புதன், 7 அக்டோபர், 2015

கடுமையான வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் வழக்கறிஞர் தொழிலுக்கு வர தடை! உயர்நீதிமன்றம்....

சென்னை:'கிரிமினல்கள், பயங்கரவாத சக்திகள், வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள், வழக்கறிஞர் தொழிலுக்கு வர, தடை விதிக்கும் வகையில், புதிய சட்டப் பிரிவு அல்லது சட்ட திருத்தம் கொண்டு வர, மத்திய அரசீலிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குற்றப் பின்னணி உடையவர்கள், வழக்கறிஞர் தொழிலுக்கு வருவதை தடுக்க, நடவடிக்கை எடுக்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், ஆனந்த முருகன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.இம்மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:
குற்றப் பின்னணி உடையவர்கள், சட்டத்தில் பட்டம் பெற்று, வழக்கறிஞர் எனக் கூறிக்கொண்டு, கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட, குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக, செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இவர்களால், உன்னதமான வழக்கறிஞர் தொழிலின் புகழ் கெடுகிறது. வழக்கறிஞர் சங்கங்களின் தலைவர்கள் என, கூறிக்கொள்பவர்கள், இந்த தீய சக்திகளை பாதுகாக்கின்றனர்; உதவுகின்றனர். சட்டம் மற்றும் பார் கவுன்சில் விதிகளில் உள்ள ஓட்டைகளை சாதகமாக்கி, கிரிமினல்கள் வழக்கறிஞர் தொழிலில் நுழைந்து விடுகின்றனர்.சென்னையில் நடந்த கருத்தரங்கில், இந்திய பார் கவுன்சில் தலைவர் பேசும்போது, 'வழக்கறிஞர்களில், 30 சதவீதம் பேர் போலிகள்' என்றார். எனவே, கீழ்க்கண்ட உத்தரவுகளை, இந்த நீதிமன்றம் பிறப்பிக்கிறது.
* கிரிமினல்கள், வழக்கு நிலுவையில் உள்ளவர்கள், வழக்கறிஞர் தொழிலுக்கு வருவதை தடுக்கும் விதத்தில், வழக்கறிஞர்கள் சட்டத்தில் திருத்தம் அல்லது புதிய சட்டப் பிரிவை கொண்டு வர, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்
* சட்டம் படித்தவர்களின் சொந்த ஊர் மற்றும் படித்த ஊரில் உள்ள போலீஸ் நிலையங்களில் இருந்து, பின்னணி சரிபார்ப்பு சான்றிதழ் பெறும்படி, மாநில பார் கவுன்சில்களுக்கு, இந்திய பார் கவுன்சில் உத்தரவிட வேண்டும்
* ஜாமினில் வரக்கூடிய, மூன்று ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கக் கூடிய குற்ற வழக்குகள், குடும்ப பிரச்னை மற்றும் சிவில் தகராறுகள் தவிர்த்து, மற்றபடி கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தால், அவர்களை பார் கவுன்சிலில் பதிவு செய்யக்கூடாது என, இந்திய பார் கவுன்சில் உத்தரவிட வேண்டும்
* ஜாமினில் வரக்கூடிய மற்றும் மூன்று ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கக் கூடிய குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்களை, தற்காலிகமாகவே, பார் கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு என, தனி பதிவேடு பராமரிக்க வேண்டும்
* வழக்கில் தீர்ப்பு வெளியான பின், தீர்ப்பின் நகலோடு, பார் கவுன்சிலுக்கு தெரிவிக்கவில்லை என்றால், 'நோட்டீஸ்' அனுப்பி, தற்காலிக பதிவை ரத்து செய்ய வேண்டும்
* சிறு குற்றங்கள் தவிர்த்து, மற்றபடி கிரிமினல் வழக்குகளில் ஈடுபட்டவர்களை, சட்ட கல்லுாரிகளில் சேர்க்க கூடாது என, இந்திய பார் கவுன்சில் உத்தரவிட வேண்டும்
* கிரிமினல் வழக்கில், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தால், அவர்களை, பார் கவுன்சிலில் பதிவு செய்யக் கூடாது
* துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணி நீக்கம் செய்யப்பட்டவரை அல்லது பணியில் இருந்து விலகியவரை, பார் கவுன்சிலில் பதிவு செய்ய அனுமதிக்க கூடாது
* சட்டப் படிப்பில் சேர்ப்பதற்கு முன், கண்டிப்பாக போலீசிடம் இருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கும்படி, சட்ட கல்லுாரிகளுக்கு, இந்திய பார் கவுன்சில் உத்தரவிட வேண்டும்
* ஜாமினில் வரக்கூடிய வழக்குகள், மூன்று ஆண்டுகள் வரை, தண்டனை பெறக்கூடிய வழக்குகள் தவிர்த்து, மற்றபடி குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பவர்களை, சட்ட கல்லுாரியில் சேர்க்கக் கூடாது
* மாநில பார் கவுன்சில்களிடம் இருந்து கோரிக்கை வந்த, மூன்று வாரங்களில், போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ் வழங்கும்படி, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு உத்தரவிட வேண்டும்
* உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தபடி, வழக்கறிஞராக பதிவு செய்வதற்கு முன், மத்திய அரசு பயிற்சி அளிக்க வேண்டும்* வழக்கறிஞர்கள் சட்டம், பார் கவுன்சில் விதிமுறைகளை ஆய்வு செய்யும் வரை, இந்திய பார் கவுன்சிலின் செயல்பாடுகளை, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமையிலான குழுவிடம், ஆறு மாதங்களில் ஒப்படைக்க, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்
* பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட, 20 ஆண்டுகள் வழக்கறிஞர் அனுபவம் அல்லது மூத்த வழக்கறிஞர், கிரிமினல் வழக்கு, பின்னணி இல்லாதவர்கள் என, தகுதி நிர்ணயிக்காமல், பார் கவுன்சிலுக்கு தேர்தல் நடத்தக் கூடாது
* சட்டக் கல்லுாரிகளின் எண்ணிக்கையையும், இடங்களின் எண்ணிக்கையையும், கணிசமாக குறைக்க வேண்டும்
* மூன்று ஆண்டு சட்டப் படிப்பை, ரத்து செய்ய வேண்டும். மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு இணையாக, ஐந்து ஆண்டு சட்டப் படிப்பு மட்டுமே இருக்க வேண்டும்
* கடந்த, 20 ஆண்டுகளில், வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை, வாபஸ் பெறும்படி, பார் கவுன்சிலுக்கு, இந்திய பார் கவுன்சில் உத்தரவிட வேண்டும். பழமையான சங்கங்கள் தவிர்த்து, ஒரு நீதிமன்றத்துக்கு, ஒரு சங்கம் என, இருக்க வேண்டும்.
வழக்கறிஞர் தொழிலில், கிரிமினல் மயம் துவங்கி, காட்டு தீ போல் பரவி வருகிறது. இதன் மூலம், உன்னதமான தொழிலின் புகழ் அழிந்து வருகிறது. கடந்த, 30 ஆண்டுகளில், வழக்கறிஞர் தொழிலின் தரம் குறைந்து விட்டது.

அடிப்படை தகுதி பெறாமல், வகுப்பில் பங்கேற்காமல், சட்டப் படிப்பு களை விலைக்கு வாங்கி, கிரிமினல்களும், ஜாதிய, பயங்கரவாத சக்திகளும், வழக்கறிஞர் தொழிலில் நுழைந்து விடுகின்றனர்.அவர்கள், நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதோடு, நீதிமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் மோசமாக நடந்து கொள்வதன் மூலம், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ய முயற்சிக்கின்றனர். இவர்களுடன், சங்கங்களின் தலைவர்களும், பார் கவுன்சில் உறுப்பினர்கள் பலரும் இணைந்திருப்பது, துரதிருஷ்டவசமானது.

இத்தகைய நடவடிக்கைகளை தடுக்கவில்லை என்றால், கிரிமினல் சக்திகளின் விருப்பத்துக்கு ஏற்ப, நீதிமன்ற நடவடிக்கைகள் இயங்கும் நாள், வெகு துாரத்தில் இல்லை. எனவே, குற்றப் பின்னணி, தீவிரவாத சிந்தனைவாதிகள், ஆட்கள் பலம் கொண்டவர்களின் பிடியில் இருந்து, வழக்கறிஞர் தொழிலை மீட்க, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், நீதி பரிபாலன முறையில் அக்கறை கொண்டவர்களை, நீதி தேவதை மன்னிக்க மாட்டாள்.
இவ்வாறு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார். தினமலர்.com

கருத்துகள் இல்லை: