ஞாயிறு, 5 ஜூன், 2016

மிஸ்டர் கழுகு: JUNE ஜுரம் - நிரந்தர நிம்மதியா... அடுத்த தலைவலியா?

கழுகார் உள்ளே நுழைந்ததும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை தொடர்பான நமது நிருபரின் கட்டுரையை வாங்கிப் படித்துவிட்டு திருப்பித் தந்தபடி சொல்ல ஆரம்பித்தார். ‘‘டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் ஜெயலலிதா வழக்கை இந்தியாவே உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு இது வாழ்க்கைப் பிரச்னை. இதிலாவது, ஜெயலலிதாவுக்கு பின்னடைவு இருக்குமா என்று கருணாநிதி காத்துக்கொண்டு இருக்கிறார். அவர் 41 சீட்டுகளை காங்கிரஸ் கட்சிக்குத் தூக்கித்தரக் காரணமே இந்த வழக்குதான். சொத்துக் குவிப்பு வழக்கை ஒழுங்காக நடத்த வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் அரசுக்குச் சொல்வதற்காகத்தான் கருணாநிதி இத்தனை சீட்டுகளைக் கொடுத்தார். இந்தத் தீர்ப்பில்தான் ஜெயலலிதாவின் எதிர்காலம் அடங்கி இருப்பதாக பி.ஜே.பி-யும் நினைக்கிறது. இந்தியாவின் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் பல ஊழல் வழக்குகள் விசாரணையில் உள்ளன. இந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பைப் பொறுத்தே அவற்றின் விசாரணையும் நடக்கும். எனவே, அனைத்துத் தரப்பும் உன்னிப்பாகக் கவனிக்கும் வழக்காகச் சொத்துக் குவிப்பு வழக்கு மாறி இருக்கிறது.”


‘‘வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் உதிர்க்கும் வார்த்தைகளைக் கவனித்தீரா?”

‘‘அதைத்தான் சொல்ல வருகிறேன். ‘வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்ப்பது தவறல்ல’ என்று நீதிபதிகள் சொன்னதற்குப் பலரும் பல அர்த்தங்களைச் சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள். நீதிபதிகள் சொன்னதன் அர்த்தம் வேறு... ஊடகங்கள் புரிந்துகொண்ட அர்த்தம் வேறு. அதனால், பரபரப்பாகிவிட்டது.”

‘‘என்ன அர்த்தத்தில் அதைச் சொன்னார்களாம்?”

‘‘நீதிபதிகள் சொன்னதன் சாரம், ‘ஒருவர் கடன் வாங்கித் தொழில் செய்து, அதில் லாபம் ஈட்டிச் சொத்துச் சேர்த்தால் அது தவறல்ல’ என்றனர். அப்படிச் சொன்னதை கர்நாடக அரசின் மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யாவும் ஏற்றுக்கொண்டார். ‘அது உண்மையும்கூட. ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கில் உள்ள சிக்கல் அதுவல்ல. இந்த வழக்கில், ஜெயலலிதா கடன் வாங்கியது சசிகலாவிடம் இருந்து, சசிகலா கடன் வாங்கியது ஜெயலலிதாவிடம் இருந்து. இவர்கள் இருவரிடம் இருந்தும் இளவரசியும் சுதாகரனும் கடன் பெற்றுள்ளனர். ஆனால், சசிகலாவுக்குக் கோடிக்கணக்கில் கடன் கொடுப்பதற்கு, ஜெயலலிதாவுக்கு எங்கிருந்து பணம் வந்தது? ஜெயலலிதாவுக்கு லட்சக்கணக்கில் கடன் கொடுப்பதற்கு சசிகலாவுக்கு ஏது பணம் என்பதுதான் சிக்கலே. அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பதை ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரால் தெளிவாக நிரூபிக்க முடியவில்லை. இவரைக் கேட்டால் அவரை கை காட்டுகிறார்... அவரைக் கேட்டால் இவரை கை நீட்டுகிறார். எப்படிப் பணம் வந்தது என்பதை ஒருவர் நிரூபிக்கவில்லை என்றால், அந்தப் பணம் தவறான வழியில் வந்தது என்பது சாதாரணமாக எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அந்தச் சாதரண விஷயம்தான் இந்த வழக்கின் அடிப்படை முடிச்சு’ என்ற பொருளில் ஆச்சார்யா விளக்கம் அளித்தார்!”

‘‘தீர்ப்பு நெருங்கி வருகிறதா?”

‘‘அரசுத் தரப்பு - குற்றவாளிகள் தரப்பின் இறுதிவாதம் நிறைவடைந்துவிட்டது. இனிமேல் இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனங்கள் தொடர்பான வாதம் 7-ம் தேதி தொடங்க உள்ளது. அது எப்படிப் பார்த்தாலும் மூன்று நாட்களுக்கு மேல் போகாது என்கின்றனர். அதன்பிறகு தீர்ப்புத் தேதி வெளியாகிவிடும்.”
‘‘தீர்ப்பு எப்படி இருக்குமாம்?”

‘‘எப்படி இருக்கும் என்பதை கர்நாடக அரசின் வழக்கறிஞர் துஷ்யந்த் தவேவும் நீதிபதிகளும் லேசாகச் சுட்டிக்காட்டி உள்ளனர். கர்நாடக அரசு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிடும்போது ஒரு விஷயத்தை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி இருக்கிறார். ‘இந்த வழக்கில் மூன்று வழிகளில் தீர்ப்புச் சொல்லலாம். அவை 1.கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்து, குற்றம்சுமத்தப்பட்டவர்கள் 4 பேரையும் விடுதலை செய்யலாம். 2.கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்துசெய்து, விசாரணை நீதிமன்றத்தின் (குன்ஹா வழங்கிய தீர்ப்பை) தீர்ப்பை உறுதி செய்யலாம் 3.மீண்டும் இந்த வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி, விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், ஆதாரங்​கள், சாட்சிகளை மறு​விசாரணைக்கு உட்படுத்தலாம்’ என்று சொல்லி இருக்கிறார்.”

‘‘மறுபடியும் முதலில் இருந்தா?”

‘‘இதை உன்னிப்பாகக் கவனித்த  நீதிபதிகள், ‘நான்காவது வழி ஏதாவது இருக்கிறதா’ என்று கேள்வியை எழுப்பினர். அதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, ‘இந்த வழக்கு, விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்டுள்ள மேல்முறையீடு அல்ல. மாறாக, கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்டுள்ள மேல்முறையீடு. எனவே, அதை மட்டும் கருத்தில்கொண்டால் இந்த மூன்று வழிகள்தான் உள்ளன’ என்று பதிலளித்தார்.”

‘‘ஓஹோ!”

‘‘அதைக் கேட்ட நீதிபதிகள், ‘உங்களின் எதிர்பார்ப்பு என்ன?’ என்று கேள்வி எழுப்பி னார்கள். அதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, ‘லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்துக்கு நேர் எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு (நீதிபதி குமாரசாமி வழங்கியது) அமைந்துள்ளது. எனவே, அந்தத் தீர்ப்பை ரத்துசெய்து, விசாரணை நீதிமன்றத்தின் (நீதிபதி குன்ஹா வழங்கியது) உச்ச நீதிமன்றம் உறுதிசெய்ய வேண்டும்’ என்றார். அதனை நீதிபதிகள் குறித்துக்கொண்டார்கள்.’’

‘‘இந்த வழக்கைப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கும் மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யாவையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டினார்​களாமே?”

‘‘ஆம். மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா இந்த வழக்கில் தன்னுடைய இறுதி வாதத்தை நிறைவு செய்தபோது, ‘வழக்கறிஞராக எனது 49 ஆண்டுகால அனுபவத்தில், இந்த வழக்கை மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். இந்த வழக்கில், சிக்கலான பல முக்கிய அம்சங்களைத் தெளிவாக எடுத்து​வைத்துள்ளேன். என்னுடைய வாதத்தை முடிந்தவரை சுருக்கமாக ஆனால், நேர்த்தியாக நடத்தியுள்ளேன். ஜெயலலிதா தரப்பினர், சேர்த்த சொத்து எல்லாமே சட்டத்துக்கு விரோதமானவை என்பதை ஆதாரத்துடன் நிரூபித்திருக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு, ‘எனது இறுதிவாதத்தை நிறைவுசெய்யும் இந்த நிமிடத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவனாக  உணர்கிறேன்’ என்றார். அவரது கடந்த 10 ஆண்டு காலத்தை முழுமையாக ஆக்கிரமித்த வழக்கு இது. அதனால்தான் அவர் உணர்ச்சிமயமான​வராகக் காணப்​பட்டு​ள்ளார்.”
‘‘ம்!”

‘‘ஆச்சார்யாவின் உணர்வுகளைப் புரிந்து​கொண்ட நீதிபதிகள், ‘எங்கள் இருவரின் அனுபவத்தையும் சேர்த்தால்கூட உங்களது 49 ஆண்டுகால அனுபவம் வராது. மிகச் சிறப்பாக வாதிட்டுள்ளீர்கள். உங்களது அனுபவத்தில் இருந்து நாங்களும் நிறையக் கற்றுக்கொள்ள முடிந்தது. நாங்களும் நெகிழ்ச்சியாக உணர்கிறோம்’ என்று சொன்னார்கள். இறுதியாக ஆச்சார்யாவைப் பார்த்து, ‘வருமானத்தைவிட அதிகமாகச் சொத்துக் குவிப்பது குற்றமாகுமா? அந்த வருமானம் சட்டத்துக்கு விரோதமாக வந்ததாக இருந்​தால் மட்டும்தானே குற்றமாகும். மேலும், வழக்கில் சேர்க்கப்பட்ட சொத்துக்களும், பணமும் ஜெயலலிதாவுக்கு சொந்தமானவைதான் என்பதை அரசு தரப்பு ஆணித்தரமாக நிரூபித்து இருக்கிறதா?’ என்ற அதிமுக்கியமான கேள்வியை எழுப்பினர்.”

‘‘என்ன சொன்னார் ஆச்சார்யா?”

‘‘அதற்கு ஆச்சார்யா, ‘ஜெயலலிதா தான் சேர்த்துள்ள சொத்துக்கள் அனைத்துக்கும் வருமானவரி கட்டி, அதைச் சட்டத்துக்கு உட்பட்டு சேர்த்ததாகச் சித்தரித்துள்ளார். ஒரு சொத்துக்கு வருமானவரி கட்டினால் மட்டுமே அது நேர்மையாகச் சம்பாதித்த சொத்தாக மாறிவிடாது. எனவே, வருமான வரித் தீர்ப்பாயத்தின் முடிவுகளை, நீங்கள் உங்களுடைய தீர்ப்பில் பரிசீலிக்க வேண்டாமே’ என்று கேட்டுக் கொண்டார். அதைக்கேட்ட நீதிபதிகள், ‘இந்த வழக்கை, உங்களால் முடிந்தவரையில், வேகமாக நடத்தினீர்கள். அதற்கு உங்களுக்கு நன்றி’ என்றனர். கர்நாடக அரசின் மூத்த வழக்​கறிஞர் ஆச்சார்யாவுக்கும் நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர் துஷ்யந்த் தவேவுக்கும் நீதிபதிகளுக்கும் நடைபெற்ற இந்த உரையாடல்களை மிகமிக உன்னிப்பாக அனைத்துத் தரப்பினரும் கவனித்து​உள்ளனர்.’’

‘‘இதைவைத்துப் பார்க்கும்போது..?”

‘‘இதைவைத்துப் பார்க்கும்போது சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்க இருக்கும் தீர்ப்பு ஜெய​லலிதாவுக்கு நிரந்தர நிம்மதியைத் தரப்போகிறதா அல்லது அடுத்த தலைவலியா என்பது ஜூன் மாதத்துக்குள் தெரிந்துவிடும். ஜெயலலிதாவுக்கு ஜூன் ஜுரம் ஆரம்பம் ஆகிவிட்டது” என்றபடி அடுத்த மேட்டருக்குப் போனார் கழுகார்.

‘‘ம.தி.மு.க உயர்நிலைக் குழு கூட்டம் கடந்த 1-ம் தேதி சென்னையில் நடந்தது. அதன்பிறகு மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. பெருத்த தோல்விக்குப் பிறகு கூடிய கூட்டம் இது. கோவை மோகன்குமார், ‘தலைவர் வைகோ பலமான கூட்டணியைக் கட்டி எழுப்பியும் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. இரண்டு ஊழல் கட்சிகளையும் வீழ்த்த நமக்குத் துணையாக இருந்த ஊடகங்கள் கடைசி நேரத்தில் நமக்கு எதிராக இருந்தார்கள்’ என்றாராம். மதுரை பூமிநாதன், ‘நாம் தனியாக நின்றபோது பெற்ற வாக்குகளைவிட இப்போது குறைவான வாக்குகளையே பெற்றி​ருக்கிறோம். தி.மு.க வேட்பாளர் பி.டி.ஆர்.பழனி​வேல்ராஜன் மகன் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. கருணாநிதி, ஸ்டாலின் படத்தைக்கூட போட்டு ஓட்டு கேட்கவில்லை. அந்தத் தொகுதியிலும் ஆளும் கட்சியின் சார்பில் பணம் விளையாடியது. ஆனாலும் தி.மு.க ஜெயித்தது எப்படி? மதுரை, திருச்சியில் பிரமாண்ட மாநாடு நடத்தி எழுச்சியோடு இருந்தும் நாம் தோற்றது ஏன்?’’ என்று கேட்டுள்ளார்.
நெல்லை ராஜேந்திரன், ‘இந்தத் தோல்வியைப் பார்த்து தலைவர் துவண்டுவிட வேண்டாம்... சோர்வடைய வேண்டாம். ஆனால், சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு உடல்நலத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்றாராம். உளுந்தூர்பேட்டை ஜெய்சங்கர், ‘தலைவர் கண்ணீர்த் துளிகளோடு சோர்வாக இருப்பதைப் பார்க்கும்போது எங்களுக்கு வேதனையாக இருக்கிறது. நீங்கள் அழக் கூடாது’ என்றாராம். குளச்சல் சம்பத் சந்திரா, ‘விஜயகாந்த் கட்சியினர் சிலருக்கு நம் தலைவர் மீது வருத்தம் இருக்கிறது. அந்தக் கட்சித் தொண்டர்கள் வைகோவை திட்டுகிறார்கள்’ என்றாராம்.”

‘‘வைகோ என்ன சொன்னாராம்?”

‘‘வைகோ பேசியபோது, ‘மாற்று அரசியல், ஊழல் ஒழிப்பு என்ற கோஷத்தின் அடிப்படையில்தான் இந்த அணி உருவானது. ஆரம்பத்தில் எனக்கு இந்த அணி ஒர்க் அவுட் ஆகுமா என்று ஒரு சந்தேகம் இருந்தது. பணம் விளையாடும் போது நம்மால் என்ன செய்ய முடியும் என்பதால், வேண்டாம் என்றேன். விடுதலைச் சிறுத்தைகளும் கம்யூனிஸ்ட்களும் வற்புறுத்தினார்கள். நானும் சரி என்றேன். மல்லை சத்யாதான், இந்தக் கூட்டணிக்கு விஜயகாந்த், ஜி.கே.வாசன் வந்தால் நல்லா இருக்குமே என்றார். அதை எல்லாருமே ஆதரித்தார்கள். எல்லாருமே விட்டுக்கொடுத்து நடந்தார்கள்.

ஜி.கே.வாசனுக்காக விஜயகாந்த் நிறைய விட்டுக்கொடுத்தார். விஜயகாந்த் வெள்ளந்தி மனிதர். மூன்று டிஜிட்டில் சீட் வேண்டும், முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று மட்டும்தான் விஜயகாந்த் கோரிக்கை வைத்தார். தமிழக மக்கள் நலனுக்காக இந்த அணி தொடர வேண்டும்’ என்ற வைகோ, ‘நம்ம கட்சியில் இருக்கும் தாயகம் தங்கதுரையும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து ‘மதிமுகம்’ என்று ஒரு தொலைக்காட்சியைத் தொடங்கி இருக்கிறார்கள். மக்கள் தினமும் முகம் பார்க்கும் தொலைக்காட்சியில் நமக்கு முக்கியத்துவம் தருவார்கள். நான் விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் வருவேன்’ என்றாராம்” என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார், ‘‘தே.மு.தி.க வேட்பாளர்கள் அனைவருக்கும் பூத் செலவாக 10 லட்சம் ரூபாயைத் தர இருப்பதாக விஜயகாந்த் வாக்குறுதி தந்துள்ளாராம். தேர்தல் முடிந்தபிறகு பூத் செலவுக்கு பணம் தரும் கட்சி என்ற பெருமை அந்தக் கட்சிக்கு கிடைத்துள்ளது” என்றபடி பறந்தார்.   நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை: