செவ்வாய், 3 மே, 2016

கொந்தளிக்கும் எதிர்க் கட்சிகள்...எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் தேர்தல் ஆணையர் ராஜேஷ்லக்கானி.....

கொந்தளிக்கும் எதிர்க் கட்சிகள் அனல் பறக்கும் சட்டமன்றத்தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கரன்சிமழை குறித்த புகார்கள் அதிகரித்து இருக்கின்றன. கரூர் மற்றும் சென்னையில் நடைபெற்ற சோதனைகளில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளது. கடந்த 26-ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியிடம் தி.மு.க முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், தமிழகக் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் புகார் அளித்திருக்கின்றனர். அதில் அவர்கள் சொல்லி உள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி ஊட்டுபவை. “எங்கள் கட்சியின் சார்பில் உங்கள் அலுவலகத்துக்கும், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எந்த ஒரு தீவிரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று தேர்தல் ஆணையத்தின் மீது பகிரங்கமாகக் குற்றம்சாட்டி தங்களது புகாரைத் தொடங்குகிறார்கள்.



 பணத்தை திருப்பித்தரச் சொன்னார் கலெக்டர்! ‘‘தேர்தலில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் அ.தி.மு.க-வினரால் பதுக்கப்படுகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.5 கோடி அளவுக்குப் பணம் கொண்டு செல்லப்படுகிறது என்று நாங்கள் கூறியிருந்தோம். ஆனால், கண்துடைப்புக்கு மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தலைமைத் தேர்தல் அதிகாரி அறிக்கையின்படி, கரூர் மற்றும் சென்னையில் அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்களிடம் தலா 5 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கரூரில் 22-ம் தேதி நடந்த சோதனையில் மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் குறுக்கிட்டு, கைப்பற்றப்பட்டப் பணத்தையும் பொருட்களையும் திருப்பிக்கொடுத்துவிடும்படி கூறியிருக்கிறார்.

அந்த மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னர், அதே மாவட்டத்தில் இருந்துதான் ரூ.4.77 கோடி கைப்பற்றப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆளும் கட்சிக்குச் சொந்தமான பள்ளி வளாகத்தில் இருந்து 3.99 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. வேதாரண்யத்தில் ஆம்னி பேருந்தில் இருந்து 1.45 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதிகாரிகள் அ.தி.மு.க அரசின் உத்தரவின்பேரில் செயல்படுகின்றனர். கரூர் அன்புநாதன் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

தேர்தல் நியாயமாக நடக்க வெளிமாநில போலீஸ் உயர் அதிகாரிகளைப் பணி அமர்த்த வேண்டும்” என்று அந்தப் புகாரில் சொல்லப்பட்டு உள்ளது. இந்தப் புகார்கள் குறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் பேசினோம். ‘‘தி.மு.க பல முறை புகார் கொடுத்தும் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறதே?” “நாங்கள் ரெகுலராக நடவடிக்கை எடுத்து வருகிறோம். பண நடமாட்டத்தைக் கண்காணிக்க கடந்த மார்ச் மாதமே மாநிலம் முழுவதும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுக்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் மூலம் இதுபோன்ற சோதனைகள் நடக்கின்றன.

இதுதவிர தேர்தல் ஆணையத்தில் இருந்து கடந்த 4-ம் தேதி எங்களுக்கு ஒரு சர்குலர் அனுப்பி இருக்கிறார்கள். அதன்படி ‘வீடுகளில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாகப் புகார் வரும்போது, அதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள்தான் சோதனை நடத்துவார்கள். அவர்கள் வீட்டுக்குள் சென்று சோதனை நடத்துவார்கள். தேர்தல் ஆணையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும்படை வீட்டுக்கு வெளியே நிற்கவேண்டும். வெளியே யாரும் தப்பிச் செல்ல முடியாதபடி, வேறு நபர்கள் எதையும் எடுத்துச் சென்று விடாதவாறு கண்காணிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருக்கிறது. அதன்படிதான் நாங்கள் செயல்படுகிறோம்.

வீடுகளில் நடைபெறும் சோதனையில் மட்டுமே வருமானவரித் துறையினர் ஈடுபடுகின்றனர். தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ள பறக்கும்படையினர் தொடர்ந்து வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனச் சோதனையில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் கைப்பற்றப்பட்டால் நாங்கள் அதுகுறித்து வருமானவரித் துறைக்குத் தகவல் தெரிவிப்போம்.” “எவ்வளவு பணம் கைப்பற்றப்படுகிறது என்ற தகவல் முழுமையாக வெளியாகவில்லை என்று சொல்கிறார்களே?” “வருமானவரித் துறை எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை.

டெல்லியில் உள்ள வருமானவரித் துறை உயர் அதிகாரிகள் உத்தரவின்படியும், தேர்தல் ஆணையத்தின் தலைமையின் கீழும்தான் அவர்கள் செயல்படுகின்றனர். எத்தனை பேர் சோதனையில் ஈடுபட்டனர். எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது என அவர்கள் டெல்லிக்கு தகவல் சொல்வார்கள். அப்படி அவர்கள் அறிக்கை கொடுக்கும்போது எங்களுக்கு ஒரு நகல் அனுப்புவார்கள். அப்போதுதான் எவ்வளவு கைப்பற்றப்பட்டது என்பது எங்களுக்குத் தெரியவரும். இதுபோல வருமானவரித் துறை சார்பில் சோதனை நடத்தப்படுவது நல்லதுதான்.

” “கரூரில் 22-ம் தேதியே சோதனை நடைபெற்றது என்றும், கலெக்டர் தலையிட்டு பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி சொன்னதாகவும் சொல்கிறார்களே?”

“கலெக்டர் சொல்வதை வருமானவரித் துறை அதிகாரிகள் கேட்க மாட்டார்கள். கலெக்டர் கட்டுப்பாட்டில் அவர்கள் இல்லை.

 வீடுகளில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாகக் கிடைக்கும் தகவல்களைக்கொண்டு வருமானவரித் துறைதான் சோதனை நடத்துகிறது. கிருஷ்ணகிரி உள்ளிட்ட எல்லா இடங்களிலும் அவர்கள்தான் சோதனை செய்கின்றனர். ஏற்கெனவே கூறியபடி நாங்கள் வெளியே இருந்துதான் கண்காணிக்கிறோம்.”

“வருமானவரித் துறை சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் தரும் அறிக்கையின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?” “சோதனையில் கைப்பற்ற பணம் சட்டவிரோதமானது என்று நிரூபிக்கப்படும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வருமானவரித் துறை நடவடிக்கை எடுக்கும். அது தேர்தல் தொடர்பானது என்று தெரியவரும்போதுதான் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.” - சரோஜ்கண்பத், கே.பாலசுப்பிரமணி விகடன்.கம

கருத்துகள் இல்லை: