வெள்ளி, 9 அக்டோபர், 2015

ராதிகா பொங்கி எழுந்ததன் பின்னணி: திரைமறைவில் நடந்த சம்பவங்கள் அம்பலம்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக, நேற்று முன்தினம், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்தன. குறிப்பாக, சரத்குமார் அணிக்கு ஆதரவாக, நடிகை எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து, நடிகர் சங்க வட்டாரத்தில் விசாரித்ததில், கிடைத்த தகவல்கள்:
* 'தேர்தலில் போட்டி வேண்டாம்; இரு தரப்பினரும் சுமுகமாக பேசி தீர்வு காணலாம்' என, விஷால் அணியில் உள்ள முக்கிய நடிகர்கள் மற்றும் மூத்த நடிகர்களிடம் ராதிகா பேசினார்; ஆனால், யாரும் அதற்கு சம்மதிக்கவில்லை.
* அதனால், நிருபர்கள் சந்திப்பு மூலம், தன் கருத்தை விஷால் அணிக்கு தெரிவிக்க, ராதிகா முடிவு செய்தார். இதுகுறித்து, தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணுவுக்கு தகவல் தெரிவித்தார். அதற்கு முன் சினிமா சங்கங்களின் கூட்டு குழு கூட்டம் நடக்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார      நடிகர் சங்க கட்டிட கோவில் கும்பாபிஷேக செலவு 4.5 லட்சம் பின்பு அதே கோ்விலை இடிக்க, 2.5 லட்சம் செலவு


* உடனே, தாணுவின் ஏற்பாட்டில், சென்னையில், சினிமா சங்கங்களின் கூட்டு குழு கூட்டம் நடந்தது. 'தேர்தல் நடந்தால், நடிகர்களிடம் பிளவு ஏற்படும். இது யாருக்கும் நல்லது அல்ல. இரு அணியினரையும் வரும், 10ம் தேதி, அழைத்து பேசி தேர்தல் இல்லாமல் நிர்வாகிகளை நியமிக்கலாம்' என, இதில் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு சரத்குமார் அணிக்கு ஆதரவாக இருந்தது.
* இத்தகவல் விஷால் அணிக்கு தெரிவிக்கப்பட்டது. 'தயாரிப்பாளர் சங்க தேர்தல், நீதிமன்றம் வரை சென்று நடந்தது; தேர்தலுக்கு பிறகு, தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக தான் உள்ளனர். அதுபோல், நடிகர்களும் தேர்தலுக்கு பின், ஒற்றுமையாக இருப்பர். இதுபற்றி, தயாரிப்பாளர்கள் கவலைப்பட வேண்டாம்' என, விஷால் அணியினர் திட்டவட்டமாக கூறி விட்டனர்.
* இதன்பின், தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள சரத்குமார் விசுவாசி ஒருவர், ராதிகாவிடம் பேசினார். 'நீங்கள் கூறியபடி, கூட்டு குழு கூட்டம் நடந்தது; அதில் எடுக்கப்பட்ட முடிவை விஷால் அணி ஏற்கவில்லை. தற்போதைய நிலை நீடித்தால், விஷால் அணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. எனவே, நீங்களே முடிவு எடுத்து கொள்வது தான் சிறந்த வழி' என, தெரிவித்தார்.
* இதன் பிறகே, ராதிகா தரப்பில் நிருபர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ராதிகாவும், நடிகர் சிம்புவும் தங்கள் ஆத்திரத்தை கொட்டினர். ராதிகா, 'விஷால் ரெட்டி' என, ஜாதியை குறிப்பிட்டு பேசினார். சிம்புவோ, 'ராதாரவி இவர்களை, நாய் என, திட்டியதாக கூறப்பட்டது. நரி என, கூறியிருக்க வேண்டும்' என்றார். மேலும், விஷாலை, ஒருமையில், 'நீ, அவன்' என, சிம்பு பேசியது விஷால் அணியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
* சினிமா சங்கங்களை சேர்ந்த பலரும், விஷால் அணியினரை தொடர்பு கொண்டு, 'தேர்தலில் இருந்து வாபஸ் பெற வேண்டாம்' என, வலியுறுத்தினர்.
* இதன் பிறகே, விஷால் அணி சார்பில், 'பாண்டவர் அணி' என்ற பெயரில், சினிமா கூட்டுக்குழு கூட்டத்தின் முடிவுகளை விமர்சித்து அறிக்கை வெளியிடப்பட்டது.இவ்வாறு நடிகர் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து விஷால் அணியினர் கூறியதாவது:சரத்குமார் அணி சார்பில், வரும், 11ம் தேதி நடக்க உள்ள தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் தான், அவர்கள் இஷ்டத்திற்கு பேசுவர் என்றிருந்தோம். ஆனால், தேர்தல் பயத்தில் முன்கூட்டியே அவர்கள் மனம் திறந்து பேசியதால், அவர்கள் யார், எப்படிப்பட்டவர்கள் என்பதை முழுமையாக நன்கு அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இது, எங்களுக்கு நல்லதாகத் தான் அமையும்.நடிகர் சங்க நல விரும்பிகளாக தங்களை காட்டிக் கொள்ளும் ராதிகாவும், சிம்புவும், திடீரென மனம் திறந்து பேசியதன் விளைவு, தேர்தல் முடிவில் தெரிய வரும்.இவ்வாறு விஷால் அணியினர் கூறினர்.

பின்னணியில் இருப்பது யார்:'




பிரபல அரசியல் குடும்பத்தை சேர்ந்தவரும், இளம் நடிகருமான ஒருவர் தான் விஷால் அணிக்கு ஆதரவாக செயல்படுகிறார்; செலவுகளை பார்த்து கொள்கிறார்' என, தகவல்கள் கசிந்தன.

ஆனால், நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர், 'எங்களால் முடிந்த நியாயமான செலவுகளை செய்து வருகிறோம். அரசியல் முக்கியத்துவம் உள்ளவர்களால், எந்த உதவியும் செய்யப்படவில்லை. எதிர் அணியினர் பரபரப்பை ஏற்படுத்த, இஷ் டத்திற்கு தவறாக பேசி வருகின்றனர்' என்றனர்.

தேர்தல் அறிக்கை தயாரிக்க திணறல்:



'விஷால் அணியின் தேர்தல் அறிக்கையில், புதிய கட்டடம் உட்பட, 42 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றை தாண்டி, வேறு எதையும் புதிதாக அறிவிக்க முடியாது. அப்படி அறிவித்தாலும், நம்பும்படியாக இருக்காது' என, சரத்குமார் அணிக்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருதுகிறது.

எனவே, தேர்தல் அறிக்கையை தயார் செய்வதில் திணறி வருகிறது. தற்போது வரை, தேர்தல் அறிக்கை முழு வடிவம் பெறவில்லை என, கூறப்படுகிறது.


சந்தேகம் தரும் சங்க செலவுகள்:



நடிகர் சங்க செலவுகள் குறித்து விஷால் அணியினர் பல சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
* சினிமாவுக்கு சேவை வரி விலக்கு அளிக்க கோரி, நடிகர், நடிகையர் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதற்கு, 12 லட்சம் ரூபாய் செலவாகி உள்ளதாக எழுதப்பட்டுள்ளது
* இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க நடந்த உண்ணாவிரதத்திற்கு, 5.5 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது
* நடிகர் சங்க வளாகத்தில் உள்ள கோவில் கும்பாபிஷேகத்திற்கு, 4.5 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது
* அந்த கோவிலை இடிக்க, 2.5 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது
* நடிப்பு பயிற்சி அளிக்க, பல லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இவ்வளவு தொகை செலவாகியிருக்குமா என, விஷால் அணியினர் சந்தேகத்தை கிளப்பியுள்ளனர்.   தினமலர்.com

கருத்துகள் இல்லை: