வியாழன், 5 மே, 2016

ஏற்கனவே டாஸ்மாக் மூட தொடங்கியாச்சா? வினவு: மே 5 முதல் டாஸ்மாக் மூடப்படும் ஊர்கள் – பட்டியல் 2

karuru-tasmac-shutdown-campaign-3டாஸ்மாக் சாராயத்தின் மூலம் ஒட்டுமொத்த சமூகமே சீரழிந்து வருகிறது என்பதை நாடே அறியும். தற்பொழுது தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா அதிகமாக உள்ளதால், மக்கள் அதிக அளவில் குடித்துவிட்டு இறக்கும் சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது இந்த அரசு. அதற்கு பலியான கரூர் டாஸ்மாக்கில் சென்ற வாரத்தில் திருப்பூரைச் சேர்ந்த துரைசாமி, ஈரோட்டைச் சேர்ந்த கணேசன், பொன்னமராவதியைச் சேர்ந்த கருப்பையா என்று தினம் தினம் டாஸ்மாக்
சாராயத்திற்கு மக்கள் பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில் ராயனூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் (கடை எண் 4952) கடையை அகற்றக் கோரி, முதல் கட்டமாக ராயனூர் சுற்றுவட்டாரப் பகுதியான தில்லைநகர், எம்.ஜி.ஆர்.நகர், அன்புநகர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விரிவான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ராயனூர் பகுதியில் 1000-த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள பகுதியாகும். பெரும்பாலும் டெக்ஸ்டைல்ஸில் வேலை செய்யும் கூலித்தொழிலாளர்கள், தையல் தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் அதிகமாக இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் நாளொன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் மதுவிற்பனை நடைபெறுவதாக புள்ளி விபரத்தின் மூலம் தெரியவருகிறது. எனவே இந்த டாஸ்மாக் சாராயக்கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்களிடையே கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு அதனை மாவட்ட ஆட்சியர், தேர்தல் ஆணையர் அவர்களிடம் மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
karuru-tasmac-shutdown-campaign-1பிரச்சாரத்தின்போது தில்லைநகர் பகுதிமக்கள் பெருத்த ஆதரவு இருந்தது. மேற்கண்ட பகுதியில் உள்ள இளைஞர்கள் டாஸ்மாக் சாரயத்தின் மூலம் வீட்டுக்கொரு குடிகாரர்களாக மாறிவிட்டனர் என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
அதோடு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், “நானும் குடியால் பாதிக்கப்பட்டுள்ளேன். இந்த பழக்கத்திலிருந்து என்னால் மீள முடியவில்லை. அந்தக் கடையை மூடுங்க, நானும் வருகிறேன்” என்றார்.
மேலும் 65 வயதுள்ள இளஞ்சியம் என்பவர், “என் கணவர் குடியினால் இறந்தார். இந்தக் குடிக்கு என் மகனும் அடிமையாகி விட்டான்” என்று பேசிக்கொண்டிருக்கும்போது, “பாருங்க, என் மகன் வீட்டிற்குள்ள குடிச்சிட்டிருக்கிறான் பாருங்க” என்று கண்ணீரோடும், வேதனையுடனும் கூறினார்.
karuru-tasmac-shutdown-campaign-2மூன்று மாதத்திற்கு முன்பு இதே பகுதியைச் சேர்ந்த வேலன் என்கின்ற 27 வயதுள்ள இளைஞர் ஒருவர் ராயனூர் டாஸ்மாக் அருகில் குடித்துவிட்டு ரோட்டு அருகில் தண்ணீர் கேட்டவாறே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்தவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இச்சம்பவத்தை சோகத்தோடும், ஆதங்கத்தோடும் எங்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
அப்பகுதி இளைஞர் அருண் என்பவர் கூறுகையில், “எங்கள் வீட்டில் எங்கள் தாத்தா குடிச்சாரு, அப்புறம் எங்க அப்பா குடிச்சாரு, அப்புறம் நானும் குடிச்சே, இந்த குடியினால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை, மற்றவர்கள் என்னை தரக்குறைவாக பார்த்தனர். இதனால் நான் கடந்த 6 வருடமாக குடிக்கிறத நிறுத்திட்டேன், இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற நானும் உங்களுடன் சேர்ந்து போராடுவேன்” என்று உறுதியுடன் கூறினார்.
karuru-tasmac-shutdown-campaign-4அதன்பின்னர் அப்பகுதி மக்களிடம் கையெழுத்து பெற்று இன்று 02-05-2016 அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடியாததால், கரூர் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம்  அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவினை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர், “இது சம்மந்தப்பட்ட அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” என்று எந்திரகதியில் பதிலளித்தார்.
அவரிடம் தோழர்கள், “மக்கள் அதிகாரம் அமைப்பு கரூர் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தொடர்ந்து டாஸ்மாக் பிரச்சினையில் தலையிட்டு போராடி வருகிறது. கடந்த வாரம் கணேசன், துரைசாமி, கருப்பையா ஆகிய மூன்றுபேர் கரூர் டாஸ்மாக் சாராயத்தால் இறந்து போனார்கள்; எனவே சாராயச் சாவை தடுத்து நிறுத்தவும், அதனை தொடர்ந்து ராயனூர் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை எண் 4952 கடையை உடனடியாக அகற்ற வேண்டும்” என்றும் இல்லையென்றால் மக்களே மூடுவார்கள் என்று சொல்லப்பட்டது..
மேற்கண்ட பகுதி இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் இதில் கலந்து கொண்டனர். அடுத்த கட்டமாக டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கான களப்பணி இப்பகுதி மக்களோடு சேர்ந்து செயல்படுத்தப்படுகிறது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல்
மக்கள் அதிகாரம், கரூர்

7. கோவை

டாஸ்மாக்கை மூடு! மே 5 கெடு!!
கோவை மாவட்ட மக்களுக்கு மக்கள் அதிகாரம் தோழர்களின் அறிமுகமே, அதிரடியாக சாய்பாபா காலனி டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய காட்சிகளை தொலைக்காட்சியில் காணும் போது தான். அந்த நிகழ்வை தொடர்ந்து மக்கள்அதிகாரம் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் சாராயக் கடைக்கு எதிராக போராடி வருகிறார்கள். ஏப்ரல் 20-ம் தேதி நடைபெற்ற டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம் என கோவை மாவட்டத்தில் மக்கள் அதிகாரம் சாராயத்துக்கும் பணத்துக்கும் அடிபணியாத அதிகார வர்க்கத்தின் புதிய பிரதான பிரச்சினையாக மக்களுக்காக போராடும் புத்தம்புதிய தூய ஆற்றலாக உருவாகிக் கொண்டிருக்கிறது.
இதன் அடுத்த கட்ட நகர்வாக, மே 2-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
மே 5-ம் தேதி பாப்பநாயக்கன் பாளையம் டாஸ்மாக் சாராயக் கடையை மூடப் போகும் போராட்ட அறிவிப்பினை ஒரு மனுவாக மாற்றி கொடுக்க மக்கள் அதிகாரம் தோழர்கள் சென்றோம். இது தேர்தல் காலமாதலால் அனைத்து அதிகாரிகளும் அந்த பரபரப்பில் இருப்பதாகவும் எனவே இன்று ஆட்சியரை பார்த்து மனுக் கொடுக்க வாய்ப்பில்லை என்றும், எனவே கலால் துறை அதிகாரியை பார்க்குமாறு கூறவே அவரை சற்று நேரம் தேடினோம். அரை மணி நேர தேடுதலுக்கு பிறகு ஒரு வழியாக அந்த அதிகாரியை கண்டுபிடித்து மனுவை அவரிடம் நீட்டி,
“சார்,  நாங்க மக்கள் அதிகாரத்திலிருந்து வரோம். வர மே 5 ஆம் தேதி
பாப்பநாயக்கன் பாளையம் பகுதி டாஸ்மாக் கடையை மூடப் போறோம் அதுக்காக மனு இந்தாங்க ”
முகத்தில் கேள்வி ரேகைகளுடன் மனுவை வாங்கியவர் இந்த வார்த்தையை கேட்க கேட்க அதிர்ச்சியில் அப்படியே மனுவை டேபிளில் நழுவ விட்டுவிட்டு நம்மை நோக்கினார்.
பின்பு, “என்ன நீங்க இப்பிடி பேசுறீங்க இப்பிடிலாம் பேசக் கூடாது ஒரு அதிகாரிகிட்ட, மொதல்ல எப்பிடி பேசணும்னு கத்துக்கங்க, இப்படியெல்லாம் அதிகாரம் பண்ணி பேசக் கூடாது. தப்பு இப்பிடி பேசுனா செய்றவன் கூட செய்ய மாட்டான். உங்க பேரு என்ன ?” எனக் கேட்க பின்பு மீண்டும் நமது அறிமுகம் முடிந்தவுடன் மனுவை படிக்காமலே எடுத்து வைத்து கொண்டு, பேச ஆரம்பித்தவர் பேசிக் கொண்டே அந்த மனுவை உதவியாளரின் மூலம் உள்ளே அனுப்பினார்.
பின்பு , எப்படி அதிகாரிகளை அணுக வேண்டும் என பல்வேறு மாடுலெசன்கலில் பேசி நமக்கு வகுப்பு எடுக்க ஆரம்பித்தார்.
“சார் நாங்க பாதிக்கப்பட்டவங்க அந்த கடைய மூடச் சொல்லி பல கட்ட போராட்டம் நடத்தினோம். நீங்க மூடல, அதுனால நாங்க இப்ப இப்பிடி பேசுறோம். இல்ல வேற எப்படி கேட்டா டாஸ்மாக்கை மூடுவீங்கன்னு சொல்லுங்க” என்று கேட்டதற்கு பதில் பேசாமல் வெறித்து பார்த்தார்.
இதற்கிடையில், வெளியே நின்றிருந்த நமது தோழர்கள் மூவரை கிட்டத்தட்ட 10 உளவுத் துறை அதிகாரிகள் சுற்றி வளைத்துக் கொண்டு “மக்கள் அதிகாரமா, என்ன செய்யப் போறீங்க ? சொல்லுங்க., இங்க கலெக்டர் ஆபீசுக்குள்ள எதாச்சும் செய்ய போறீங்களா…? இல்லை வெளியவா…? எத்தன பேரு வந்துருக்கீங்க, யார் யாரு பேரு என்ன போன் நம்பர் என்ன?” என அவசர பரபரப்பில் கேள்விகளாக அடுக்கினார்கள்.
நாம் நடந்தால் கழிவறை சென்றால் தண்ணீர் குடிக்க சென்றால் என எங்கு சென்றாலும் பின்னாடியே வந்து, “நண்பா., நண்பா என்ன செய்ய போறீங்க சொல்லுங்க. சொல்லுங்க” என குடைந்து கொண்டே இருந்தனர். பின்னர் மீண்டும் ஒரு உளவு அதிகாரி நம்மை அணுகி, “ஏதாவது ஒரு க்ளூ’வாச்சும் குடுங்க” என ஆரம்பித்தார்.
இதில் க்ளூ கொடுக்க என்ன இருக்கிறது, நீங்களா டாஸ்மாக்கை மூடப்போகிறீர்களா, இல்லை மக்களே மூடட்டுமா?
தகவல்: மக்கள் அதிகாரம், கோவை
தொடர்புக்கு :: 9585822157

8. குறிஞ்சிப்பாடி

டலூர் மாவட்டம் ஆயித்துறை தீர்த்தனகிரி கிராம பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், சிறுவர்கள் மக்கள் அதிகாரம் தோழர்களுடன் இணைந்து குறிஞ்சிப்பாடி கோட்டாட்சியரிடம், டாஸ்மாக் ஆயித்துறை கடை எண் 2521-ஐ மூடக் கோரி மனு கொடுத்தனர்.
Jpeg
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல்
மக்கள் அதிகாரம், குறிஞ்சிப்பாடி.

9. சென்னை மதுரவாயல்

ரும் மே 5-ம் தேதி நாளை மறுநாள் மதுரவாயல் ரேசன்கடை பேருந்து நிறுத்தத்திற்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடும் போராட்டம், அப்பகுதி டாஸ்மாக் எதிர்ப்புக்குழு மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைமையில் காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது.
அந்த டாஸ்மாக் கடை அரசு விதிமுறைகளை மீறி இயங்கி வருகிறது. தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் உள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ளது. எனவே அந்த டாஸ்மாக் கடையை மூட அந்த பகுதி டாஸ்மாக் எதிர்ப்புக்குழு மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைமையில் வரும் வியாழன் அன்று ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து அந்த அரசு விதியை மீறி இயங்கக்கூடிய டாஸ்மாக் கடையை மூடப்போவதாக அறிவித்துள்ளனர்.
அனைத்து பத்திரிகையாளர்களும் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இடம் : மதுரவாயல் ரேசன் கடை பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை
நேரம் : காலை 11.30 மணிக்கு
நாள் : 05-05-2016
தகவல்: மக்கள் அதிகாரம், சென்னை
9176801656

10. கடலூர் மாவட்டம் ஆனைவாரி

ஆனைவாரி டாஸ்மாக் கடையை மூட அதிகாரிக்கு மக்கள் உத்தரவு
vdm-shutdown-tasmac-1கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகாமையில் உள்ள ஆனைவாரி கிராமத்தில் பேருந்து நிறுத்தத்தில் டாஸ்மாக் சாராயக்கடை உள்ளது. இந்தக் கடைதான் ஆனைவாரி கிராமத்தை சுற்றியுள்ள நல்ல தண்ணீர்குளம், மணக்காடு, பெரிய நெல்லிக்கொல்லை, சின்ன நெல்லிக்கொல்லை, துருஞ்சிக்கொல்லை, மதுவானமேடு, எறும்புர் உட்பட 10 கிராம பெண்களின் தாலியறுப்பது.
இந்தக் கடையை மூடக்கோரி ஓராண்டிற்கு முன்பாகவே தாசில்தாரிடம் மனுகொடுத்து பார்த்தனர். அவர்களாகவே தன்னெழுச்சியாக டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராடினர். அப்போது போலீசார் மக்களை கைது செய்து சிறையில் வைத்துவிடுவேன் என்று அச்சுறுத்தி மதுவிற்கு எதிராக போராடிய மக்களை களைத்தனர். இது இந்த பகுதி மக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. போராடி கடையை மூடமுடியாது, அவர்களே கடையை மூடினால் உண்டு. இல்லையெனில் இது நம் சாபக்கேடு, அனுபவித்து ஆக வேண்டும் என்று விரக்தி அடைந்தனர். இந்த ஓராண்டு காலத்தில் இப்பகுதியில் குடிக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை பெருகியது.
vdm-shutdown-tasmac-2இந்நிலையில் கடந்த எட்டு மாதகாலமாக “மூடு டாஸ்மாக்கை, குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே” என்ற முழக்கத்தை முன்னிறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பு பிரச்சாரம் செய்தது. தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியது ஆகியவற்றை ஊடகங்கள் மூலம் பார்த்து வந்தனர். இதை தொடர்ந்து அருகாமை பகுதி தோழர்கள் மூலமாக திருச்சி மாநாடு, விருத்தாசலம் பொதுக்கூட்டம், விழுப்புரம் டாஸ்மாக் அலுவலக முற்றுகை ஆகியவற்றில் இப்பகுதியை சார்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.
இவை இந்த பகுதி மக்கள் மத்தியில் நம்பிக்கை கீற்றை உருவாக்கியது. தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட மக்கள் அதிகாரம் துணை புரிய வேண்டும் என்று கோரினர்.
vdm-shutdown-tasmac-8இதை அடுத்து கடந்த ஒருவார காலமாக மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர்கள் அந்த மக்களுடனேயே தங்கி ஆனைவாரி கடையை மூட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்சாரத்தின் போது தேர்தல் சமயத்தில் கட்சிகள் மதுவிலக்கு பற்றி பேசுவதை நம்ப தயாராக இல்லை. இருந்தாலும் வேறு வழியில்லை என்று தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்தினர். அவர்களிடம் கடையை மூட தேர்தல் வரை காத்திருக்கத் தேவையில்லை, கட்சிகளின் வாக்குறுதியை நம்பி ஏமாறத் தேவையில்லை, விருத்தாசலம் மேலப்பாலையூர் கடையை மக்களே மூடியதைபோல் நீங்கள் வந்தால் நிச்சயம் ஆனைவாரி கடையையும் மூடமுடியும் என்று நம்பிக்கை ஊட்டப்பட்டது.
இந்த பிரச்சாரத்தை கண்டு பீதியடைந்து உளவுத்துறை போலீசு ஊர் முக்கியஸ்தர்களிடம் சென்று மக்கள் அதிகாரம் அமைப்புடன் செல்லாதீர்கள். சென்றால் சிறை நிச்சயம் என மிரட்டியுள்ளனர். இந்த அச்சுறுத்தும் வேலையை அப்பகுதி வி.சி.க. பா.ம.க. அதிமுக வை சார்ந்த சிலரும் மக்களிடையே செய்தனர்.
vdm-shutdown-tasmac-9இந்த நிலையில், தமிழகம் தழுவிய அளவில் மக்களுடன் இணைந்து மக்கள் அதிகாரம் அமைப்பு 10க்கும் மேற்பட்ட டாஸ்மாக் சாராய கடைகளை மூட மே 5 கெடு விதித்ததும் அதை அறிவிக்கும் விதமாக மே 20ம் தேதி அந்தந்த பகுதி கோட்டாட்சியரிடம் மனுவாக தெரிவிப்பது என முடிவெடுக்கப்பட்டது.
இந்த முடிவை அறிவிக்கும் விதமாக மனுவில் மக்கள், மாணவர்கள் 1200-க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டனர்.
சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க 70 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டடோர் திரண்டனர். ஆரம்பத்தில் மனு கொடுப்பதற்கு வர தயங்கிய பெண்கள் , மற்ற பெண்கள் கிளம்புவதை பார்த்து அவர்களுடன் இணைந்து கொண்டனர். இப்படி பெண்கள் அணிதிரண்டுவிடக்கூடாது என்பதற்காக பொய்ப்பிரச்சாரம், போலீசு பீதியூட்டியவர்கள் வாயடைத்துப் போயினர்.
vdm-shutdown-tasmac-7சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மக்களிடம் தோழர்கள், “இந்த மனு என்பது அரசிடம் கெஞ்சுவது அல்ல, மே 5-க்குள் மூட வுண்டும் என்ற முடிவை அறிவிப்பது. போலீசுக்கு அஞ்சாமல் போராடினால்தான் கடையை மூட முடியும்” என்பதை விளக்கி பேசினர். இந்தக் கூட்டத்தில் புகைப்படம் எடுக்க வந்த உளவுப் பிரிவு போலீசை தோழர்கள் விரட்டியதை பார்த்து போலீசிடம் இப்படித்தான் பேச வேண்டும் என்று கூறினர்.
vdm-shutdown-tasmac-6கோட்டாட்சியரிடம் மனு கொடுத்த பெண்கள், “எனக்கு பெண் குழந்தை உள்ளது, கணவனின் குடியால் இப்போது எப்படி அவர்களை வளர்க்க போகிறேன் என்று தெரியவில்லை. அதற்கு யார் பொறுப்பு? கடையை மூடாவிட்டால் தீக்குளிக்கவும் தயங்கமாட்டேன். மே 5-க்குள் கடையை மூடவில்லையெனில் நாங்களே மூடுவோம்” என பேசினர். இவற்றை அங்கு சூழ்ந்து இருந்த பத்திரிகை தொலைக்காட்சி நிரூபர்கள் படம் பிடித்தனர்.
வழக்கமாக தன்னிடம் வந்து மனுகொடுத்து கெஞ்சியவர்களை பார்த்து பழகிய கோட்டாட்சியர் மக்கள் குறிப்பாக உழைக்கும் பெண்கள் உத்தரவிடுவதை கண்டு அதிர்ச்சியில் அமைதியாக இருந்தார். வலியுறுத்தி பதில் கேட்டபோது நடவடிக்கை எடுப்பதாக கூறி முடித்துக்கொண்டார்.
மனு கொடுக்க வந்த பெண்கள், “இந்த அதிகாரி சாராயக் கடையை மூட மாட்டார். மே 5 -ம் தேதி போராட்டத்திற்கு மக்களை திரட்டி மூடிக்காட்டுவோம்” என்று உறுதியாக கூறினர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல்
மக்கள் அதிகாரம், விருத்தாசலம்

11. பென்னாகரம்

மிழகம் முழுவதும் டாஸ்மாக்கை மூடியே தீருவோம் என்கிற தொடர்போராட்டத்தில் களம் இறங்கியுள்ளது மக்கள் அதிகாரம். அதனுடைய ஒருபகுதியாக தருமபுரியில் நடந்த போராட்டம் .
pennagaram-shutdown-tasmac-2தேர்தல் வந்தால் திருவிழா வந்ததை போல தெருத்தெருவாக வீடு வீடாக களம் இறங்கியிருக்கிறார்கள் ஓட்டுக்கட்சிகள் இவர்களை ஆர்த்தி எடுத்து அழைக்கும் காலம் போய் ஆர்த்தெழுந்து போராடவும் தயாராகியிருக்கிறார்கள் மக்கள். இந்தப் போராட்டத் தீயை அணையவிடாமல் வளர்த்தெடுக்கும் வகையில் மக்கள் அதிகாரம் சார்பாக டாஸ்மாக்கை மூட வேண்டும் என்ற அடிப்படையில் மக்களை திரட்டி 05-05-2016-க்குள் டாஸ்மாக்கை மூட அரசுக்கு கெடு வைக்கப்பட்டுள்ளது. அதனுடைய ஒரு பகுதியாக பென்னாகரம் வட்டாச்சியரிடம் மனு அளித்து தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறது, மக்கள் அதிகாரம்.
மக்கள் அதிகாரம் கடந்த 10 மாதங்களாக பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வந்ததை நீங்கள் அறிவீர்கள். இதனுடை பிரதிபலிப்பாக மதுவை பற்றி பேசாமல் எந்த கட்சியும் ஓட்டுக்கேட்க முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளோம். இருப்பினும் எந்தப் போராட்டத்தையும் கண்டு கொள்ளாத ஜெயலலிதா தேர்தல் வந்தவுடனே படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவேன். அதுதான் என்னுடைய லட்சியம், கொள்கை என்றெல்லாம் பேசுகிறார். யாரை ஏமாற்றுவதற்கு?தமிழ்நாட்டு மக்கள் என்றால் தன்மானமற்றவர்கள் என்று எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அத்தனை வேலைகளையும் செய்து வருகிறார்.
pennagaram-shutdown-tasmac-1இப்படி எல்லா கட்சிகளுமே பேசுகிறார்கள். இவர்கள் பேசுவது எல்லாமே ஒரு ஏமாற்று என்பதை கிராமத்து பாணியில் சொன்னால் போதைக்காரன் பேச்சு பொழுது விடிஞ்சா போச்சு என்பதை போல இன்றைக்கு தேர்தல் மயக்கத்தில் உளறிகொண்டு இருக்கிறார்கள். இதை நம்பி நாம் ஏமாற போகிறோமா?இல்லை போராட போகிறோமா?
அந்த மயக்கத்தை தெளிய வைக்க வேண்டுமென்றால் மக்கள் அதிகாரம் என்னும் சுயமரியாதை மருந்தை எடுக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலே கடந்த ஒரு வாரகாலமாக தருமபுரியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு 1300 கையெழுத்து இயக்கம் நடத்தி இதனை 02-05-2016 நண்பகல் 12 மணியளவில் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் பேரணியை மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் துவக்கிவைத்து உரையாற்றினார்.
அப்போது அன்றாடம், “ஆயிரக்கணக்கான பெண்கள் தாலியறுப்பதும், மாணவர்கள், இளைஞர்கள் சீரழிவதும் என அன்றாடம் வேதனைகளை துடித்துக்கொண்டு இருக்கிறோம். இதனை எல்லாம் கண்டு கொள்ளாமல் தேர்தல் வரை காத்திருங்கள் என்று நமக்கு ஆறுதல் சொல்கிறார்கள். இதெல்லாம் ஏமாற்று நாம் ஏன் தேர்தல் வரை காத்தியிருக்க வேண்டும். இன்றே களம் இறங்குவோம் டாஸ்மாக்கை மூடுவோம். நம் வாழ்க்கையை பாதுகாப்போம்” என்று மக்களிடம் நம்பிக்கையூட்டினார்.
இதனை நூற்றுக்கணக்கான மக்கள் நின்று கவனித்தனர். பிறகு பேரணியாக வழிநெடுகிலும் பிரசுரம் வினியோகித்து சென்றது மக்கள் வியப்பாக நின்று கவனித்தனர். வட்டாட்சியர் அலுவலகம் சென்று வட்டாட்சியர், டாஸ்மாக் அலுவலக அதிகாரி முன்னிலையில் மனு அளிக்கப்பட்டது.
அப்போது, “நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம்” என்று அவர்களுக்கே உரிய பாணியில் பேசினர். இதனை ஏற்றுக்கொண்ட தோழர்கள், “கடையை மூடவில்லை என்றால் மீண்டும் 05-05-2016 அன்று மக்களை திரட்டி கடையை மூடுவோம்” என்று எச்சரிக்கை விடுத்து கலைந்து சென்றனர்.
இது அதிகாரிகள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போராட்டத்தின் மூலமாக தான் டாஸ்மாக்கை மூட முடியும், போராட்டத்தின் மூலமாகத்தான் அனைத்து உரிமைகளையும் பெறமுடியும் என்பதை உணர்த்தும் வகையில்,அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் தயாராகி வருகிறது.
தகவல்:மக்கள் அதிகாரம், தருமபுரி.

கருத்துகள் இல்லை: