திங்கள், 18 ஜூலை, 2016

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நெருக்கடியால் பொறியியல் மாணவர் லெனின் தற்கொலை

மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த மாணவர் லெனின், பாரத் ஸ்டேட் வங்கியில் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கல்விக் கடனாக பெற்று, சிவில் பாடப் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.
பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி, மாணவர்களுக்கு வழங்கி உள்ள கல்விக் கடன்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 45 சதவீத மதிப்பிலான விலைக்கு விற்பனை செய்து உள்ளது. இதனால் கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு கடனை கட்டுமாறு ரிலையன்ஸ் நிறுவனம் கடிதம் அனுப்பி வருகிறது. அதோடு மட்டுமின்றி, கடனை வசூலிக்க அடியாட்களை பணியாளர்களாக சேர்த்து, மாணவர்களையும், அவர்களுடைய பெற்றோரையும் மிரட்டி வருகின்றனர்.

படிப்பை முடித்து ஒரு மாத காலமே ஆன நிலையில், லெனின் பெற்ற கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்துமாறு வங்கி நிர்வாகம் ரிலையன்ஸ் முகவர் மூலம் நிர்பந்தப்படுத்தி இருக்கிறது. ரிலையன்ஸ் முகவர்கள் ரவுடிகளைப் போல நெருக்கடி தந்ததால் மனம் உடைந்த மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.


சென்னை : கல்விக் கடனை திரும்ப செலுத்தக் கேட்டு மிரட்டிய பாரத ஸ்டேட் வங்கி, ரிலையன்ஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில தலைவர் செந்தில், செயலாளர் பாலா ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்ட அறிக்கை: மதுரை மாவட்டம், அனுப்பானடியை சேர்ந்த மாணவர் லெனின்,  வங்கியில் பெற்ற கல்விக் கடன் ரூ.1.90 லட்சத்தை திரும்ப செலுத்தக் கேட்டு பாரத வங்கி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் ஆகியவை மாணவர் லெனினை மிரட்டி வந்துள்ளன. இதனால் அந்த மாணவர் மன உளைச்சலுக்கு ஆளாகி 15ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
கல்விக் கடன் பெறும் இளைஞர்கள் படித்து முடித்து வேலைக்கு சென்றபிறகு கல்விக் கடனை முடிந்தவரை செலுத்தி வருகின்றனர். ஆனால், வேலை இல்லாத இளைஞர்கள் பல லட்சம் ரூபாய் கடனை எப்படி திருப்பி செலுத்துவார்கள்.


ஏற்கனவே, உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் கல்வி கடனை வசூலிக்க குண்டர்கள் மற்றும் ஏஜென்ட்களை பயன்படுத்தக்கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது. இதையும் மீறி வங்கிகள் மாணவர்கள் உயிரை பறிக்கும் செயல்களில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது. எனவே, மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் விதமாக நடந்து கொண்ட பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரத வங்கி தான் கொடுத்த கல்விக் கடனை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் விற்றதை ரத்து செய்ய வேண்டும். அனைத்து மாணவர்களின் கல்வி கடன்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். கல்விக் கடன் ரத்து, படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மதுரையில் கண்டன  ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதன் தொடர்ச்சியாக பிற மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும். இவ்வாறு செந்தில் மற்றும் பாலா ஆகியோர் அறிக்கையில் கூறியுள்ளனர். தினகரன்.கம

கருத்துகள் இல்லை: