வெள்ளி, 6 மே, 2016

பெங்களூரு வாழத் தகுதியற்ற நகரமா? அதிர்ச்சி ஆய்வு

சுற்றுச்சூழலை முறையாக பேணிக்காக்காததன் விளைவு உலகமெங்கும் சுதந்திரமாய் திரிந்த மனத இனம் இன்று வாழ்வதற்கான இடங்களை அடையாளங்காண வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. இயற்கை தரும் எச்சரிக்கைக்கு பெங்களுருவும் தப்பவில்லை. இந்தியாவின் 'சிலிக்கன் வாலி' என்ற புகழ்கொண்ட பெங்களூரு இன்னும் ஐந்து வருடங்களில் அதன் அழகை முற்றிலும் இழந்து வாழத் தகுதியற்ற இடமாக மாறப் போகிறது என அதிர்ச்சி தருகின்றனர் சுற்றுச்சூழலியல் ஆய்வாளர்கள். பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வில்தான் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அந்த ஆய்வின்படி கடந்த 40 வருடங்களில் பெங்களூரு நகரத்தின் வளர்ச்சி 525 சதவிகிதமும், கடந்த 25 ஆண்டுகளில் இங்கு மக்கள் தொகை 150 சதவிகிதமும் உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3000 அடிக்கு மேலே இருக்கும் பெங்களூரு நகரத்தில் ஆறுகள் எதுவும் இல்லை. ஆனால் தமிழகத்தின்  ஏரிகளும், குளங்களுமே பெங்களூரு நகரத்தை உயிர்ப்புடன் அழகாக வைத்திருந்தன.

பெங்களூரு தனது 'கிரீன் சிட்டி' என்ற நிலையில் 78 சதவிகிதத்தை இழந்துவிட்டது. மேலும் 'ஏரிகளின் நகரம்' என்று அழைக்கப்பட்ட இந்த பெங்களூர் தனது 79 சதவிகித நீர்நிலைகளையும் தொலைத்துவிட்டது.
இவை வெறும் எண்கள் அல்ல, நகரமயமாதலின் வேகத்தால் அழிந்த பெங்களூருவின் உண்மை நிலை. பெங்களூரு எந்த வேகத்தில் வளர்ந்ததோ, அதே வேகத்தில் அது அழிந்தும் வந்திருக்கிறது என்கிறார் இந்திய அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரியின் உயிரினவாழ்வு துறையின் பேராசிரியர் டி.வி. ராமச்சந்திரா.
மேலும் காவிரி நதியிலிருந்துதான் 100 கி.மீட்டருக்கு, குழாய் மூலம் பெங்களூருக்கு தண்ணீர் வருகிறது. காவிரி வற்றினால் பெங்களூரு வறண்டு விடும். நிலைமை இன்னும் சிக்கலாகிவிடும்.

மனிதன் தனது திட்டமிடாத வளர்ச்சியானால் தினம் தினம் தன்னைத் தானே கொலை செய்துகொண்டிருக்கிறான், தன் வாழ்வாதாரங்களை தன் கண்முன்னே தொலைத்துவிட்டு நிற்கிறான் என்பதற்கு பெங்களூரு ஒரு உதாரணம் என்கிறார் அவர்.
சில வருடங்களுக்கு முன் இந்தியாவில் வாழத் தகுதியான நகரமாக விளங்கிய பெங்களூரு இன்னும் சில வருடங்களில் வாழத் தகுதியில்லாத நகரமாக மாற இருக்கிறது என்ற அதிர்ச்சியான தகவல்  இயற்சை மனிதனுக்கு தரும் எச்சரிக்கையாகவே உணரமுடிகிறது.

- ஜெ.சரவணன்  விகடன்.com

கருத்துகள் இல்லை: