செவ்வாய், 3 மே, 2016

என்னை சுத்தி என்னதான் நடக்குது....?!' -உள்குத்து கலக்கத்தில் ஓ.பி.எஸ்

விகடன்.com தேர்தல் பிரசாரம் தொடங்கிய நாள்முதலே ஆர்வம் இல்லாமலேயே தொகுதிக்குள் வலம் வந்தார் ஓ.பன்னீர்செல்வம். சொந்த கட்சிக்காரர்களின் உள்ளடியால் கலங்கிப் போனவர், தனது இரு மகன்களையும் போடி தொகுதியில் களமிறக்கியிருக்கிறார். போடி தொகுதியில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து தி.மு.க வேட்பாளர் லட்சுமணன் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் 28 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில்தான் லட்சுமணன் தோற்றார்.
" இந்த முறை லட்சுமணன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அ.தி.மு.வின் முக்கிய நிர்வாகிகளே மறைமுக வேலை பார்க்கிறார்கள். பல தொகுதிகளில் ஓ.பி.எஸ் பிரசாரத்திற்கு வராமல் கட்சிக்காரர்கள் ஆப்சென்ட் ஆகின்றனர்" என அதிர வைத்தார் தேனி மாவட்ட அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 

 கடந்தமுறை ஓ.பி.எஸ் வெற்றி பெறுவதற்கு தே.மு.தி.க, கம்யூனிஸ்ட் அணிகளின் வாக்குகள் பக்கபலமாக இருந்தன. இந்த முறை இரட்டை இலையை மட்டுமே நம்பி களத்தில் நிற்கிறார். 

தொகுதிக்குள் செல்லும் இடங்களில் அவருக்கு எதிராக பிரசாரம் செய்ய, தனி அணியே கட்சிக்குள் இருக்கிறது. கடந்த சில நாட்களாக, மீனாட்சிபுரம், வலையப்பட்டி, பூதிபுரம், தர்மாபுரி பகுதிகளில் வாக்கு சேகரிக்கச் சென்றார் ஓ.பி.எஸ். அங்கு திரண்டிருந்த மக்கள், 'சென்னைக்கு வந்தா உங்க ஆபீஸ்க்குள்ளேயே நுழைய முடியறதில்லை. போடி தொகுதின்னு சொன்னாலே, கேட்டுக்கு வெளியே நிக்க வச்சு அனுப்பினாங்க. அஞ்சு வருஷமாக தொகுதிக்கு என்ன செஞ்சீங்க? உங்க ஆளுக கமிஷன், காண்ட்ராக்ட்னு பிசியாகிட்டாங்க. எங்க ஊர் பிரச்னையை கவனிச்சீங்களா?' என கேள்வி மேல் கேள்வி கேட்க, நொந்து போனார் ஓ.பி.எஸ். 

அவர்களிடம், 'என் தொகுதி நிதியை முழுக்க உங்களுக்காக செலவு பண்ணியிருக்கேன்' என எவ்வளவோ கெஞ்சியும், மக்கள் அசரவில்லை. அங்கிருந்து கிளம்பியவர், கட்சி நிர்வாகிகளிடம், 'என் தொகுதி நிதியில் வேலையே பார்க்காமல் பில் போட்டு பணம் எடுத்திருக்காங்க. தொகுதியை கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டவர்களும் சரியா வேலை செய்யலை. இப்ப எனக்கு எதிராக பேசக் கூடிய மக்களை தங்க.தமிழ்ச்செல்வன்தான் தூண்டி விடறார்னு சொல்றாங்க. என்னை சுத்தி என்னதான் நடக்குது?'  எனக் கோபப்பட்டார். எங்க போனாலும், 'தங்க.தமிழ்ச்செல்வன் ஆட்களா இருப்பாங்களோ?'ன்னு சந்தேகப்படறார்.

இதைவிடக் கொடுமை, பல பகுதிகளில் உள்ளூர் நிர்வாகிகள், ஓ.பி.எஸ் செல்லும் இடங்களில் பிரசாரத்திற்கே வருவதில்லை. 'உடம்பு சரியில்லை. காதுகுத்து நிகழ்ச்சி இருக்குன்னு' கிளம்பிடறாங்க. இருபது பேர் வர வேண்டிய இடங்கள்ல பத்து பேர் வருவதே பெரிய விஷயமா இருக்கு. அதனால, கடந்த முறை செலவு செய்ததைவிடவும் தாராளமாக செலவு செய்றார் ஓ.பி.எஸ். தொகுதிக்குள் பரவலாக இருக்கும் அதிருப்திகளை அடையாளம் கண்டுபிடிக்க, தன்னுடைய மகன்களான ரவீந்திரநாத்தையும், ஜெயபிரதீப்பையும் களமிறக்கிவிட்டிருக்கார்

எங்கெல்லாம் அதிருப்தி இருக்கோ, அங்கெல்லாம் நிலைமையை சரி செய்யச் சொல்லி உத்தரவு போட்டிருக்கார். அவங்களும் தொகுதிக்குள்ள வலம் வந்துட்டு இருக்காங்க. இதைவிட, தர்மாபுரி பகுதிக்குள்ள போகும்போது, 'உங்க செல் நம்பர் என்னன்னே எங்களுக்குத் தெரியாது. முதல்ல அதைக் கொடுங்கன்னு' அதிர வைச்சார் ஒருத்தர். கடந்தமுறை போலில்லாமல், இந்தமுறை வெற்றிக் கோட்டைத் தொடுவதற்கே ஓ.பி.எஸ் ரொம்பவே கஷ்டப்பட வேண்டியிருக்கும். அ.தி.மு.கவின் உள்ளடிகள் அனைத்தும் தி.மு.க வேட்பாளருக்கே சாதகமாகிக் கொண்டிருக்கிறது.

இதைவிட, ஓ.பி.எஸ் டென்ஷனான சம்பவம் ஒன்றும் இருக்கிறது. பக்கத்து தொகுதிகளில் சேலை, வேட்டி விநியோகம் நடந்தாலும் எந்தப் பிரச்னையும் வர்றதில்லை. ஆனா, போடி தொகுதிக்குள் எந்தப் பகுதியில் விநியோகம் நடந்தாலும், முதல் ஆளா பறக்கும் படை அதிகாரிகள் வந்து நிக்கறாங்க. அயர்ன் பாக்ஸ், சேலை பண்டல்னு ஒண்ணு விடாம அள்ளிட்டுப் போயிட்டாங்க. இதையும் கட்சிக்காரர்கள்தான் போட்டுக் கொடுக்கறாங்கன்னு உறுதியா நம்பறார். இன்னும் பத்து நாள் பிரசாரத்தைக் கடப்பதே பெரிய சாதனையாகத்தான் பார்க்கிறார் ஓ.பி.எஸ்" என்றார் போடி நிலவரத்தை பிரதிபலித்தபடி.

சொந்தகட்சியின் கால்வாரலை கண்கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறார் ஓ.பி.எஸ். மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் அவருக்கு எதிராக இருப்பதால், கார்டனுக்கும் தகவல் பாஸ் செய்ய வழியில்லாமல் தவித்து வருகிறார் ஓ.பி.எஸ்.

-ஆ.விஜயானந்த்

கருத்துகள் இல்லை: