புதன், 4 மே, 2016

JNU மாணவர்கள் போராட்டத்துக்கு மேற்குவங்க தலைவர்கள் ஆதரவு கரம்


ஜே.என்.யு மாணவர்கள் போராட்டத்திற்கு மேற்குவங்க மாணவர்கள், ஆசிரியர்கள் ஆதரவு
தண்டனையை நீக்க வலியுறுத்தி ஜே.என்.யு மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு மேற்குவங்க மாநில பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கொல்கத்தா ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யு.) மாணவர்கள் சங்கத் தலைவர்கள் மீது விதித்துள்ள தண்டனைகளை ரத்து செய்ய வலியுறுத்தி, மாணவர்கள் சங்கத் தலைவர்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த புதனன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜே.என்.யு மாணவர் போராட்டத்திற்கு மேற்கு வங்கத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களின் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாணவர்கள் சங்கங்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சார்பில் கொல்கத்தா பல்கலைக் கழக ஒய்வுபெற்ற பேராசிரியர் தாஸ்குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாங்கள் ஜே.என்.யு மாணவர்களின் பக்கம் நிற்கிறோம். பல்கலைக்கழக துணை வேந்தர் உயர்மட்ட கமிட்டியின் பரிந்துரைகளை நீக்கி மாணவர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அப்படி செய்தால் பல்கலைக்கழகம் நலிவடையாது. அதற்கு பதிலாக கூடுதல் பொலிவு பெறும்” என்று கூறியுள்ளார்.

இதனிடையே மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் சட்டத்திற்கு புறம்பானது என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகதீஷ் குமார் கூறியுள்ளார்.

மாணவர்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டு பல்கலைக்கழக நிர்வாகத்தை அணுகி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக, ஜே.என்.யு வளாகத்தில் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி அப்சல் குருவிற்கு ஆதரவாக நிகழ்ச்சி நடத்தியதற்காக மாணவர் தலைவர் கன்னையாகுமார் மற்றும் 19 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது.  maalaimalar.com

கருத்துகள் இல்லை: