் பழைய எழுச்சியைப் பார்க்க முடியும்’ என அழுத்தமாகக் கூறினார். அவரது வார்த்தைகளுக்கு கலைஞர் மறுப்பு சொல்லவில்லை. எனவே, உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் தனித்துக் களமிறங்கவே வாய்ப்பு அதிகம்” என்றார் விரிவாக.
“ உள்ளாட்சியில் ஒருவேளை காங்கிரஸோடு கூட்டணி வைத்தாலும், 20 சதவீத இடங்களை அவர்களுக்குக் கொடுக்க வேண்டியது வரும். உதாரணமாக, சென்னை மாநகராட்சியில் நாற்பது வார்டுகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கினால், அ.தி.மு.கவுக்கு நாற்பது கவுன்சிலர்களை தாரை வார்த்தது போல் ஆகிவிடும். சட்டமன்றத் தேர்தலிலும் அதுதான் நடந்தது. இந்த 20 சதவீத இடங்களிலும் நாங்களே போட்டியிட்டால், அதிகப்படியான கவுன்சிலர்களையும் நகரசபைத் தலைவர்களையும் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தொகுதிகளில் தி.மு.கவே அதிக இடங்களில் வென்றிருக்கிறது. எனவே, சென்னை மாநகராட்சி மேயர் பதவி எங்கள் வசம் வருவதற்கே வாய்ப்பு அதிகம். காங்கிரஸ் கூட்டணி வேண்டாம் என்பதில் ஸ்டாலினும் உறுதியாக இருக்கிறார்” என்கிறார் அறிவாலய நிர்வாகி ஒருவர்.
இந்நிலையில், அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி, தே.மு.தி.க, த.மா.கா, நாம் தமிழர் என ஏழு முனைப் போட்டிகளைக் கொண்டதாக உள்ளாட்சித் தேர்தல் அமையும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள் விகடன்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக