புதன், 4 மே, 2016

வீட்டுக்கு ஒரு லட்சம் இலவசப் பொருள்!?' -ஆழம் பார்க்கிறதா அ.தி.மு.க?

விகடன்.com :அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் ஒரு குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் இலவசப் பொருள் வழங்கப்படலாம்' என அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் நிர்மலா பெரியசாமி பேசியதைக் கேட்டு அதிர்ச்சியில் இருக்கிறார்கள் தி.மு.கவினர். தி.மு.க, காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க என அனைத்துக் கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுவிட்டன. தி.மு.கவின், 'நாங்கள் என்ன செய்யப் போகிறோம்?' என்பதைப் பற்றிய விளம்பரங்களும் மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ஆனால், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இன்னமும் தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. 'தேர்தல் நெருக்கத்தில் அறிக்கை வெளியாகும்போது, வாக்காளர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும்' என்பதால், தன்னுடைய லாஸ்ட் புல்லட்டாக தேர்தல் அறிக்கையை வாசிக்காமல் இருக்கிறார் ஜெயலலிதா. இதையடுத்து, 'வாக்காளர்களுக்கு அம்மா எல்.ஈ.டி டி.வி கொடுப்பார், வாஷிங்மெஷின் கொடுப்பார்' எனக் கட்சியினரே தகவல்களை கசியவிடுகின்றனர்.


'சட்டசபைத் தேர்தலில் இலவசங்கள் எதிரொலிக்காது' என்ற பிரசாரம் ஒருபுறம் இருந்தாலும், ஆளுங்கட்சியின் வாக்குறுதிகள் குறித்த எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் அதிகப்படியாகவே இருக்கிறது. இந்நிலையில், சேலம், எடப்பாடியில் அ.தி.மு.க வேட்பாளர் பழனிச்சாமியை ஆதரித்துப் பிரசாரம் செய்த பிரபல செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி, "தி.மு.கவும் காங்கிரஸும் ஊழல் கட்சிகள். இவர்களின் தேர்தல் அறிக்கையைவிடவும் அம்மாவின் தேர்தல் அறிக்கைதான் இந்தத் தேர்தலில் பிரதானமாக இருக்கப் போகிறது. மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை அம்மா கொடுத்துவிட்டார். இனி உங்கள் வீடுகளுக்குத் தேவையானது பிரிட்ஜ், வாசிங் மெஷின் மட்டும்தான். இந்தத் தேர்தலில் நீங்கள் எதிர்பார்க்காத பலவற்றை அம்மா வாரி வழங்குவார். வீட்டுக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான இலவசப் பொருட்களையும் அம்மா வழங்குவார்" எனப் பேசியிருக்கிறார். இதனை எதிர்பார்க்காத கட்சிக்காரர்கள், 'இப்படியொரு திட்டம் கட்சிக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. இதைப் பற்றி அம்மாவுக்கு முன்னாடியே மேடைகளில் சொல்வது எப்படிச் சரியாகும்?' எனக் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.கவின் தலைமைக் கழக பேச்சாளர் ஒருவர், "இந்த வார இறுதிக்குள் எங்களின் தேர்தல் அறிக்கை வெளியில் வந்துவிடும். யாரும் எதிர்பார்க்காத பல நலத்திட்டங்களை அம்மா அறிவிக்க இருக்கிறார். எடப்பாடியில் நிர்மலா பேசியது அவருடைய சொந்தக் கருத்து. கட்சிக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றார்.
இப்படியொரு விவாதத்தை மக்கள் மத்தியில் உலவவிட்டு, அதற்கான நாடித் துடிப்பை அ.தி.மு.க மேலிடம் கணிக்கிறதா? என்பதும் மிகப் பெரிய கேள்விதான்.

 

ஆ.விஜயானந்த்

கருத்துகள் இல்லை: