வியாழன், 8 அக்டோபர், 2015

உங்களால் தைரியமாக புகைப்படம் எடுத்துத் தர இயலுமா?வினவு.com

ரி உங்களுக்கும்
வேண்டாம்; எங்களுக்கும் வேண்டாம்; நேரடியாகவே கேள்வியில் இருந்து ஆரம்பிப்போம். செங்கட்டி சைஸ்ஸில் ஆளுக்கொரு போனை வைத்துக்கொண்டு வெற்றிலைக்கு சுண்ணாம்பு தடவுவதைப்போல போனைப் பயன்படுத்தும் மாணவர்கள் இளைஞர்கள் மட்டுமல்ல யாரெல்லாம் செல்போன் கேமிரா வைத்திருக்கிறீர்களோ அவர்களுக்கான கேள்விதான் இது “உங்களால் தைரியமாக புகைப்படம் எடுத்துத் தர இயலுமா?” என்பது.
“முடியுமே” என்று சவாலை ஏற்றுக்கொள்பவர்கள் மேற்கொண்டு படியுங்கள். நமக்கான பயணத்தை இங்கிருந்து தொடங்குவோம்.
அந்தக் காலத்தில் புகைப்படம் எடுப்பது என்பது மிகச் சவாலான காரியம். தொழில் நுட்பம் அதிகம் வளர்ந்திருக்கவில்லை. பிலிம் ரோலை கேமிராவில் மாட்டி, வெளிச்சம் எல்லாம் சரி பார்த்து அதைப் பல வேதிக் கரைசல்களில் தனியாக டெவலப் பண்ண வேண்டும். பிறகு நிலைப்படுத்த வேண்டும். அதே மாதிரி பிரிண்ட் போடும் பொழுதும் பல கட்ட வேலைகள் செய்ய வேண்டும்.

ஆஸ்திரியாவுக்கு நடந்து செல்லும் அகதிகளின் புகைப்படம்
ஆஸ்திரியாவுக்கு நடந்து செல்லும் அகதிகளின் புகைப்படம்
இதில் பிலிம் ரோலை டெவலப் செய்கிற பொழுது குருட்டு எருமை விட்டத்தில பாய்ந்த கதையாக, இருட்டு அறைக்குள் வேலை செய்வது என்பது மிக மிகக் கடினமான ஒன்று. இதுவே கலர் படமாக இருந்தால் வேதிக்கரைசல்களின் வெப்பநிலை முதற்கொண்டு மிகவும் முக்கியம். இன்றைக்கு இந்தத் தொழில்நுட்பம் கிட்டத்தட்ட அருங்காட்சியகத்தில் தான் இருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் டிஜிடல் தொழில்நுட்பம் வந்துவிட்டது. கேமிராவென்று தனியாக ஒரு கருவி தேவையில்லை. செல்போனிலேயே முன்னாடியும் பின்னாடியும் உயர்தர கேமிராக்கள் வந்துவிட்டன. முன்னாடி இருக்கும் கேமிராவில் செல்பியாக எடுத்துத் தள்ளுகிறார்கள். பின்னாடி இருக்கிற கேமிராவில் பார்ப்பதையெல்லாம் புகைப்படம் எடுக்கிறார்கள்.
ஆக, இன்றைக்கு கிட்டத்தட்ட எல்லோருடைய கைகளிலும் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டிவிட்டர், பிளாக், இன்ஸ்டாகிராம் போன்ற பலவற்றில் கோடிக்கணக்கான புகைப்படங்கள் நாள் தோறும் பதிவேற்றப்படுகின்றன.
இன்றைக்கு மானுடவியலாளர்கள், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படுகிற புகைப்படங்கள் ஒரு மனிதனின் ஆளுமையை அளவிடும் கருவியாக இருக்கின்றன என்று வாதிடுகின்றனர். சான்றாக மோடி போன்றவர்கள் தன் கோட்டில் தன் பெயரையே எழுதிக்கொண்டு செல்ஃபி எடுப்பது நார்சிச மனப்பான்மை அதாவது சுயமோகம் என்றும் வரையறுக்கின்றனர்.
இதைத்தாண்டி இன்றைய இளைஞர்கள் செய்திகளை, வலைத்தளங்கள் மற்றும் இணையத்தில் மூலமாக அணுகுகிற விதத்தைக் கண்டுகொள்ள வேண்டுமென்றால் அதற்கும் கைவசம் Big Data வகையிலான ஆராய்ச்சிகளையும் மேற்கொள்கின்றனர். இதில் Big Data என்பது வலுவான தொழில் மூலதனமாகும். பெரும் அளவில், வரையறுக்கப்பட்ட வடிவில் இல்லாமல், தொடர்ந்து குவிந்து கொண்டிருக்கும் தரவுகளை கையாளுவதற்கான தொழில் நுட்பத்தினால் இது உயிரூட்டப்படுகிறது. சான்றாக, சூப்பர் மார்கெட்டில் வாடிக்கையாளர்கள் என்ன மாதிரியான பொருட்களை வாங்குகிறார்கள் என்பதைக் கவனிக்கிற பொழுது ஒரு பொருளின் சந்தையை, இலாபத்தை ஒரு நிறுவனம் தனது விருப்பப்படி திருப்பிக் கொள்ள முடியும்.
அகதியாக கொல்லப்பட்ட சிரிய சிறுவனின் புகைப்படம்
அகதியாக கொல்லப்பட்ட சிரிய சிறுவனின் புகைப்படம்
இந்த வகையில் செய்திகளை அணுகுகிற வாடிக்கையாளர்களின் நடத்தை குறித்து மிகச் சமீபத்தில் ஆய்வு செய்த டீரிவர் தாம்சன் தலைமையிலான ஆய்வுக்குழு (சிகாகோ பல்கலைக் கழகம்) அவர்களை நான்காக இனம் கண்டிருக்கிறது. அவைகள் முறையே இணைக்கப்படாதவர்கள் (Unattached), கண்டுபிடிப்பாளர்கள் (Explorers), சிதறலானவர்கள் (Distracted) மற்றும் சமூக ஆர்வலர்கள் (Activists) என்பதாகும். செய்திகள் தொடர்பான இந்த ஆய்வை நாம் நம் சூழலிற்கும் புகைப்படங்களை மக்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதற்கும் சற்று பொருத்திப் பார்ப்போம்.
இணைக்கப்படாதவர்கள் என்ற வகையில் 18-லிருந்து 24 வயது வரை உள்ளவர்கள் வருகிறார்கள். இவர்கள் செய்திகளைத் தேடிப்போவதற்கு மாறாக செய்திகளில் விழ வைக்கப்படுகிறவர்கள். நயன்தாரா அரசியல் குதிப்பது வகையிலான செய்திகள்; தீபிகா படுகோன்-ரன்பீர் சேர்ந்திருக்கும் பரபரப்பு புகைப்படங்கள், அஜித், விஜய் பட டீசர் போன்றவை.
கண்டுபிடிப்பாளர் என்ற வகையிலும் இதே 18-லிருந்து 24 வயது உள்ளவர்கள் தான் வருகிறார்கள். இவர்களுக்கு செய்திகளும் புதுப்புது தகவல்களும் அவற்றின் ஆதாயங்கள் பொருட்டு தேவைப்படுகின்றன. வெங்காயம் பதுக்கலின் காரணமாக விலைவாசி கிடுகிடுவென உயர்ந்தபொழுது, வெங்காயத்தை வைத்து உருவாக்கிய புத்தாக்க வாட்ஸ்-அப் படைப்புகள், மோடியின் வெளிநாட்டுப் பயணத்தைக் கழுவி ஊற்றும் புகைப்படங்கள், போராட்டச் செய்திகளைத் தெரிந்து வைத்துக் கொள்பவர்கள், நவதானிய உணவுகளைப் பற்றி எழுதுவது என பலவகைகள் கணக்கில் அடங்காமல் இதில் உண்டு.
சிதறலானவர்கள் என்ற வகையில் 25-லிருந்து 34 வயது வரை உள்ளவர்கள் வருகிறார்கள். இதில் பெரும்பாலும் உள்ளவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நடுத்தரவர்க்கம். இவர்கள் செய்திகள் அல்லது புகைப்படங்களை அணுகுகிற விதம் என்பது தன்னளவில் மட்டுமே. இதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்கு? என்று போகிறவர்களின் முகப்புத்தக பக்கங்கள் எல்லாம் செய்திகளைத்தாங்கி நிற்பதில்லை. மாறாக திருமணப் புகைப்படங்கள், குழந்தைகளின் பல்வேறு பாவனைகள், பைபிள் வசனங்கள் என்பதாக நீள்கின்றன.
நான்காவது தரப்பில் வருகிறவர்கள் சமூக விழிப்புணர்வு மற்றும் இயக்கம் சார்ந்தவர்கள். 25 வயதிலிருந்து 34 வயது வரையிலானவர்களாக இருக்கிறவர்கள். புரட்சிகர இயக்கங்கள், மக்கள் திரள் போராட்டங்களைக் கூர்மையாக கவனிப்பவர்கள், டாஸ்மாக் ஒழிப்பு செய்திகள், சேகுவரா புகைப்படங்கள், ஆம் ஆத்மி (இப்பொழுது கிடையாது), சகாயம் கனிமவளக்கொள்ளையை கவனிப்பது, ஆர்.எஸ்.எஸ் போன்ற மதவெறி கூட்டங்களால் திட்டமிட்டு முன் தள்ளப்படுகிற ஹர்திக் படேல் போன்றவர்களின் இடஒதுக்கீடு போராட்டங்கள் என்று பட்டியல் நீள்கிறது.
இதில் நாம் புகைப்படம் எடுப்பதற்குண்டான அரசியலைப்பற்றி விவாதிக்கிறோம். இப்பொழுது நம்மால் சில விசயங்களைத் தொடர்புபடுத்தி பார்க்க இயலும். இந்த நான்கு தரப்பான மக்களில் புகைப்படம் என்ன மாதிரியான சமூகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது? புகைப்படங்கள் சமூக தாக்கத்தை ஏற்படுத்துமா? அப்படி எனில் தைரியமான புகைப்படம் எடுப்பது என்றால் என்ன? இந்தக் கேள்விகளுக்கு விடை தேட முயற்சி செய்வோம்.
சிறுத்தையின் மீன்வேட்டை
ஆப்ரிக்காவில் சிறுத்தைகள் மீனை வேட்டையாடுவது இதுவரை செய்தியாக மட்டுமே இருந்தது. தற்பொழுதுதான் இது புகைப்படமாக வெளிவந்திருக்கிறது.
புகைப்படத்துறையை பொறுத்தவரை தொழில்நுட்ப ரீதியானது (technology) என்றும் கலை, வடிவக் கலை (art and design) சார்ந்தது என்று இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கிறார்கள். சான்றாக ஆப்ரிக்காவில் சிறுத்தைகள் மீனை வேட்டையாடுவது இதுவரை செய்தியாக மட்டுமே இருந்தது. தற்பொழுதுதான் இது புகைப்படமாக வெளிவந்திருக்கிறது. இத்தகைய புகைப்படங்கள் கானுயிர் புகைப்படங்கள் (wildlife photography) என்று அழைக்கப்படுகின்றன.
இந்தத் துறை வெகு சிலருக்கு மட்டுமே அணுகக் கூடியதாகவும், ஆவணப்படங்களைப் பொறுத்தவரை பிசினஸாகவும் போய்க் கொண்டிருக்கிறது. இதைத்தாண்டி அறிவியலை பதிவு செய்யும் வழிமுறையாக இது பார்க்கப்படுவது வெகுகுறைவு. ஏனெனில் ஏற்கனவே நாம் அனைத்தும் big data வகையிலேயேதான் அதாவது இலாபம் என்னவாக இருக்கிறது என்பதில் தான் அனைத்தும் அணுகப்படுகிறது என்று பார்த்தோம்.
இதைத்தவிர்த்து பார்த்தால் கானுயிர் புகைப்படங்கள் சில சமயங்களில் முக்கியமான தரவுகளாகவும் வந்து நின்றிருக்கின்றன. சான்றாக, ஆஸ்திரேலியாவில் அதானியின் சுரங்கக் கொள்ளை அந்நாட்டு நீதிமன்றத்தால் ரத்து செய்வதற்கு முக்கிய காரணமாக இருந்தது அப்பகுதியில் அரியவகை பல்லிகள் இருந்தது என்ற காரணமே. ஆனால், இதே போன்ற தரவுகள் இந்தியாவிற்கு இருந்தும் வெறும் கானுயிர் புகைப்படங்களை வைத்து மட்டுமே ஆளும் வர்க்கத்தின் கொள்ளையைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
சான்றாக, வடகிழக்கு மாநிலங்களில் அணை கட்டுவது அரியவகை கொக்குகளின் வாழ்வாதரங்களைப் பாதிக்கும் என்றும் தெரிந்தும் இந்திய நாட்டு நீதிமன்றங்கள் பாராமுகமாக இருக்கின்றன. வைகுண்ட ராசனின் கனிம வளக் கொள்ளை கடல் வாழ் பவளப்பாறைகளை பாதிப்புக்குள்ளாக்குகிறது என்பதற்கு ஆதாரம் இருந்தும் கூட இந்நாட்டு அமைப்பால் ஒரு மயிரையும் பிடுங்கி விட முடியவில்லை. ஆக இதில் இருந்து தெரிவது என்ன?
ஒருவர் தொழில்நுட்ப ரீதியான புகைப்படக் கலைஞராக இருந்தாலும் அதில் அவர் வல்லுநராக (professional expert) இருந்தாலும் அதைப் பயன்படுத்துகிற ஆளும் வர்க்கங்கள் தனக்குத் தோதான முறையில் தான் பயன்படுத்துகின்றன. இல்லையா? இதை ஏன் சொல்கிறோம் என்றால் புகைப்படக் கலை என்று வருகிற பொழுது தொழில்நுட்பம் அல்லது கலை என்ற பிரிவை முறைப்படி கற்காதவர்கள் அமெச்சூர் போட்டோகிராபர் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆனால் ஒருவர் அமெச்சூர் போட்டோகிராபரா அல்லது தொழில் முறை போட்டோகிராபரா என்பதை நிர்ணயிப்பது தொழில்நுட்பமோ, அவர் கற்ற திறமைகளோ அல்ல; இப்படிப்பட்ட கறாரான நிர்ணயமே இன்றைக்கு காலாவதியாக போயிருக்கிறது.
பச்சையப்பன் கல்லூரி மாணவர் போராட்டம்
இதே புகைப்படமும் காணொளியும் அதன் கலை என்னவென்றே தெரியாத நபர்கள் தான் மக்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர் .
சான்றாக, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடைபெற்ற பொழுது இந்த அரசமைப்பின் ஏவல் விலங்குகளான போலீசு கல்லூரி மாணவிகளை பூட்சுகாலால் மிதித்தது பரவலாக இணையத்தில் வந்தது. இந்தக் காணொளியும் புகைப்படமும் பல தொழில் முறை புகைப்படக் கலைஞர்களால் எடுக்கப்பட்டும் கூட அவர்கள் அதைப் பயன்படுத்தவில்லை. தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பவில்லை. ஆனால் இதே புகைப்படமும் காணொளியும் அதன் கலை என்னவென்றே தெரியாத நபர்கள் தான் மக்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவந்தனர் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? இவர்கள் அமெச்சூர் போட்டோகிராபர்கள் என்று சொல்லமுடியுமா?
இங்கு இரண்டு விசயங்கள் உண்டு! முதலில், கேமராவிற்கு முன்பாக வந்து நிற்பது அதைத் தாங்கி நிற்கிறவரின் அரசியல் நிலைப்பாடன்றி தொழில்நுட்பத் திறமையல்ல. இரண்டாவதாக, தொழில்நுட்பமாக இதைக் கற்றுத்தேர்ந்தவர்களும் தான் சார்ந்து நிற்கிற நிறுவனத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவர்கள் என்கிற பொழுது நாம் பார்க்கிற எந்தவொரு புகைப்படத்திற்கு பின்னரும் தனிநபர் சாந்திருக்கிற அரசியல் விருப்பும் அதை இயக்குகிற வர்க்க நலன்களும் இருக்கிறது இல்லையா?
அகதி சிறுவன்
அய்லான் குர்தியை புகைப்படம் எடுத்தவர் ‘தான் அழுதது’ போன்று இந்த உலகத்தின் பிற மக்களும் இதன் கொடூரத்தை உணரவேண்டும் என்று பேட்டியளித்தார்.
அதாவது நீங்கள் செல்போன் கேமராவை எடுத்துக் கொண்டு ஒரு விசயத்தை புகைப்படம் எடுக்கப்போகிறீர்கள் எனில் உங்களை இயக்கப் போவது உங்களின் அரசியல் நிலைப்பாடும் உங்கள் புகைப்படங்களை பயன்படுத்தப் போகிறவரின் அரசியல் நிலைப்பாடும்தான்.
இதற்கு சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம். மிகச் சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் அகதிகள் பிரச்சனை மிக ஆழமாக இணையத்தில் விவாதிக்கப்பட்டது. இது ஒரு இயக்கமாக போவதற்கு காரணம் துருக்கி நாட்டு கடற்கரையோரம் கரை ஒதுங்கிய மூன்றுவயது சிறுவன் அய்லான் குர்தியின் புகைப்படம்!
அய்லான் குர்தியை புகைப்படம் எடுத்தவர் ‘தான் அழுதது’ போன்று இந்த உலகத்தின் பிற மக்களும் இதன் கொடூரத்தை உணரவேண்டும் என்று பேட்டியளித்தார். ஆனால் இவரது புகைப்படம் அனைத்து ஊடகங்களிலும் வெளிவரவில்லை.
இங்கிலாந்தைப் பொறுத்தவரை அகதிகளின் நிலைப்பாடு அங்குள்ள வலதுசாரி பாசிச கும்பலால் இனவெறியாக முன்னெடுத்துச் செல்லப்பட்டது. இதில் அய்லான் குர்தியின் புகைப்படம் Mirror, Express, Mail போன்ற பத்திரிகைகளில் உடலை கட்டம் கட்டி மறைத்தும் Daily Star case பத்திரிகையில் உடல் சிதைக்கப்பட்டும் guardian, independent பத்திரிக்கைகளில் அப்படியே வெளியிடப்பட்டும் வந்தன.
இந்தியாவில் ஹிந்து பத்திரிக்கை அய்லான் குர்தியின் புகைப்படத்தை வெளியிட்டது. ஆனால் இதே ஒன்று ஈழத்தமிழர்கள் பிரச்சனை என்றால் அது எப்பொழுதுமே ஆளும் வர்க்க ஊதுகுழலாகத்தான் இருந்துவந்திருக்கிறது. முக்கியமாக இந்துராம் லங்கா ரத்னா அவார்டு வாங்கியவரும் கூட. இந்த எடுத்துக்காட்டு ஆளும் வர்க்கம், புகைப்படங்களை எப்படி பயன்படுத்துகிறது என்பதற்கு.
இரண்டாவது, புகைப்படக் கலைஞர்கள் எத்தகையவர்கள் என்று பார்ப்போம். ஆப்ரிக்க குழந்தையை கழுகு கொத்துவதற்கு வன்மத்துடன் நிற்கும் புகைப்படத்தை எடுத்தவர் புலிட்சர் விருது வாங்கியவர். பிற்காலத்தில் அப்புகைப்படம் எடுக்கும் நேரத்தில் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லையே என குற்ற உணர்ச்சியில் தற்கொலை செய்துகொண்டவர்.
போபால் விசவாயுப் படுகொலையில் ரகுராய் முதலாளித்துவ கொடூரங்களை கருப்பு வெள்ளையாக பதிவு செய்தவர். இதில் சிறுபிஞ்சின் சடலத்தை மண்ணைப்போட்டு மூடுவதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் உலகம் முழுவதையும் கவனிக்க வைத்தது.
வியட்நாம் நாப்தாம் குண்டுவீச்சு
வியட்நாம் நாப்பாம் குண்டுவீச்சு
1972-ல் நிக் வுட் அமெரிக்க ஏகாதிபத்தியம் வியட்நாம் மீது போட்ட நாப்பம் குண்டுகளின் கொடூரத்தை கிம் புக்கின் (அப்பொழுது 9வயது சிறுமி) நிர்வாணப் புகைப்படத்தின் மூலமாக கொண்டு வந்தார்.
ஈராக் புகைப்படக் கலைஞர் ஹென்னத் ஜெர்கே அமெரிக்கா இராக்கை நிர்மூலமாக்கியதிற்கு சாட்சியாக ஈராக்கிய சிப்பாயின் கருகிப்போன மண்டையை புகைப்படமாக எடுத்திருந்தார்.
மிகச் சமீபத்தில் ஓரி நூர், கார்டியன் இதழில் மேற்குக் கடற்கரையில் இஸ்ரேலின் அத்துமீறலைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் கேமராவை ரோல் செய்யுங்கள் என்று அறிவித்திருக்கிறார். ஏனெனில் பாலஸ்தீனம் ஆக்கிரமிக்கப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை அங்கு எண்ணிறந்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நஜி அல் அலியின் கல்லெறியும் ஹந்தாலா கேலிச்சித்திரங்கள் எப்படி இயேசுவைக்கூட கைகளை விடுவித்துக்கொண்டு இசுரேலிய ஆளும் வர்க்கத்தின் மீது கல்லெறிய வைத்ததோ அத்தகைய போராட்ட பாரம்பரியம் இன்றைக்கும் புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும் வந்துகொண்டிருக்கின்றன. இன்றும் பாலஸ்தீன சிறுவர்கள் இசுரேலிய சிப்பாயின் மீது கல்லெறிவதும், பாலஸ்தீனப் பெண்கள் ஆயுதம் வைத்திருக்கிற இசுரேலிய சிப்பாயை கடித்துவைக்கிற காட்சியும் கூட பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
ஈராக்கிய சிப்பாயின் கருகிப்போன உடல்
அமெரிக்கா இராக்கை நிர்மூலமாக்கியதிற்கு சாட்சியாக ஈராக்கிய சிப்பாயின் கருகிப்போன மண்டை.
ஆக தொகுப்பாக இங்கு நம் சவாலை நிறைவு செய்வோம். தைரியமான புகைப்படம் எடுத்துத் தர உங்களால் முடியும் என்றால் நாம் சார்ந்திருக்கிற அரசியல் நிலைப்பாடு என்னவென்று அறிந்துகொள்வோம். செல்போன் கேமரா வைத்திருப்பவர்கள் உங்கள் பங்களிப்பை நல்கலாம்.
இன்று நாம் வாழும் சமூகம் சலனமற்ற ஒன்றல்ல. ஒருவர் தொழில் முறை நிபுணராக இருந்தாலும் இன்றைக்கு அவர் தன்பாட்டுக்கு தன் வேலையுண்டு தன் குடும்பம் உண்டு என்று இருக்க இயலாது. மேலே சுட்டிக்காட்டியபடி புகைப்படக் கலைஞர்கள் எல்லாம் இத்தகையவர்கள் தான். இதையும் தாண்டி நாம் சார்ந்திருக்க சமூகத்தின் போராட்டங்களை பதிவு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.
ஆக உங்களது செல்போன் கேமிராவிற்கு வேலைதர வேண்டிய தருணம் இது. உங்களால் தைரியமான புகைப்படம் எடுத்துத் தர இயலுமா?
– இளங்கோ

கருத்துகள் இல்லை: